
பாடல்
திறம் சொல்வர் சகல கலை சேதி எல்லாம்
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமும் சொல்வார்
பரம் சொல்வார் பரபரத்தின் பதிவும் சொல்வார்
பதிவாக மவுனமதின் திறமும் சொல்வார்
நிறம் சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார்
நெஞ்சங்கள் தான் வலுக்க நிதியும் சொல்வார்
கரம் சொல்வார் காயாதி கற்பம் சொல்வார்
கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே!
அகஸ்தியர்
கருத்து – ஞானி என்று சொல்லக்கூடிய மௌனகுரு வாய்க்க பெற்று அவருக்கு தொண்டு செய்யும் புண்ணியம் வாய்க்க பெற்றால் கிடைக்கும் பேறுகள் எவை உரைக்கும் பாடல்.
பதவுரை
ஞானி என்று சொல்லக்கூடிய மௌனகுரு வாய்க்க பெற்று அவருக்கு தொண்டு செய்யும் புண்ணியம் வாய்க்க பெற்றால் அவர்கள் புலமை மிக்க உரைகளை உரைப்பார்கள்; இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூச்சின் வகைகளையும், அவை ஒவ்வொரு திதியில் செய்யப்பட வேண்டிய முறையினையும் உரைப்பார்கள்; முடிவான மௌனத்தின் பெருமைகளை உரைப்பார்கள்; பிறவி நீக்கம், மோட்சம் போன்றவற்றை உரைத்து மேலான கடவுளின் தன்மைகளை உரைப்பார்கள்; பராபரம் ஆகிய இறைவனின் பெருமைகளை உரைப்பார்கள்; இறையின் அருள் நிலை குறித்தும் உரைப்பார்கள்; எழுத்துக்கள், அவற்றின் தன்மைகள், மந்திரங்கள் மற்றும் அதை அடையும் முறைகள் ஆகியவற்றை தன் குரு உபதேசம் செய்த வகையில் உரைப்பார்கள்; வறுமையால் துன்பம் கொண்டவர்களின் வறுமை நீங்க அதற்கான வழிமுறைகளையும் உரைப்பார்கள்; உடல் கெடாமல் இருக்கும் கற்ப மூலிகைகளை உரைத்து அதை கொள்ளும் முறைகளையும் உரைப்பார்கள். ஆகவே இதனை மனதினை நிலைப்படுத்தி கேட்பாயாக.
விளக்க உரை
- ஞானியர்களிடத்தில் குறையாகக் காண்பவை யாவும் உண்மையில் குறை ஆகாமை என்பதை உணர்த்தும்.
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #அகஸ்தியர் #சித்தர்கள் #சித்தர்_பாடல்கள் #கரம் #பரம் #மௌனம் #கற்ப_மூலி