அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 14 (2018)

பாடல்

பொய்யா கிய புவி வாழ்க்கைக் கடலிற் புகுந்தழுந்தி
மெய்யம் இது என நம்பி விட்டேன் வினையேனைக் கண்பார்
மையொடு கண்ணியர் பின் செலத்தாரு வனத்திற் சென்ற
சைவாகமப் பொருளே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

மையினை அணிந்த அழகிய  கண்களை உடைய கன்னியர்களான தாருகா வன முனிவர்களின் பெண்டிர் தன் பின்னால் வருமாறு செய்த சைவ ஆகமப் பொருளே, காழித் தலத்தில் உறையும் ஆபதுத்தாரணனே! வினை உடையவன் ஆகிய யான், மாயைத் தன்மை உடைய பொய் ஆகிய இந்த உலக வாழ்க்கையை கடலில் புகுந்து அழுந்துமாறு செய்து, இதுவே மெய்யானது என்று நம்பி விட்டேன்.

விளக்க உரை

  • வைரவர் கோலமும், பிச்சாடனர் என்றும் பலிதேர் பிரான் கோலமும் ஏறக்குறைய ஒன்று போலவே தோற்றமளிக்கும்; வைரவர் ஆங்காரமாகவும், பாதங்களில் பாதுகை இல்லாமலும் கொண்ட தோற்றத்துடன் காணப்படுவார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 13 (2018)

பாடல்

அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே!
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!
நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்
அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே

சிவவாக்கியர்

பதவுரை

பார்த்தல், கேட்டல், சுவைத்தல் , நுகா்தல் மற்றும் தொடுதல் ஆகிய ஐம்புலன்களும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் ஐம்பூதங்களும் நமசிவய எனும் ஐந்தெழுத்தான சதாசிவமேயன்றி வேறல்ல. ஐம்பூதங்களுடன் ஐம்புலன்கள் இணைந்த கலவையான உயிர்பிறப்புகளும் அனைவற்றுக்கும் எல்லையான ஐந்தெழுத்தான ஆதிமூலமேயன்றி வேறல்ல. எவ்வாறு வளர்ச்சியுறும் கனியை பிஞ்சென்று உரைப்பார்களோ அது போன்ற அளவிலா நிறைந்தவோர் அருட்பெரும் சோதியினின்று பிரிந்து வந்த (பிய்ந்து வந்த) ஒரு துகளே வளரும் நிலைகொண்ட கனலாகும். இக்கனலே அகத்துள் உறைந்து ஐம்பூத மற்றும் ஐம்புலக் கலவையான உயிரினங்களை இயக்குகிறது. இதனை உணராதவர்கள் அவரவர் வாய்ப் போக்கில் உரை செய்வார்கள்; ஈஸ்வர வடிவமான இந்த ஐந்தெழுத்தை உள்ளத்தில் நிலை நிறுத்தி வைக்கக் கூடிய வல்லமை பெற்றோர், எண்ணிக்கையால் குறிப்பிடப்படும் நிலைகளைக் கடந்து (அதாவது ஐம்புலன்கள் மற்றும் ஆறுநிலைகளான மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞா) மேலும் கடக்க எந்த நிலையுமல்லாத மிக உன்னதமான இறுதி எனும் பரமானந்த நிலை எய்துவர்.

விளக்க உரை

  • தொக்குதல் – ஒருமிக்கச் சேர்தல்; ஒன்றுபடல்
  • *

ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

திருமூலர் திருமந்திரப் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது

இந்தப் பாடலின் விளக்கம் முழுவதும் குரு நாதரால் அருளி உரை செய்யப்பட்டது.

மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 12 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கொம்பு

 

ஓவியம் : இணையம்

பாடல்

சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று
பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்

பெரிய புராணம் – சேக்கிழார்

பதவுரை

சங்கின் ஒலிகள் முழங்கவும், அழகியதாக விளங்கக் கூடியதும், பஞ்ச வாத்தியங்களில் ஒன்றானதுமான  கொம்புகள் ஒலிக்கவும், மங்கலமான வாழ்த்துரை சொற்கள் எங்கும் பெருகவும், மறைகள் முழங்கவும், பிறைச் சந்திரனையும், பாம்பையும் அணிந்த இறைவன் உறைவதும், புண்ணியம் மிக்கதுமான திருத்தலங்கள் எங்கும் சென்று, மேன்மேலும் பெருகும் விருப்பத்துடன் போற்றியும், சீகாழி பதியில் தோன்றியவரும், கவுண்டினிய கோத்திரத்தில் தோன்றியவருமான திருஞானசம்பந்தர் எழுந்தருளிச் சென்றார்.

விளக்க உரை

  • கொம்பு
  1. ‘திமில’, ‘மத்தளம்’,’இலத்தாலம்’,’இடக்க’ ஆகியவற்றுடன் சேர்ந்த ‘கொம்பு’ பஞ்ச வாத்திய இசை கருவிகள்
  2. ஊது கருவி எனப்படும் தூம்பு வகை தமிழர் இசைக்கருவி
  3. பயன்பாடு – நாட்டுப்புற இசை மற்றும் கோயில் இசையில் (பண்டைக் காலத்தில்  போரில் வென்ற அரசனின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் வாசிக்கப்பட்ட இசைக் கருவிகளில் முதன்மையானது கொம்பு.)
  4. முன் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களாலும்  செய்யப்படுகிறது.
  5. நீளம் – நான்கு முதல் ஆறு அடிவரை
  6. இதன் ஒலி யானை பிளிறுவது போன்ற ஓசையை ஏற்படுத்தும்
  7. காலம் – மூன்றாயிரம் ஆண்டுகள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 11 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : தண்ணுமை

ஓவியம் : wiki

பாடல்

தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருநீற்றுப்பச்சை என்றும் உருத்திரச்சடை என்றும் அழைக்கப் பெறும் கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும்படியான வளமை உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவனானவர், தண்டு, தாளம், குழல், தண்ணுமை ஆகிய கருவிகளுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர்; சுவாமி ஆன அவர் பல்வேறு கோலங்கள் கொண்டவர்; கண்ணால்  காணும் காட்சிக்கும் அரியவர் ஆவார்.

விளக்க உரை

  • காட்சியும், அதை அறிதலும் அரிது எனும் பொருள் பற்றியது
  • தண்ணுமை (மிருதங்கம்)
  1. இது  தோலால் ஆன, தாள வாத்திய வகையைச் சார்ந்த, கொட்டு இசைக்கருவி;
  2. இதில் பல்வேறு சொற்களை வாசிக்க முடியும் என்பதால் இது ராஜ வாத்தியம்
  3. ‘மதங்கம்’ –  பழந்தமிழ்ச் சொல் திரிந்து  ‘மிருதங்கம்’ என்னும் வடமொழிச் சொல் ஆனது.
  4. பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படும். இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு உருளை வடிவினதாகவும் இருக்கும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 10 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் :வயிர்

ஓவியம் : Shivam.org

பாடல்

மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்
குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம்
முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம்

பெரியபுராணம் – சேக்கிழார்

பதவுரை

வேதங்கள் முழங்கின; வளமான தமிழ்ச் சொற்களால் ஆன தமிழ் மறைகளும் ஒலித்தன; சில துண்டங்களாக உள்ளவைகளும், பலப் பலவாறு சேர்த்தும் பொருத்தியும் முழக்கப்படும் ஆன வயிர் மற்றும்  ஊது கொம்புகள் ஒலித்தன; அளவாலும், உருவாலும் பலவகைப்பட்டவையும், எண்ணிக்கையால் பன்மையும் உடைய சங்கினங்கள் முழங்கின; எக்காளங்கள் ஆகிய தாரையும் திருச்சின்னமும் முறைப்படி மெய்க் கீர்த்திகளைக் கூறி ஊதின; இயங்களுக்குள் பெரிய உருவுடைய முரசங்கள் மற்றும் சிறுகுன்று போன்ற உருவுடையவை ஒலித்தன; திருஞானசம்பந்தரின் பெருமையும் திருவருள் பெருமையினையும் உணர்ந்த அடியார் அர! அர! என்று பலவாறு போற்றித் துதிக்கும் சத்தம் இவற்றின் மேலாய் விளங்குமாறு  துதித்து உடன் சென்றனர்.

விளக்க உரை

  • திருவரத்துறையினின்றும் விடைபெற்றுப் திருஞானசம்பந்தர், சிவிகையில் ஏறிப் புறப்படும் இது போன்ற எழுச்சி மிக்க ஆர்ப்புடன் கூடிய ஒலிகள் முழங்கின
  • மறைகள் – தமிழ்கள் எனப் பன்மையில் கொள்க வேண்டும். தமிழ் என்று வேறு பிரித்துக் கூறியதாலும், பன்மை பொருள்பற்றியும் தமிழ் மறைகளும், கீதங்களும் என்று கொள்ளப்படும்.
  • வண்மை – ஈகை, குணம், அழகு, வாய்மை, வளமை; வளப்பம், வலிமை, புகழ் வாகைமரம்
  • முழங்கின, தழங்கின, நரன்றன, முரன்றன், இயம்பின, ஒலித்தன, கரங்கின, பிறங்கின என வந்த எட்டு வினை முற்றுக்களும் ஒலித்தன என்ற ஒரே பொருளைத் தருவன. ஆயினும் சத்திக்கும், வெவ்வேறு பொருள்களுக்கேற்ப ஒலிகளும் வேறுபடுவது பொருட்டு  அவ்வவற்றுக்கு ஏற்றபடி வெவ்வேறு வினைகளால் குறிப்பிடப்படுள்ளது.
  • வயிரின் குறை – வயிர் / ஊது கொம்புகள். குறை – இவை சில துண்டங்களாக உள்ளவை பலப் பலவாறு சேர்த்தும் பொருத்தியும் முழக்கப்படுதல் பற்றிய குறிப்பு.
  • பிறங்கின – அர! அர! முழக்கம் எல்லாவற்றினும் மேலாய் விளங்கின.
  • வயிர்
  1. விலங்குகளின் கொம்பினால் செய்யப்பட்டு, போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட துளைக்கருவி. மரங்களின் வைரம் போன்ற பகுதியைத் துளைத்தும் செய்யப்பட்டிருக்கலாம்
  2. அன்றில் பறவையின் ஒலியை போன்று வயிரின் ஒலி அமைந்திருக்கும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 9 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : திமிலை

ஒவியம் - tamillexion

 

பாடல்

கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்
     கண்ணனும் நண்ணுதற்கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
     வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
     அதெந்துவே என்றரு ளாயே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனாலும், கார்மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலாலும் எளிதில் அடைவதற்கு இயலாத  அருமையான தூயவனே! ‘எமக்கு வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும்’ என்று வேண்ட பெரிய நெருப்பு உருவத்தில் இருந்து தோன்றிய எந்தையே! பஞ்சவாத்திய  கருவிகளுள் ஒன்றானதும், பேரொலியை உடையதுமான திமிலையின் ஓசையும், நான்கு வேதங்களும் சேர்ந்து ஒலிக்கும் பெருந்துறையில் செழுமையான மலர்களை உடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய குற்றம் இல்லாதவனே! அடியேனாகிய நான் அன்பொடு அழைத்தால் ‘அது என்ன’ என்று அருளொடு கேட்டு அருள் புரிவாயாக!

விளக்க உரை

  • வியன்தழல் – பெரிய நெருப்பு
  • திமிலை (வேறு பெயர் – பாணி )
  1. பஞ்சவாத்தியம் எனப்படும் கருவிகளுள் ஒன்றானதும், மணற்கடிகார வடிவில் இருக்கும் ஆன இசைக்கருவி
  2. மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவி
  3. பலா மரத்தில் செய்யப்பட்டு, கன்றின் தோலால் (குறிப்பாக 1 – 2 ஆண்டே ஆன கன்றின் தோல்) மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 8 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : முழவு

ஒவியம் - tamillexion

பாடல்

பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
     படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
     அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
     மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
     விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே

தேவாரம் – ஏழாம் திருமுறை –  சுந்தரர்

பதவுரை

இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும்,  குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.

விளக்க உரை

  • தண்மை –  மனம் குளிர்தலைக் குறிக்கும்
  • முழவு
  1. முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டது. குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பி செய்யும் கருவியாகும்
  2. இது தோல் கருவி. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலை முழவு என ஏழு வகைப்படும்.
  3. வேறு பெயர் – மிழாவு (கேரளா)
  4. மண் மத்தளத்திற்கு பூசப்படுவது ( மார்ச்சனை )
  5. ‘ஈர்ந்தண் முழவு’, ‘மண்ணார் முழவு’, ‘முழவு மண் புலர’ போன்ற குறிப்புகள் மூலம் பன் நெடுங்காலம் முன் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும் உணரமுடியும். (ஆதாரம் – மத்தளவியல் நூல்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 7 (2018)

பாடல்

சடத்தை எடுத்து மயல்நிகழ்த்திக்
      திகைப்பில் உயிரும் அகப்படவும்
   தேசா சார அதிமோகத்
      திருக்கில் மனமும் உருக்கமுடன்

கடந்தை எனதென் றபிமானக்
      கருமா மயிலா ருடன்ஆசைக்
   காத லதனில் உயிர்மறந்து
      கலங்கி தியங்கி அலைவேனோ

நடத்தை அறியாப் பரிபாக
      னாக்கி உன்றன் இருபதத்தை
   நம்ப மனத்தில் உறுதியொன்றாய்
      நாட்டி எனையோ ராளாக்கி

மடத்தை அரிய வலிந்தழைப்பாய்
      மதிவாள் நுதலே மலைமகளே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

பளபளத்து ஒளிவீசும் நிலாக் கீற்று போன்ற நெற்றியை உடைய மலைமகளே, மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, சடலத்தை எடுக்கச் செய்து, அதில் மயக்கத்தை சேர்த்து, அதனால் ஏற்பட்ட திகைப்பினால் உயிர் அகப்படுமாறு செய்தும்,  இசையில் அடிப்படையில் பாடப்படுவதான் பண் சேருமாறு மோகிக்குமாறு செய்தும், அதில் மனதை கொட்டுவதும், பெரிதானதுமான குளவியில் ஒன்றானதுமானதும் ஆன கரந்தை போன்ற கருங்கூந்தலை உடைய பெண்களுடன் ஆசை கொண்டு காதலால் உயிர் மறந்து கலந்து அவர்களுடன் ஒன்று சேர்ந்து அலைவேனோ! நன்னடத்தை, தீய நடத்தை என பிரித்துப் பார்க்க இயலாத பக்குவம் உடையவனாக்கி, உன்னுடைய இரண்டு பதத்தை நம்பும்படியாக மனதில் உறுதியை நாட்டி என்னை ஒரு ஆளாக்கி, உன்னுடைய இருப்பிடத்தை அறிய வலிந்து என்னை அழைப்பாய்.

விளக்க உரை

  • பரிபாகம் – சமைக்கை, பக்குவம், முதிர்வு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 5 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : பம்பை

ஒவியம் – tamillexion

பாடல்

நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட
இடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார்

பெரிய புராணம் – சேக்கிழார் (திருநீலகண்ட நாயனார் புராணம்)

பதவுரை

நீண்ட சடையினில் ஒழுங்குபடுத்தப்பட்ட பம்பை எனும் வாத்திய கருவியுடன், வெண்ணிலவில் இருந்து வெளிப்படும் கதிரினை ஒத்தவாறு கூடிய புன்முறுவலுடன், கைகளில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி நடந்து திருநீல கண்டர் வீட்டிற்கு சென்றார்.

விளக்க உரை

  • கரத்தல் – மறைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 4 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : காளம்

புகைப்படம் - இணையம்

பாடல்

சங்கொடு தாரை சின்னந் தனிப்பெருங் காளந் தாளம்
வங்கிய மேனை மற்று மலர்துளைக் கருவி யெல்லாம்
பொங்கிய வொலியி னோங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணு மெழுந்து மல்கத் திருமண மெழுந்தத தன்றே

பெரிய புராணம் – சேக்கிழார்

பதவுரை

சங்கு, தாரை, சின்னம், ஒப்பற்ற பெரிய எக்காளம், தாளம், குழல் போன்ற ஏனைய நாதம் மலர்கின்ற கருவிகளுடன் சேர்ந்து மேலெழுந்த ஒலியுடன் கூடி மறையவர்களது வேத ஒலியினோடும் பொருந்தி எங்கும் எழுந்து பெருக திருமணமானது எழுச்சி பெற்றுச் சென்றது.

விளக்க உரை

  • தாரை, சின்னம், காளம், தாளம் – இவை கணபதிக்கு இறைவர் அளித்தருளியவை;
  • பெருங்காளம் (உயிர்த்தூம்பு) உருவினாலும் ஒசையினாலும் பெரியதானது. யானை பிளிறுவது போல ஒலி தரும் கொம்பு
  • தனி – இறைவர் தந்து அருளியதால் ஒப்பற்ற தன்மை;
  • சங்கொடு – சங்கு – மங்கலம் தருவதும், சிறந்ததானதும், மனிதர்களால் மற்றைய கருவிகள் போல் இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்படாத ஒலி இல்லாமல் இயற்கையாகவே ஒலி உடையதும், பிரணவநாதம் நீங்காது ஒலிக்கும் சிறப்புடையதும், பிரணவ வடிவுடைதும் ஆனது.
  • வங்கியம் – குழல்; துளைக்கருவிகளும் முதன்மையானது
  • ஒலி – மங்கலஒலி. வேதங்களுடன் கூடியது.
  • திருமணம் எழுந்தது – திருமணத்தின் பொருட்டு மணமகன் தன் சுற்றத்தாருடன் மணமகளிடன் மனைக்குச் செல்லும் வழக்கு (அப்பொழுதே திருமண நாள்)

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 3 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கொக்கரை

புகைப்படம் :  முத்தமிழ் வலைக்காட்சி

பாடல்

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பரா ரூரரே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தன்னோடு ஆடுதலை விரும்பியதும், கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி ஆகிய வாத்தியங்களை இசைத்து  கொண்டு பக்கவாட்டிலே நின்று கொண்டும் திறந்தவாயை உடையனவாகியதும், ஒருசேர  ஆடுதலை விரும்பியதுமான பல பூதங்களுடன்  ஒன்று சேர்ந்து சங்காரதாண்டவமாகிய  ஆடுதலை உடைய கூத்தராய் சங்கு மணிகளையும், அரவை எனும் பாம்பினையும் அணிந்து இருப்பவர் திருவாரூர்ப் பெருமானாவர்.

விளக்க உரை

  • கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி முதலியன இறைவனது திருக்கூத்திற்கு முழங்கும் பக்கவாத்தியங்கள்.
  • ஒக்க ஆடல் உகந்து – ஒருசேர அவைகளும் தன்னோடு ஆடுதலை விரும்பி
  • அக்கு – சங்குமணி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 2 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : முரசு

ஓவியம் : Wikipedia

பாடல்

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த
அரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

நரியைக் குதிரையாக செய்விக்கும் சாமர்த்தியம்  உடையவனும் (மாணிக்கவாசகர் வரலாறு), மும் மலங்களுக்கு உட்பட்டு பிறவி நீக்கம் பெறத் தன்மை இல்லா உயிர்களாகிய நரகர்களையும் தேவர்கள் ஆக்கும் வல்லமை உடையவனும்*, மல பரிபாகம் கொண்ட உயிர்கள் தாம்  மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானாகிய  தியாகராசருக்கு உரியதும், தியாக முரசைத் தாங்கியதும் ஆகிய ஆனை மீது அமர்த்தி முழங்கப்படுமாறு செல்பவனும், தன்  அடியார்கள்  முன்னின்று வணங்கி துதிக்கப்படுகையில் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆன எம்பெருமான் ஆரூரில் அமர்ந்து தவம் செய்பவனும்  ஆவான்.

விளக்க உரை

  • பண் : காந்தாரம்
  • * நரகர் மானிடப்பிறப்பு கொள்ளாமல் தேவராதல் அற்புதம் என்பதால் இங்கு இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
  • விச்சு, விச்சது – வித்து
  • சாத்தி – சார்த்தி
  • முரசு  – அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோலால் ஆன ஒலிக் கருவி .(வேறு பெயர்கள் – பறை, பேரி, முழவு). மூன்று வகைகள்
  1. வீர முரசு – போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது.
  2. தியாக முரசு – பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்டது
  3. நியாய முரசு – நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்டது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 1 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : சிலம்பு

 

 

ஓவியம் : Wikipedia

பாடல்

அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று
சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

‘எந்த உயிருக்கு ஆணவமாகிய குற்றம் நீங்கி மல பரிபாகம் எனும் பக்குவம் வந்ததோ, அந்த உயிரின் உள்ளத்திலே வலிமையும், பெருமையும் உடைய அனைத்துத் தேவர்களும் தொழும்படி சிவபெருமான் வீற்றிருக்கின்றான்` என்பதை உணர்ந்து, பொங்குதல் நிறைந்த குழலை உடையவளான  அருள் சத்தியாகிய தேவியும் சங்கினையும், வளையினையும், சிலம்பினையும் அணிந்து அவைகள் ஒலிக்குமாறு விரைவில் சென்று அங்கே மகிழ்ச்சியோடு அப்பெருமானை வணங்குவாள்.

விளக்க உரை

  • ஈசனின் வழிபற்றி அவன் தன்மையில் அம்மையும் அருளுதல் செய்தலை விளக்கும் பாடல்
  • ‘அங்கே’ – சிவன் அங்கே எப்பொழுதும் இருப்பினும் கள்வன்போல ஒளித்திருந்து, பின் வெளிப்பட்டமை பற்றியது
  • சிங்காசனத்தே சிவபெருமானைக் கொலுவிருப்பவன் போலக் கூறியதும், அருட்சத்தியை மகிழ்பவள்போலக் கூறியதும் உயிர்கட்கு மல பரிபாகம் வருவித்தலே அவர்களது குறிக்கோள்.
  • சலேல் – ஒலிக் குறிப்பு; ஓடி வருதல்
  • நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்புவதும், நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பினை, சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் அணிந்தனர். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த அணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று அமைக்கப்பட்டு,  உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும்.  (கழல் –  ஆண்கள் அணியும் சிலம்பு வகை)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 30 (2018)

பாடல்

 

பறந்த பறவை நாற்காலாய்ப்
      படரும் விலங்கும் ஊர்வனவும்
   பாணி தனில்வாழ் சீவர்களும்
      பாரில் நிலையாத் தாபரமும்

பிறந்த மனிதர் தேவரொடு
      பிசகா தெடுத்த செனனமதில்
   பெற்ற தாயார் எத்தனையோ
      பிறவி மனையார் புதல்வர்களும்

நிறைந்த கோடா கோடிஇதில்
      நிலையா னதுவும் ஒன்றறியேன்
   நீயே தாயென் றநுதினமும்
      நெறியே அருளிப் பிறவியினி

மறந்து விடவும் உனதுபய
      வனச மலர்த்தாள் ஈந்தருள்வாய்
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, பறவைகள், நான்கு கால்கள் உடைய விலங்குகள், ஊர்ந்து செல்லும் விலங்குகள், பூமியில் நிலைத்து வாழும் தன்மை கொண்ட சீவன் உடையவர்கள், மனிதர்கள், தேவர்கள் என தவறாமல் பலப்பல பிறப்பு எடுத்த பிறப்புகளில் பெற்ற தாய்களின் எண்ணிக்கை, மனைவிகள் மற்றும் புதல்வர்களின் எண்ணிக்கை கோடானு கோடிக்கு சமமாகும்; இவ்வாறன பிறவிகளில் நிலையானது என்று எதையும் அறியவில்லை; நீயே எனது தாய் என்ற நெறியை நித்தமும் எனக்கு அருளி, இனி பிறவாமை எனும் நிலையை அடைய உனது இரு தாமரை மலர் போன்ற திருவடிகளை தந்து அருள்வாய்.

விளக்க உரை

  • ‘முன்னம் எத்தனை சென்மமோ’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 29 (2018)

பாடல்

முட்டற வாழும் பெருஞ்செல்வ மும்முத் தமிழ்க்கல்வியும்
எட்டுணை யேனுங் கொடுத்துண்டிருக்க எனக்கருள்வாய்
வட்டமதிச் சடையானே சிகரமலைக் கமர்ந்த
சட்டம் உடையவ னேகாழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

பூரணத்துவத்தின் அடையாளம் ஆகிய முழு நிலைவை தலையில் சூடியவனே, காழி மலை மேல் அமர்ந்த  மாணிக்க வகை போன்றவனும், நேர்மை ஆனவனும் ஆன ஆபதுத்தாரணனே, நீங்காமல் இருக்கும் பெரும் செல்வமும், முத்தமிழ் கல்வியும் எள்ளவாவது எப்பொழுதும் கொடுத்துக் கொண்டிருக்க எனக்கு அருள்வாய்.

விளக்க உரை

  • எட்டுணை – எள்ளளவு
  • சட்டம் – மரச்சட்டம், கம்பியிழுக்கும் கருவி, எழுதும் ஓலை, எழுதுதற்கு மாதிரிகையாயமைந்த மேல்வரிச்சட்டம், நியாய ஏற்பாடு, செப்பம், நேர்மை, ஆயத்தம், புனுகுப்பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் திரவப்பொருள், மாணிக்கவகை

 

 

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 24

 

உமை

மனிதன் விரதத்தை எப்படி செய்தால் புண்ணியம் அடைவான்?

சிவன்

  • மனிதன் சாத்திரத்தில் உரைத்தவாறு நீராடிய பின்பு பஞ்ச பூதங்களையும், சூரிய சந்திரர்களை காலை மற்றும் மாலை ஆகிய இரு சந்தி வேளைகளிலும், தர்ம தேவதையையும், யமனையும், பித்ருக்களையும் நமஸ்கரித்து தன்னை அவர்களிடம் ஒப்பித்து மரணம் வரையிலுமோ அல்லது குறிப்பிட்ட காலம் வரையிலுமே விரதத்தை செய்யலாம்.
  • காய்கறி, கனி மற்று பூ இவற்றிலும் விலக்குவது குறித்து நிச்சயப்படுத்திக் கொண்டு விரதம் செய்யலாம்.
  • பிரம்மச்சாரிய விரத்தையும், உபவாச விரத்தையும் கொள்ளலாம்.
  • இவ்வாறு பலவகையிலும் கொள்ளப்படும் விரதத்திற்கு அது பற்றி தெரிந்தவர்கள் கெடுதல் வராமல் காக்க வேண்டும். இவ்வாறான விரதம் கெட்டால் பாவம் என்று அறிவாயாக.
  • மருந்து உண்பதற்காகவும், அறியாமையாலும், பெரியோர் கட்டளையாலும், சுற்றத்தாருக்கு உதவி செய்வதற்காகவும் விரதம் கெடுவதால் குற்றம் ஆகாது.
  • விரதம் முடிக்கும் போது சாத்திரத்தில் விதிக்கப்பட்டவாறு முடிக்க வேண்டும். அதனால் சித்தி அடைவான்.

உமை

சிலர், புலால் எனும் மாமிசம் உண்ணுகின்றனர், சிலர் விட்டு விடுகின்றனர். அதை உண்ணலாமா கூடாதா? இதைச் சொல்லக்கடவீர்.

சிவன்

  • அக்கினி பூசையும், தானமும், வேதம் ஓதுதலும், தட்சிணைகள் நிரம்பிய யாகங்கள் ஆகியவை புலால் உண்ணாமல் இருப்பதன் பதினாறின் ஒரு பங்கிற்கு ஈடாகாது. சுவையை விரும்பி தனக்காக வேறு உயிரைக் கொல்பவன் பாம்பு, நரி, கழுகு மற்றும் ராட்சர்களுக்கு சமமானவன். பிற மாமிசத்தில் தன்னை வளர்ப்பவன் பிறக்கும் பிறப்புகளில் எல்லாம் பயம் கொண்டவனாகவே இருப்பான். தன்னை அறுத்தல் தனக்கு எத்தனை துன்பம் தருமோ அது போலவே பிற உயிர்களுக்கும் துன்பம் தரும் என்று புத்திசாலி உணரவேண்டும்.
  • வாழ்நாள் முழுவதும் மாமிசம் உண்ணாதவன் சொர்கத்தில் நிலைபெறுவான். நூறு வருடம் தவம் செய்வதும் மாமிசம் விடுவதும் சமமாகவே இருக்கும் அல்லது அந்த தவ வலிமை குறைவாகவே இருக்கும். உயிரைக்காட்டிலும் மேலானது எதுவும் இல்லை என்பதால் தன் போல் பிற உயிர்களிடத்தில் இரக்கம் வைக்க வேண்டும்.
  • மாமிசத்தின் சுவை அறிந்து அதை விலக்குபவன் பெறும் நன்மையை யாகங்களும், தேவர்களாலும் செய்யமுடியாது.
  • மாமிசத்தை விட இயலாவிடின் ஏதாவது ஒரு மாதத்தில் விட வேண்டும்; அதுவும் இயலாது போனால் கார்திகை மாதம் சுக்ல பட்சத்தில் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை), தனது ஜன்ம நட்சத்திரதின் போதாவது, புண்ணிய திதிகளில் அல்லது அமாவாசை பௌர்ணமி திதிகளில் மட்டுமாவது விடவேண்டும்.
  • உடற் பிணிகள் வந்து அதன் பொருட்டு மாமிசம் உண்பவனையும் பித்ருக்களுக்கு படைக்கப்பட்ட மாமிசம் உண்பவனையும் பாவம் பற்றாது.

உமை

தர்மத்தை கடைபிடிப்பவர்களால் குரு பூசை எவ்வாறாக செய்யப்படுகிறது?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 28 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கிண்கிணி

 

ஓவியம் : Wikipedia

பாடல்

தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

முழந்தாள் அளவு நீண்ட கைகளை உடையவனாகவும், தாமரைப் பூப்போன்ற திருவடிகளை உடையவனாகவும், அல்லி போன்ற பூக்களை சூடியவனாகவும்*,  வீணையைக் கைகளில் கொண்டவனாகவும், ஆடுவதால் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.

விளக்க உரை

  • *கோடலா வேடத்தன் – பிறரால் கொள்ள முடியாத வேடத்தினன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • தாட வுடுக்கையன்  – முழந்தாள் அளவு நீண்ட கை அரசர்களுக்கு உரிய உத்தம இலக்கணம். ‘தாள்தொடு தடக்கை அத்தருமமே அனான்’ எனும் கம்பராமாயண பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 27 (2018)

பாடல்

ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
     ஆவுடைய மாது தந்த …… குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
     ஆளுமுனை யேவ ணங்க …… அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
     பூரணசி வாக மங்க …… ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
     போகமுற வேவி ரும்பு …… மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
     நீதிநெறி யேவி ளங்க …… வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
     நீலமயி லேறி வந்த …… வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
     ஊழியுணர் வார்கள் தங்கள் …… வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
     ஊதிமலை மீது கந்த …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும், தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார் பெற்றருளிய குமாரக் கடவுளே, புவி முதல் ஆகாயம் வரையிலான ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு நிலை இல்லாமல் அலைந்து, நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல், நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின் விதவிதமான சைகளையே நினைந்து, இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு அன்போடு திருவருள் புரிந்து, சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு எனக்கு உபதேசம் செய்த தன்மையானது, சிவபிரானின் விளங்கும் காதில் உரைத்த ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும்; அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில் ஏறி வந்தருளிய, கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே, ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும் சிவயோகத்தையே செய்து, விதியின் வழியை நன்கு உணரும் பெரியோர்களின் வினைகள் தீருமாறு அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த ஊதிமலை மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே! அன்புடன் மனம் கசிந்து உருகி முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய்.

விளக்க உரை

  • ஆவுடையாள் –  பசு ஏறும் பிராட்டி – திருப்பரங்குன்றத்தில் உள்ள பார்வதி தேவிக்கு ஆவுடை நாயகி எனப் பெயர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 26 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கிணை

ஓவியம் : shaivam.org

பாடல்

தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

ஆரணியம் என்று அழைக்கப்படும் காட்டில் வாழும் அழகரே, யான் எல்லாப் பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் நிற்கும் பொழுது  நீர்,  ‘தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா’  ஆகிய வாத்திய கருவிகளுடன், பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடினாலும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டு ‘சிறிது பிச்சை இடுமின்’ என்று சொல்லி வந்து நிற்கின்றீர்.

விளக்க உரை

  • தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா – வாத்தியக் கருவிகள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 25 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : இடக்கை

ஓவியம் : shaivam.org

பாடல்

கத்திரிகை துத்திரி கறங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனை யுலப்பில்கரு வித்திர ளலம்பவிமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண் மிடைந்துகளும் வேதவனமே

தேவாரம் – மூன்றாம் திருமுறை –  திருஞானசம்பந்தர்

பதவுரை

கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை, தக்கை, இடக்கை, படகம் முதலிய இசைக்கருவிகள் ஒலிக்கக் கூடியதும், தேவர்கள் துதிக்க, அதன் தாளத்திற்கேற்பத் திருத்தாளை ஊன்றி நடனமாடும் ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்து அருளக்கூடியதும், உண்மைத் தன்மையுடைய பத்தர்களும், சித்தர்களும் நெருங்கி மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து செல்லும் இடம் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

விளக்க உரை

  • உலப்பு இல் – அளவற்ற.
  • எத்தனை கருவித்திரள் – எவ்வகைப்பட்ட இசைக் கருவிகளின் கூட்டங்கள்.
  • இமையோர்கள் – தேவர்கள்.
  • பரச – துதிக்க.
  • உகளுதல் – துள்ளிக் குதித்தல்

இடக்கை

  • பிற வாத்தியங்களுக்கு இடையே வாசிக்க பயன்படுத்தப்படுவதால் இந்தப் பெயர்.
  • கோவில்களின் மூலஸ்தானத்தில் அல்லது கர்ப கிருகத்தில் பயன்படுத்தப்படும் அபூர்வமான இசைக்கருவிகளில் இதுவும் ஒன்று.
  • இடக்கையின் இரு முகங்கள் –  ஒன்று ஜீவாத்மா, மற்றொன்று பரமாத்மா

 

Loading

சமூக ஊடகங்கள்