இசைக்கருவிகள் அறிமுகம் : முழவு
ஒவியம் - tamillexion
பாடல்
பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.
விளக்க உரை
- தண்மை – மனம் குளிர்தலைக் குறிக்கும்
- முழவு
- முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டது. குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பி செய்யும் கருவியாகும்
- இது தோல் கருவி. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலை முழவு என ஏழு வகைப்படும்.
- வேறு பெயர் – மிழாவு (கேரளா)
- மண் மத்தளத்திற்கு பூசப்படுவது ( மார்ச்சனை )
- ‘ஈர்ந்தண் முழவு’, ‘மண்ணார் முழவு’, ‘முழவு மண் புலர’ போன்ற குறிப்புகள் மூலம் பன் நெடுங்காலம் முன் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும் உணரமுடியும். (ஆதாரம் – மத்தளவியல் நூல்)