பாடல்
சடத்தை எடுத்து மயல்நிகழ்த்திக்
திகைப்பில் உயிரும் அகப்படவும்
தேசா சார அதிமோகத்
திருக்கில் மனமும் உருக்கமுடன்
கடந்தை எனதென் றபிமானக்
கருமா மயிலா ருடன்ஆசைக்
காத லதனில் உயிர்மறந்து
கலங்கி தியங்கி அலைவேனோ
நடத்தை அறியாப் பரிபாக
னாக்கி உன்றன் இருபதத்தை
நம்ப மனத்தில் உறுதியொன்றாய்
நாட்டி எனையோ ராளாக்கி
மடத்தை அரிய வலிந்தழைப்பாய்
மதிவாள் நுதலே மலைமகளே
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
பளபளத்து ஒளிவீசும் நிலாக் கீற்று போன்ற நெற்றியை உடைய மலைமகளே, மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, சடலத்தை எடுக்கச் செய்து, அதில் மயக்கத்தை சேர்த்து, அதனால் ஏற்பட்ட திகைப்பினால் உயிர் அகப்படுமாறு செய்தும், இசையில் அடிப்படையில் பாடப்படுவதான் பண் சேருமாறு மோகிக்குமாறு செய்தும், அதில் மனதை கொட்டுவதும், பெரிதானதுமான குளவியில் ஒன்றானதுமானதும் ஆன கரந்தை போன்ற கருங்கூந்தலை உடைய பெண்களுடன் ஆசை கொண்டு காதலால் உயிர் மறந்து கலந்து அவர்களுடன் ஒன்று சேர்ந்து அலைவேனோ! நன்னடத்தை, தீய நடத்தை என பிரித்துப் பார்க்க இயலாத பக்குவம் உடையவனாக்கி, உன்னுடைய இரண்டு பதத்தை நம்பும்படியாக மனதில் உறுதியை நாட்டி என்னை ஒரு ஆளாக்கி, உன்னுடைய இருப்பிடத்தை அறிய வலிந்து என்னை அழைப்பாய்.
விளக்க உரை
- பரிபாகம் – சமைக்கை, பக்குவம், முதிர்வு