
இசைக்கருவிகள் அறிமுகம் : திமிலை
பாடல்
கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்
கண்ணனும் நண்ணுதற்கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
பதவுரை
தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனாலும், கார்மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலாலும் எளிதில் அடைவதற்கு இயலாத அருமையான தூயவனே! ‘எமக்கு வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும்’ என்று வேண்ட பெரிய நெருப்பு உருவத்தில் இருந்து தோன்றிய எந்தையே! பஞ்சவாத்திய கருவிகளுள் ஒன்றானதும், பேரொலியை உடையதுமான திமிலையின் ஓசையும், நான்கு வேதங்களும் சேர்ந்து ஒலிக்கும் பெருந்துறையில் செழுமையான மலர்களை உடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய குற்றம் இல்லாதவனே! அடியேனாகிய நான் அன்பொடு அழைத்தால் ‘அது என்ன’ என்று அருளொடு கேட்டு அருள் புரிவாயாக!
விளக்க உரை
- வியன்தழல் – பெரிய நெருப்பு
- திமிலை (வேறு பெயர் – பாணி )
- பஞ்சவாத்தியம் எனப்படும் கருவிகளுள் ஒன்றானதும், மணற்கடிகார வடிவில் இருக்கும் ஆன இசைக்கருவி
- மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவி
- பலா மரத்தில் செய்யப்பட்டு, கன்றின் தோலால் (குறிப்பாக 1 – 2 ஆண்டே ஆன கன்றின் தோல்) மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று.
![]()