பாடல்
அறிவறி வென்ற அறிவும் அனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பறுந் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – ஊழினால் அடையக் கூடிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
உலகத்தாரால் அறிவு கொண்டவை என்று சொல்லப் படுவதாகிய உயிர்களும் அனாதியாக இருக்கின்றன; அவற்றின் மெய் அறிவுக்கு காரணமாக உள்ள பேரறிவு கொண்ட இறைவனும் அனாதியாக இருக்கின்றான்; அறிவாகிய உயிர்களைக் கட்டியுள்ள பாசங்களும் அனாதியாக இருக்கின்றன; ஆயினும் உயிர்களிடத்து அன்புகொண்டு அனாதியாகிய இருக்கும் சிவனது ஞான சத்தி உயிரினிடத்தின் ஒன்றும் போது உயிரின் பிறவித்தொடர்ச்சி அறும்.
விளக்கஉரை
- அனாதி – ஆதியும், அந்தமும் இல்லாதது.
- ஞானம் நிகழப் பிறப்பறும் என்பது பொருள்.