பாடல்
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்
நல்வழி – ஔவையார்
கருத்து – பிறவிக்கு காரணம் நல்வினைகளும், தீவினைகளும் என்று உரைத்து அதனால் நன்மையைச் செய்ய வேண்டும் என்று கூறும் பாடல்.
பதவுரை
இந்த மண்ணில் பிறந்தவர்கள் வைத்திருக்கும் பொருள் எனும் செல்வமானது முன்சென்ற பிறவிகளில் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டின் காரணமாக அமைந்தது. இவ்வாறு இருப்பதைத் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் (பாவ புண்ணிய கருத்தினைக் கொண்ட சமயங்கள்) கருதிப் பார்த்துச் சொல்லுகின்றன. எனவே தீமைகளை விலக்கிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகி பாவம் போய்விடும். இது அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும்.