
பாடல்
தாமரையி னிலையினிலே தண்ணீர் தங்காத
தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்
தூமணியாம் விளங்கிய சோதி பதத்தைத்
தொழுது தொழுதுதொழு தாடாய்பாம்பே
சித்தர் பாடல்கள் – பாம்பாட்டி சித்தர் – அகப்பற்று நீக்கல்
கருத்து – உலகியலை விடுத்து சிவத்தினை நாட அறிவுறுத்தும் பாடல்.
பதவுரை
பாம்பே! தாமரை இலையின் மேல் தண்ணீரானது இருப்பினும் அதன் மேல் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கக் கூடிய தன்மையைப் போல் இந்த உலகில் வாழ்ந்தாலும் உலகப் பற்றினை நீக்கி, முத்தினைப் போல் பிரகாசிக்கும் தன்மை உடைய சோதியின் பதத்தை தொழுது தொழுது ஆடுவாயாக.
விளக்க உரை
- பாம்பு – மனம் எனக் கொள்ளலாம்.
- தொழுது தொழுது – இருவினை ஆகிய நல்வினை தீவினை நீக்கம் பெறுதல் குறித்து இருமுறை உரைக்கப்பட்டது.