அமுதமொழி – சுபகிருது – மார்கழி– 21 (2023)


பாடல்

திறம் சொல்வர் சகல கலை சேதி எல்லாம் 
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமும் சொல்வார்
பரம் சொல்வார் பரபரத்தின் பதிவும் சொல்வார் 
பதிவாக மவுனமதின் திறமும் சொல்வார் 
நிறம் சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார் 
நெஞ்சங்கள் தான் வலுக்க நிதியும் சொல்வார் 
கரம் சொல்வார் காயாதி கற்பம் சொல்வார் 
கண்மணியே மனதுவரக்  கருதிக்கேளே!

அகஸ்தியர்

கருத்துஞானி என்று சொல்லக்கூடிய மௌனகுரு வாய்க்க பெற்று அவருக்கு தொண்டு செய்யும் புண்ணியம் வாய்க்க பெற்றால் கிடைக்கும் பேறுகள் எவை உரைக்கும்  பாடல்.

பதவுரை

ஞானி என்று சொல்லக்கூடிய மௌனகுரு வாய்க்க பெற்று அவருக்கு தொண்டு செய்யும் புண்ணியம் வாய்க்க பெற்றால் அவர்கள் புலமை மிக்க உரைகளை உரைப்பார்கள்; இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூச்சின் வகைகளையும், அவை ஒவ்வொரு திதியில் செய்யப்பட வேண்டிய முறையினையும் உரைப்பார்கள்; முடிவான மௌனத்தின் பெருமைகளை உரைப்பார்கள்; பிறவி நீக்கம், மோட்சம் போன்றவற்றை உரைத்து மேலான கடவுளின் தன்மைகளை உரைப்பார்கள்; பராபரம் ஆகிய இறைவனின் பெருமைகளை உரைப்பார்கள்; இறையின் அருள் நிலை குறித்தும் உரைப்பார்கள்; எழுத்துக்கள், அவற்றின் தன்மைகள், மந்திரங்கள் மற்றும் அதை அடையும் முறைகள் ஆகியவற்றை தன் குரு உபதேசம் செய்த வகையில் உரைப்பார்கள்; வறுமையால் துன்பம் கொண்டவர்களின் வறுமை நீங்க அதற்கான வழிமுறைகளையும் உரைப்பார்கள்; உடல் கெடாமல் இருக்கும் கற்ப மூலிகைகளை உரைத்து அதை கொள்ளும் முறைகளையும் உரைப்பார்கள். ஆகவே இதனை மனதினை நிலைப்படுத்தி கேட்பாயாக.

விளக்க உரை

  • ஞானியர்களிடத்தில் குறையாகக் காண்பவை யாவும் உண்மையில் குறை ஆகாமை என்பதை உணர்த்தும்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #அகஸ்தியர் #சித்தர்கள் #சித்தர்_பாடல்கள் #கரம் #பரம் #மௌனம் #கற்ப_மூலி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – மார்கழி– 19 (2023)


பாடல்

பிறையுட் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
`நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துமெய்யறிவு அற்றவர்களின் மனப்பாங்கினை உரைக்கும்  பாடல்.

பதவுரை

`சந்திரனிடத்து உள்ள முயலையாம் வெட்டுவோம்` என்று சொல்லி, ஒலிக்கின்ற மணிகட்டியுள்ள வாளையெடுத்து உயர உயர வீசுபவர் போல, அறிவில்லாதவர் நீல மணிபோலும் கறுத்த கண்டத்தையுடைய சிவனை அடையும் நெறியை உணர மாட்டாமலே தாமே மெய்ப்பொருளை முற்ற அறிந்த நிரம்பிய ஞானிகள் போலத் தாம் அறிந்தன சிலவற்றைக் கூறி உண்மை ஞானியரை இகழ்வர்.

விளக்க உரை

  • ஞானியர்களிடத்தில் குறையாகக் காண்பவை யாவும் உண்மையில் குறை ஆகாமை என்பதை உணர்த்தும்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #பத்தாம்_திருமுறை  #திருமந்திரம் #திருமூலர் #திருமுறை  #எட்டாம்_தந்திரம் #புறங்கூறாமை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – மார்கழி– 18 (2023)


பாடல்

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சூலை நோய் தீர்க்கவேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

அதிகைக் கெடில வீரட்டானத்துறையில் இருக்கும் அம்மானே, மனம், மொழி காயத்தால் உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லவரே, உலகங்களைப் படைத்து அனுபவித்தவனாகிய பிரம்மனின்  மண்டையோட்டில் யாசகம் ஏற்றுத் திரிபவரே, உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை வினை நீக்கம் பொருட்டு அவர்களின் எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே, காளையை விரும்பி அதனை வாகனமாக் கொண்டவரே, இறந்த பிரம்மாக்களின் தலையை வெண்தலைமாலையாக  அணிகின்றவரே! உம்மையே பரம்பொருளாக எண்ணி உமக்கு அடிமை செய்து  வாழக்கருதுகின்ற அடியேனை துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

விளக்க உரை

  • பாற்றம் , பாத்தம் –  விஷயம், தரம்
  • படு – கிட, இளைப்பாறு, அனுபவி, சகி
  • பெற்றம் – ஆடு, மாடுகள், கால்நடைகள்

#அந்தக்கரணம் #அமுதமொழி #நான்காம்_திருமுறை #திருமுறை #தேவாரம்  #திருநாவுக்கரசர் #திருவதிகை_வீரட்டானம் #நடுநாட்டுத்_தலங்கள் #நடுநாடு #வெண்ணீறு #பலி #நீறுபூசியமேனி #சைவத்_திருத்தலங்கள் #பாடல்_பெற்றத்_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – மார்கழி– 17 (2023)


பாடல்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

மூதுரை – ஔவையார்

கருத்து – நல்லவர்களைப் பற்றி உரைத்து அவர்களுடன் இருத்தல் நன்மையைத் தரும் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

மனம், வாக்கு காயத்தால் நற்குணம் உடையோரை கண்ணினால் காண்பதும் நல்லதே;  நல்லவர்களிடம் இருந்து பயன் நிறைந்த சொல்லை கேட்டலும் நல்லதே;  அவ்வாறான நல்லவருடைய நல்ல குணங்களை பேசுதலும் நல்லதே; அந்த நல்லவர்களுடன் கூடியிருத்தலும் நல்லதே.

விளக்க உரை

  • ‘நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ’ எனும் பட்டினத்தார் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – ஐப்பசி – 6 (2022)


பாடல்

போகாமல் நின்ற தோரையா நீதான்
பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
ஆகாம லானந்த வல்லி யாலே
அடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத் தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே

இராமதேவர் – பூஜாவிதி

கருத்து – இராமதேவர் அன்னையை வழிபடும் முறையை தேரையருக்கு உரைத்த பாடல்.

பதவுரை

செய்த பூசைகளின் வழியில் நின்று அதை வீண் செய்யாமல் காத்த தேரையனே, பூரணத்தை தரும் ஐந்து கலைகள் ஆகிய  நிவர்த்தி கலை (பலன் தருதல்), பிரதிட்டை கலை (மந்திரம் நிலை நிறுத்துதல்), வித்தை கலை (சக்தி பெருக்குதல்), சாந்தி கலை (அமைதி அளித்தல்) சாந்தியாதீதம் கலை (ஒலி கேட்டல்) ஆகியவற்றை பெற்று, ஆனந்தவல்லியின் துணையுடன் பாதம் முதல் தலை வரை வாசியினை ஆறு ஆதாரங்களிலும் நிலை பெறச் செய்து, வாலையின் மூலத்தினை ஓதி, அதனால் தோன்றும் (தச தீட்சையில் பெறப்படும் ஒலி)  ஒலியினை மௌனமாக மனதுக்குள் உரைக்க வேண்டும். பிறவாமையைத் தருவதும், மழையினைப் போல் அருளைத் தரும் ஆனது இந்த 42 கோணங்களுடன் கூடிய தனிக்கோணமான 43வது கோணம். இதுவே அன்னை வீற்றிருக்கும் இடமாகும்.

விளக்க உரை

  • சசி – கற்பூரம், கடல், மழை
  • ‘ஐந்து கலையில் அகராதி தன்னில்’ எனும் திருமந்திரப்பாடலும், ‘தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை’ எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • ‘போகாமல் நின்றதோர் ஐயா’ என்று சில இடங்களில் காணப்படுகின்றது.

சித்தர் பாடல் என்பதாலும், உணர்ந்து உணர்த்துவதிலும் பிழை இருக்கலாம். பிழை எனில் மானிடம் சார்ந்தது. நிறை எனில் குருவருள்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #இராமதேவர் #தேரையர் #சாக்தம் #சித்தர்_பாடல்கள் #பூஜாவிதி #வாலை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – ஐப்பசி – 2 (2022)


பாடல்

தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவார்
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும்
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவனின் அடியவர்கள் தாம் பெற்ற அனுபவத்தினை அனைவருக்கும் சென்று வழங்குவார்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் எனும் ஐந்து கோசங்களால் ஆனது இந்த உடல். தமிழ் உச்சரிப்பே மந்திரம் ஒலிப்பதை ஒத்ததாக இருக்கும். இவ்வாறு தமிழ் வேதாகமங்களில் கூறப்பட்ட ஞானத்தினை (பஞ்சாட்சரம், தூல பஞ்சாட்சரம், அதிசூக்கும பஞ்சாட்சரம் ) பெற்று தமிழ் மொழியை அறிந்தவர்கள் அதை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக உலகம் முழுவதும் செல்லுவர். அத்தகைய நல்லோர் சிற்றறிவை நீக்கி பேரறிவை தரும் மலர்ந்த மனமும், எம்முடைய ஆதியாக இருப்பவனைப் பற்றிய திருவடியுணர்வும் மேலே உரைத்த தமிழ் மண்டலம் ஐந்தும் செம்மையுறுதலின் பொருட்டே அவ்வாறு செய்கின்றனர்.

விளக்க உரை

சேர மண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்று சில இடங்களிலும், ஐந்து கண்டங்கள் என்று சில இடங்களிலும், பொருள் உரைக்கப்பட்டுள்ளது. தன்னை அறிந்தவர்களே மற்றவர்களை தலைப்படுத்த முடியும் என்பதால் இவைகள் விலக்கப்படுகின்றன.

ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – ஐப்பசி – 1 (2022)


பாடல்

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்

நல்வழி – ஔவையார்

கருத்து – பிறவிக்கு காரணம் நல்வினைகளும், தீவினைகளும் என்று உரைத்து அதனால் நன்மையைச் செய்ய வேண்டும் என்று கூறும் பாடல்.

பதவுரை

இந்த மண்ணில் பிறந்தவர்கள் வைத்திருக்கும் பொருள் எனும் செல்வமானது  முன்சென்ற பிறவிகளில் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டின் காரணமாக அமைந்தது. இவ்வாறு இருப்பதைத் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் (பாவ புண்ணிய கருத்தினைக் கொண்ட சமயங்கள்)  கருதிப் பார்த்துச் சொல்லுகின்றன.  எனவே தீமைகளை விலக்கிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகி பாவம் போய்விடும். இது அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 30 (2022)


பாடல்

செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்
சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை யுரிவை மூடி
மடவா ளவளோடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சிவனின் திருமேனிக் கோலத்தினை விளக்கும் பாடல்.

பதவுரை

இறந்த பிரம்ம தேவர்ளை தலைமாலையாக கையில் எடுத்து தலையில் சூடியவனும், சிவந்த நிற மேனியில் பெரிய தலையை உடைய யானை உரித்து அதன் தோலைப் போர்த்தியவனும், பார்வதி தேவினையை பாகமாக உடையவனும், மானை தன் கையில் ஏந்தியவனும், ஆறுநூறாயிரத்து அறுபது தேவர்கள் தம் கூத்தினைக் காணுமாறு அருள் செய்தவனும், புலித்தோலை இடையில் கட்டியவனும், கையில் புத்தகம் ஒன்றினை ஏற்று குருக் கோலத்தில் எம்பெருமான் புறம்பயம் நம் ஊர் என்று போயினார் .

விளக்க உரை

  • அத் தவத்த தேவர் – அந்தத் தவம் உடைய தேவர்
  • தேவர் அறுபதின்மருக்கும் – ஆறுநூறாயிரவர்க்கும் ஆடல் காட்டினமை இத்தலத்துள் நிகழ்ந்தது எனக் கொள்ளலாம்.
  • புத்தகம் கைக்கொள்ளல் – ஆசிரியக்கோலம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 22 (2022)


பாடல்

திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ

எட்டாம் திருமுறை – திருவாசகம் – திருக்கோவையார் – திருத்தெள்ளேணம் – மாணிக்க வாசகர்

கருத்துசிவன் தனக்கு அருளிய முறையினை உரைக்கும்  பாடல்.

பதவுரை

திருப்பெருந்துறையில் எழுந்து அருளும் சிவ பெருமான் என் பிறவியையும், அதற்கு காரணமான பாசத்தினையும் வேரறுத்தபின் யான் அவனையன்றி வேறொருவரையும் கண்டதில்லை. அருவ வடிவமாகவும் உருவ வடிவமாகவும் நின்ற அந்த இறைவன் எழுந்தருளி இருக்கிற திருவாரூரைப் புகழ்ந்து பாடி நாம் கை தட்டி பாடும் விளையாட்டாகிய தெள்ளேணம் கொட்டுவோம்.

விளக்க உரை

  • ஓர் இடத்திருந்து பாடும்போது, முன்பு தாம் கண்டு வணங்கிய இடத்திலும், வணங்க நினைக்கும் இடத்திலும் உள்ள பெருமானது கோலத்தை நினைந்து பாடுதல் அடியவர்க்கு உண்டான இயல்பு. ‘திருவாரூர் பாடி’ ‘திருக்கோவையுள்ளும்’ என்பது அவ்வாறே குறிக்கப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 21 (2022)

பாடல்

புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவ னீசனை யேயெனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துஎம்பெருமான் ஈசனின் திருமேனியினையும், அவன் ஆயுதங்களையும், குணங்களையும் கூறும்  பாடல்.

பதவுரை

அலங்கரிக்கப்பெற்ற பொன்னாலாகிய சூலத்தினை உடையவனும், போர்செய்யும் ஆற்றலோடுகூடிய இடபத்தினை ஊர்தியாக கொண்டவனும், இரு வினைகளை இயல்பாகவே நீங்கப் பெற்றவனும், நாகத்தைப் பூண்டவனும், வெண்மையான மழுவினை ஆயுதமாக  உடையவனும், நினைப்பதற்கு உரிய அடியவர்கள் ஈசனே என்று நினைய நின்றவனும், வினையை நீங்கியவர்கள் ஆகிய மேலோர்களால் தொழப்படும் இறைவன் இருக்கும் இடம் வீழிமிழலை.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 20 (2022)


பாடல்

அறிவெனில் வாயில் வேண்டா அன்றெனில் அவைதாம் என்னை
அறிவதை உதவு மென்னில் அசேதனம் அவைதா மெல்லாம்
அறிபவன் அறியுந் தன்மை அருளுவன் என்னி லான்மா
அறிவில தாகும் ஈசன் அசேதனத் தளித்தி டானே

சிவப்பிரகாசம் – மூன்றாம் சூத்திரம் – ஆன்ம இலக்கணம் – உமாபதி சிவம்

கருத்துஆன்மா அறிவுடைப் பொருள் என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

ஆன்மாவானது தானாக அனைத்தையும் அறிய இயலும் எனில் அதற்கு இந்திரியங்கள் தேவை இல்லை; அதுபோலவே ஆன்மாவிற்கு அறியும் தன்மை இல்லை எனில் இந்திரியங்கள் எதன் பொருட்டு அதனுடன் இணைத்து படைக்கப்பட்டு இருக்கின்றன; இந்திரியங்கள் சடமாவதால் ஆன்மாவுக்கு அறிவை கொடுக்காது;  அனைத்தையும் அறிகின்ற ஈசன் ஆன்மாவுக்கு அறியும் தன்மையைக் கொடுப்பார் எனில்  ஆன்மா இயற்கையில் அறிவில்லாத சடப் பொருளாக இருக்க வேண்டும். ஏனெனில் ஈசன் அறிவில்லா சடப்பொருளாக இருக்க வேண்டும்; ஏனெனில் சிவன் இயல்புக்கு மாறாக  உயிறற்ற பொருள்களுக்கு  உயிர் தன்மையை அருள மாட்டார். எனவே ஆன்மாவானது இயற்கையில் அறிவுடைய பொருள் ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 19 (2022)


பாடல்

தாமரையி னிலையினிலே தண்ணீர் தங்காத
தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்
தூமணியாம் விளங்கிய சோதி பதத்தைத்
தொழுது தொழுதுதொழு தாடாய்பாம்பே

சித்தர் பாடல்கள் – பாம்பாட்டி சித்தர் –  அகப்பற்று நீக்கல்

கருத்துஉலகியலை விடுத்து சிவத்தினை நாட அறிவுறுத்தும்  பாடல்.

பதவுரை

பாம்பே! தாமரை இலையின் மேல் தண்ணீரானது இருப்பினும் அதன் மேல் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கக் கூடிய தன்மையைப் போல் இந்த உலகில் வாழ்ந்தாலும் உலகப் பற்றினை நீக்கி,  முத்தினைப் போல் பிரகாசிக்கும் தன்மை உடைய சோதியின் பதத்தை தொழுது தொழுது ஆடுவாயாக.

விளக்க உரை

  • பாம்பு – மனம் எனக் கொள்ளலாம்.
  • தொழுது தொழுது – இருவினை ஆகிய நல்வினை தீவினை நீக்கம் பெறுதல் குறித்து இருமுறை உரைக்கப்பட்டது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 26 (2022)


பாடல்

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்

கொண்டாட்டம் ஏதுக்கடி – குதம்பாய்

கொண்டாட்டம் ஏதுக்கடி ?

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்

கோலங்கள் ஏதுக்கடி – குதம்பாய்

கோலங்கள் ஏதுக்கடி ?

அருளியச் சித்தர் : குதம்பைச் சித்தர்

கருத்துஅகக்கண் கொண்டு கண்டவர்களுக்கு புறத்தில் கொண்டாட்டங்களும், புறத் தோற்ற அழகு செய்தலும் எதற்காக என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குதம்பை எனும் ஆபரணத்தை காதில் அணிந்தவளே! ஞானத்தினால் மெய் உணர்வு கொண்டு நாம் காணும் போது நம்மைக் கண்டு அருளுபவரை அகக் கண் கொண்டு அதில் ஒன்றி கருத்தோடு இருப்பவர்களுக்கு புறக் கொண்டாட்டங்கள் எதற்காக? காலன் எனும் எமனை வெல்லக்கூடிய கருத்தினை கொண்டு அவனை வெல்லக்கூடியவர்களுக்கு புறத்தினால் அமையப்பெறும் கோலங்கள் எதற்காக?

கண்டாரை நோக்குதல், கருத்தோடு இருத்தல், காலனை வெல்லுதல் போன்றவை மிகவும் சூட்சமமானவை. இவைகள் குரு மூலமாக உபதேசம் செய்யப்பட்ட முறைகளுடன் செய்யப்பட வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 25 (2022)


பாடல்

அறிவறி வென்ற அறிவும் அனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பறுந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துஊழினால் அடையக் கூடிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

உலகத்தாரால் அறிவு கொண்டவை என்று சொல்லப் படுவதாகிய உயிர்களும் அனாதியாக இருக்கின்றன; அவற்றின் மெய் அறிவுக்கு காரணமாக உள்ள பேரறிவு கொண்ட இறைவனும் அனாதியாக இருக்கின்றான்; அறிவாகிய உயிர்களைக் கட்டியுள்ள பாசங்களும் அனாதியாக இருக்கின்றன; ஆயினும் உயிர்களிடத்து அன்புகொண்டு அனாதியாகிய இருக்கும் சிவனது ஞான சத்தி உயிரினிடத்தின்  ஒன்றும் போது  உயிரின் பிறவித்தொடர்ச்சி அறும்.

விளக்கஉரை

  • அனாதி –  ஆதியும், அந்தமும் இல்லாதது.
  • ஞானம் நிகழப் பிறப்பறும் என்பது பொருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 24 (2022)


பாடல்

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்

ஔவையார் – நல்வழி

கருத்துஊழினால் அடையக் கூடிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

அழகிய பூமியின்மேலே, மனதில் மாறுபாடு இல்லாமல் உண்மையாக வாழ்வதற்கு உரியாரை அழிக்கவல்லார் யாவர்? அது போல இறத்தலுக்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர்? ஒழிவு இல்லாமல் பிச்சைக்குச் செல்வோரை, தடுக்க வல்லவர் யாவர்?

விளக்கஉரை

  • ஓவாமல் – சளைக்காமல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 23 (2022)


பாடல்

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துஈசனே அனைத்துமாகி இருப்பதை உரைத்தும், அதன் பொருட்டு அரசனிடத்தில் பயம் கொள்ளமாட்டோம் எனவும் உரைக்கும் பாடல்.

பதவுரை

நிற்பன என்றழைக்கபடும் மனிதனாகவும், நடப்பன என்றழைகப்படும் மிருகங்களாகவும், நிலமாகவும், நீராகவும், நெருப்பாகவும் , காற்றாகவும், நீண்ட வானமாகவும் (பஞ்ச பூதங்கள்), மிகசிறிய அளவில் இருக்கக்கூடியதாகவும், பெருமை தரதக்கவனாகவும், அருமை உடையவனாகவும், தன்னிடத்தில் அன்பு கொண்டவர்களுக்கு மிகவும் எளியவனாகவும், அளக்க இயலாததான தற்பரம் ஆனவனாகவும், சதாசிவமும் ஆகித் தானும் யானும் ஆகின்ற தன்மையுடைய சிவ பெருமானாகவும் அவன் நன்மைகளையும்  பொலிவுடைய தன்மைகளையும் புகழ்ந்து பேசக் கடவோம்; அதனால் பிழையற்றவரன் ஆனோம். சிறந்த உணர்வு இல்லாமல்  அரசனுக்கு வணங்கி நின்று அவனுக்கேற்ப  தன்மை உடையவர்கள்  பேசுமாறுபோல யாம் பேசுவமோ?

விளக்கஉரை

  • பரம் – மேலான பொருள் 
  • தத்பரம் – உயிருக்கு மேற்பட்டது
  • சதாசிவம் – சதா சிவதத்துவம்
  • தானும்  யானும் – இறைவனது பொருள் தன்மையையும் கலப்பினையும் உணர்த்தியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 22 (2022)


பாடல்

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ!

அருளியச் சித்தர் : அழுகணிச்சித்தர்

கருத்துவாசி கொண்டு இறைவனை அடையும் வழியினைக் கூறும் பாடல்.

பதவுரை

கண்ணம்மா! (சூட்சமத்தினை குருமூலமாக அறிக)  புரவி எனும் வாசியினைப் போல் நில்லாமல் 12 அங்குலம் கொண்டு சென்று கொண்டிருகும் காற்றினை சுழிமுனை வாசலில் நிற்கச் செய்து, அதில் நான்கு அங்குல காற்றினை சுருக்கி, ஆன்ம தேசத்தை நம் சொந்தம் ஆக்கிகொள்ள முடியாதோ?

அட்டாள தேசம் என்பதனை எட்டு அங்குலம் உடைய தேகம் என்று கொண்டு உடல், மனம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவருதலை உரைப்பதாவும் கொள்ளலாம்.

ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

வாசி முறைகள் குரு பரம்பரையாக வருபவை. உபதேசிகப்படும் குருவுக்கு தக்கபடி எண்ணிக்கையும், முறையும் மாறுபடலாம் என்பதால் குரு முகமாக அறிதல் நலம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 7 (2022)


பாடல்

இருள் உதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருள் உதய நன்றாய் அருளி – மருள் உதயம்
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமும்
சாற்றிய ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – குருவே ஈசனாய் நின்று பாச நீக்கம் செய்து அருளிய திறத்தினை கூறும் பாடல்.

பதவுரை

ஆரூரில் உறைபவனும், பெரிய வேதங்களையும், ஆகமங்களையும் அறிவித்தவனாகிய ஞானப்பிரகாசனானவன், சூரிய ஒளியானது இருளைநீக்கும் தன்மையைப்போல் என்னுள்ளே அருள் தோற்றத்தினை தோன்றச்செய்து நன்றாய் அருளி அநாதிகாலம் தொட்டு தொடர்ந்து பெருகிவரும் பிறவியின் மயக்கம் மாற்றியவன்.

விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி.வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு
  • இருள் உதயநீக்கு – அருள்தோற்றம் பற்றிய கணத்தில் மருள்நீக்கம் முற்றிலும் நீங்காதவாறு சிந்தித்தல் தெளிதல் போன்றவற்றை முற்றிலும் நீக்கி எனும் பொருள் பற்றி நின்றது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 24 (2022)


பாடல்

ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே

அருளியச் சித்தர் : சிவவாக்கியர்

கருத்து – செல்வம் போன்ற இகலோக விஷயங்களில் மனதைச் செலுத்தாமல் தனக்கு மெய்வீட்டினை காட்டி அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

தாருகாவனத்து முனிவர்களின் ஆணவம் அழியச் செய்வதற்காக அவர்கள் செய்த யாகத்தில் இருந்து தோன்றிய யானையை   கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து பிட்சாண்டவர் வடிவம் கொண்டவனே! வலை விரித்து வேங்கைப் புலியை பிடிப்பதற்காக ஆட்டை கட்டி வைத்து பிடிப்பது போல இகலோக வாழ்வில் உழலச் செய்வதற்காக உறவுகள், செல்வம் போன்றவற்றைக் கொண்டு என்னுடைய மதியினை மயக்குதல் முறையோ? மெய்யான வீட்டை எனக்குக் காட்டி அந்த வழியிலே நிலைபெறுமாறு செய்து உன்னை அடையும் வழியைக்காட்டி என்னை வெளிப்படுத்த வேண்டும்.

விளக்க உரை

  • பதி, பசு, பாசம் என்ற சைவத்தின் மூன்று பெரும் பகுப்புகளில் மாடு எனும் பசுவானது அளவுக்கு உட்பட்டதாகிய ஜீவனைக் குறிக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 23 (2022)


பாடல்

நிலைகெட விண்ணதிர நிலம்
   எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
   யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
   கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
   தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துஉத்தமனாகிய ஈசன் அருளுவதன் பொருட்டு தானே கைலாச மலையில் இருந்து இறங்கிவந்து அருள் புரிந்த திறத்தை வியந்து உரைக்கும் பாடல்.

பதவுரை

திருக்கயிலைமலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனான உத்தமன், விண்ணுலகம் தனது இயல்பு நிலையில் இருந்து கெட்டு அதிரும்படியாகவும்,  நிலவுலகம் முழுதும் அதிரும்படியாகவும் மலையில் திரியும் யானை மீது ஏறி வந்து, தனது மலையாகிய கைலாச மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே வந்து, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணனை பூக்களைக் கொண்டு எல்லொருக்கும் முன்னரே வந்து வணங்குமாறு செய்து, உடல் அழியாது உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் என்னே!

Loading

சமூக ஊடகங்கள்