இசைக்கருவிகள் அறிமுகம் : கொம்பு
ஓவியம் : இணையம்
பாடல்
சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று
பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்
பெரிய புராணம் – சேக்கிழார்
பதவுரை
சங்கின் ஒலிகள் முழங்கவும், அழகியதாக விளங்கக் கூடியதும், பஞ்ச வாத்தியங்களில் ஒன்றானதுமான கொம்புகள் ஒலிக்கவும், மங்கலமான வாழ்த்துரை சொற்கள் எங்கும் பெருகவும், மறைகள் முழங்கவும், பிறைச் சந்திரனையும், பாம்பையும் அணிந்த இறைவன் உறைவதும், புண்ணியம் மிக்கதுமான திருத்தலங்கள் எங்கும் சென்று, மேன்மேலும் பெருகும் விருப்பத்துடன் போற்றியும், சீகாழி பதியில் தோன்றியவரும், கவுண்டினிய கோத்திரத்தில் தோன்றியவருமான திருஞானசம்பந்தர் எழுந்தருளிச் சென்றார்.
விளக்க உரை
- கொம்பு
- ‘திமில’, ‘மத்தளம்’,’இலத்தாலம்’,’இடக்க’ ஆகியவற்றுடன் சேர்ந்த ‘கொம்பு’ பஞ்ச வாத்திய இசை கருவிகள்
- ஊது கருவி எனப்படும் தூம்பு வகை தமிழர் இசைக்கருவி
- பயன்பாடு – நாட்டுப்புற இசை மற்றும் கோயில் இசையில் (பண்டைக் காலத்தில் போரில் வென்ற அரசனின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் வாசிக்கப்பட்ட இசைக் கருவிகளில் முதன்மையானது கொம்பு.)
- முன் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களாலும் செய்யப்படுகிறது.
- நீளம் – நான்கு முதல் ஆறு அடிவரை
- இதன் ஒலி யானை பிளிறுவது போன்ற ஓசையை ஏற்படுத்தும்
- காலம் – மூன்றாயிரம் ஆண்டுகள்