இசைக்கருவிகள் அறிமுகம் : முரசு
ஓவியம் : Wikipedia
பாடல்
நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த
அரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
நரியைக் குதிரையாக செய்விக்கும் சாமர்த்தியம் உடையவனும் (மாணிக்கவாசகர் வரலாறு), மும் மலங்களுக்கு உட்பட்டு பிறவி நீக்கம் பெறத் தன்மை இல்லா உயிர்களாகிய நரகர்களையும் தேவர்கள் ஆக்கும் வல்லமை உடையவனும்*, மல பரிபாகம் கொண்ட உயிர்கள் தாம் மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானாகிய தியாகராசருக்கு உரியதும், தியாக முரசைத் தாங்கியதும் ஆகிய ஆனை மீது அமர்த்தி முழங்கப்படுமாறு செல்பவனும், தன் அடியார்கள் முன்னின்று வணங்கி துதிக்கப்படுகையில் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆன எம்பெருமான் ஆரூரில் அமர்ந்து தவம் செய்பவனும் ஆவான்.
விளக்க உரை
- பண் : காந்தாரம்
- * நரகர் மானிடப்பிறப்பு கொள்ளாமல் தேவராதல் அற்புதம் என்பதால் இங்கு இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
- விச்சு, விச்சது – வித்து
- சாத்தி – சார்த்தி
- முரசு – அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோலால் ஆன ஒலிக் கருவி .(வேறு பெயர்கள் – பறை, பேரி, முழவு). மூன்று வகைகள்
- வீர முரசு – போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது.
- தியாக முரசு – பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்டது
- நியாய முரசு – நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்டது