அமுதமொழி – சோபகிருது – வைகாசி – 11 (2023)


பாடல் 2

உரிப்பொருள் : பிரபஞ்ச மாய சேற்றினை விலக்கி அருளிய திறம்

மூலம்

பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே

சொற் பிரிப்பு

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே

பதவுரை

குமரப் பெருமானே! அடர்ந்ததும்,  செம்மை நிறம் உடையதுமான சடையின்மீது கங்கை நதியையும்,நாகத்தையும், கொன்றை மலரையும் தும்பை மலரையும் சந்திரனது பிறையையும் சூடிக் கொண்டுள்ள சிவபெருமானின் குமாரனாகிய தேவராகிய திருமுருகப்பெருமானாக மட்டுமன்றி, கருணைக்கு உறைவிடமான கிருபாகரனாகவும் விளங்குபவரே! முக்தியைப் பெறுவதற்குரிய தவப்பயன் சிறிதேனும் இல்லாத அடியேனை, பிரபஞ்சம் என்னும் மாயச் சேற்றினை விட்டு உய்யுமாறு உண்மையான வழியைக் காட்டியருளினீர்!

விளக்க உரை

  • பூர்வ ஜென்ம கர்மங்களில் அனுபவித்தது போக மீதம் இருப்பவை ஆகிய சஞ்சீதம் கர்மாவின் தொடர்ச்சியாகிய நற்பேறு. தவம் என்பது இந்தப் பிறவியில் செய்வது.
  • அடவி – காடு
  • ஆறு – கங்கை
  • பணி – பாம்பு
  • இதழி – கொன்றைப் பூ
  • தும்பை – தும்பைப் பூ
  • அம்புலியின் கீற்று – சந்திரனின் பிறை

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.