
பாடல்
பாரப்பா சீவன் விட்டுப் போகும் போது
பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார்
ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை
ஆகாய சிவத்துடனே சேரும் என்பார்
காரப்பா தீயுடல் தீச் சேரும் என்பார்
கருவறியா மானிடர்கள் கூட்டம் அப்பா
சீரப்பா காமிகள் தாம் ஒன்றாய்ச் சேர்ந்து
தீய வழிதனைத் தேடி போவார் மாடே
அருளியச் சித்தர் : அகத்தியர்
கருத்து – உயிரின் தன்மையை அறியாது பலவாறு பேசும் மனிதர்களைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
உயிரின் தோற்றம் அறியா மானிடர்களின் கூட்டம் இந்த உடலைவிட்டு சீவன் நீங்கும் போது உயிர் நீங்கிவிட்டது, என்றும் அழியக்கூடியதான பிணம் மட்டும் இங்கு இருக்கிறது, இதை அறிந்தவர்கள் யாரும் இல்லை, உலகை விட்டு நீங்கிய சீவன் ஆகாயத்தில் இருக்கும் சிவத்துடன் சேரும், உடலானது தீயினைச் சேரும் என்று பலவாறு உரைப்பார்கள். புண்ணிய பாவங்களை அறிந்து அதனை செய்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீய வழியினை மாட்டைப் போன்று தேடிப் போவார்கள்