இசைக்கருவிகள் அறிமுகம் : இடக்கை
ஓவியம் : shaivam.org
பாடல்
கத்திரிகை துத்திரி கறங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனை யுலப்பில்கரு வித்திர ளலம்பவிமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண் மிடைந்துகளும் வேதவனமே
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை, தக்கை, இடக்கை, படகம் முதலிய இசைக்கருவிகள் ஒலிக்கக் கூடியதும், தேவர்கள் துதிக்க, அதன் தாளத்திற்கேற்பத் திருத்தாளை ஊன்றி நடனமாடும் ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்து அருளக்கூடியதும், உண்மைத் தன்மையுடைய பத்தர்களும், சித்தர்களும் நெருங்கி மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து செல்லும் இடம் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
விளக்க உரை
- உலப்பு இல் – அளவற்ற.
- எத்தனை கருவித்திரள் – எவ்வகைப்பட்ட இசைக் கருவிகளின் கூட்டங்கள்.
- இமையோர்கள் – தேவர்கள்.
- பரச – துதிக்க.
- உகளுதல் – துள்ளிக் குதித்தல்
இடக்கை
- பிற வாத்தியங்களுக்கு இடையே வாசிக்க பயன்படுத்தப்படுவதால் இந்தப் பெயர்.
- கோவில்களின் மூலஸ்தானத்தில் அல்லது கர்ப கிருகத்தில் பயன்படுத்தப்படும் அபூர்வமான இசைக்கருவிகளில் இதுவும் ஒன்று.
- இடக்கையின் இரு முகங்கள் – ஒன்று ஜீவாத்மா, மற்றொன்று பரமாத்மா