அமுதமொழி – சுபகிருது – மார்கழி– 18 (2023)


பாடல்

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சூலை நோய் தீர்க்கவேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

அதிகைக் கெடில வீரட்டானத்துறையில் இருக்கும் அம்மானே, மனம், மொழி காயத்தால் உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லவரே, உலகங்களைப் படைத்து அனுபவித்தவனாகிய பிரம்மனின்  மண்டையோட்டில் யாசகம் ஏற்றுத் திரிபவரே, உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை வினை நீக்கம் பொருட்டு அவர்களின் எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே, காளையை விரும்பி அதனை வாகனமாக் கொண்டவரே, இறந்த பிரம்மாக்களின் தலையை வெண்தலைமாலையாக  அணிகின்றவரே! உம்மையே பரம்பொருளாக எண்ணி உமக்கு அடிமை செய்து  வாழக்கருதுகின்ற அடியேனை துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

விளக்க உரை

  • பாற்றம் , பாத்தம் –  விஷயம், தரம்
  • படு – கிட, இளைப்பாறு, அனுபவி, சகி
  • பெற்றம் – ஆடு, மாடுகள், கால்நடைகள்

#அந்தக்கரணம் #அமுதமொழி #நான்காம்_திருமுறை #திருமுறை #தேவாரம்  #திருநாவுக்கரசர் #திருவதிகை_வீரட்டானம் #நடுநாட்டுத்_தலங்கள் #நடுநாடு #வெண்ணீறு #பலி #நீறுபூசியமேனி #சைவத்_திருத்தலங்கள் #பாடல்_பெற்றத்_தலங்கள்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply