இசைக்கருவிகள் அறிமுகம் : தண்ணுமை
ஓவியம் : wiki
பாடல்
தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே
தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
திருநீற்றுப்பச்சை என்றும் உருத்திரச்சடை என்றும் அழைக்கப் பெறும் கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும்படியான வளமை உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவனானவர், தண்டு, தாளம், குழல், தண்ணுமை ஆகிய கருவிகளுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர்; சுவாமி ஆன அவர் பல்வேறு கோலங்கள் கொண்டவர்; கண்ணால் காணும் காட்சிக்கும் அரியவர் ஆவார்.
விளக்க உரை
- காட்சியும், அதை அறிதலும் அரிது எனும் பொருள் பற்றியது
- தண்ணுமை (மிருதங்கம்)
- இது தோலால் ஆன, தாள வாத்திய வகையைச் சார்ந்த, கொட்டு இசைக்கருவி;
- இதில் பல்வேறு சொற்களை வாசிக்க முடியும் என்பதால் இது ராஜ வாத்தியம்
- ‘மதங்கம்’ – பழந்தமிழ்ச் சொல் திரிந்து ‘மிருதங்கம்’ என்னும் வடமொழிச் சொல் ஆனது.
- பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படும். இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு உருளை வடிவினதாகவும் இருக்கும்