அமுதமொழி – சுபகிருது – ஐப்பசி – 6 (2022)


பாடல்

போகாமல் நின்ற தோரையா நீதான்
பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
ஆகாம லானந்த வல்லி யாலே
அடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத் தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே

இராமதேவர் – பூஜாவிதி

கருத்து – இராமதேவர் அன்னையை வழிபடும் முறையை தேரையருக்கு உரைத்த பாடல்.

பதவுரை

செய்த பூசைகளின் வழியில் நின்று அதை வீண் செய்யாமல் காத்த தேரையனே, பூரணத்தை தரும் ஐந்து கலைகள் ஆகிய  நிவர்த்தி கலை (பலன் தருதல்), பிரதிட்டை கலை (மந்திரம் நிலை நிறுத்துதல்), வித்தை கலை (சக்தி பெருக்குதல்), சாந்தி கலை (அமைதி அளித்தல்) சாந்தியாதீதம் கலை (ஒலி கேட்டல்) ஆகியவற்றை பெற்று, ஆனந்தவல்லியின் துணையுடன் பாதம் முதல் தலை வரை வாசியினை ஆறு ஆதாரங்களிலும் நிலை பெறச் செய்து, வாலையின் மூலத்தினை ஓதி, அதனால் தோன்றும் (தச தீட்சையில் பெறப்படும் ஒலி)  ஒலியினை மௌனமாக மனதுக்குள் உரைக்க வேண்டும். பிறவாமையைத் தருவதும், மழையினைப் போல் அருளைத் தரும் ஆனது இந்த 42 கோணங்களுடன் கூடிய தனிக்கோணமான 43வது கோணம். இதுவே அன்னை வீற்றிருக்கும் இடமாகும்.

விளக்க உரை

  • சசி – கற்பூரம், கடல், மழை
  • ‘ஐந்து கலையில் அகராதி தன்னில்’ எனும் திருமந்திரப்பாடலும், ‘தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை’ எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • ‘போகாமல் நின்றதோர் ஐயா’ என்று சில இடங்களில் காணப்படுகின்றது.

சித்தர் பாடல் என்பதாலும், உணர்ந்து உணர்த்துவதிலும் பிழை இருக்கலாம். பிழை எனில் மானிடம் சார்ந்தது. நிறை எனில் குருவருள்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #இராமதேவர் #தேரையர் #சாக்தம் #சித்தர்_பாடல்கள் #பூஜாவிதி #வாலை

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *