இசைக்கருவிகள் அறிமுகம் : காளம்
புகைப்படம் - இணையம்
பாடல்
சங்கொடு தாரை சின்னந் தனிப்பெருங் காளந் தாளம்
வங்கிய மேனை மற்று மலர்துளைக் கருவி யெல்லாம்
பொங்கிய வொலியி னோங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணு மெழுந்து மல்கத் திருமண மெழுந்தத தன்றே
பெரிய புராணம் – சேக்கிழார்
பதவுரை
சங்கு, தாரை, சின்னம், ஒப்பற்ற பெரிய எக்காளம், தாளம், குழல் போன்ற ஏனைய நாதம் மலர்கின்ற கருவிகளுடன் சேர்ந்து மேலெழுந்த ஒலியுடன் கூடி மறையவர்களது வேத ஒலியினோடும் பொருந்தி எங்கும் எழுந்து பெருக திருமணமானது எழுச்சி பெற்றுச் சென்றது.
விளக்க உரை
- தாரை, சின்னம், காளம், தாளம் – இவை கணபதிக்கு இறைவர் அளித்தருளியவை;
- பெருங்காளம் (உயிர்த்தூம்பு) உருவினாலும் ஒசையினாலும் பெரியதானது. யானை பிளிறுவது போல ஒலி தரும் கொம்பு
- தனி – இறைவர் தந்து அருளியதால் ஒப்பற்ற தன்மை;
- சங்கொடு – சங்கு – மங்கலம் தருவதும், சிறந்ததானதும், மனிதர்களால் மற்றைய கருவிகள் போல் இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்படாத ஒலி இல்லாமல் இயற்கையாகவே ஒலி உடையதும், பிரணவநாதம் நீங்காது ஒலிக்கும் சிறப்புடையதும், பிரணவ வடிவுடைதும் ஆனது.
- வங்கியம் – குழல்; துளைக்கருவிகளும் முதன்மையானது
- ஒலி – மங்கலஒலி. வேதங்களுடன் கூடியது.
- திருமணம் எழுந்தது – திருமணத்தின் பொருட்டு மணமகன் தன் சுற்றத்தாருடன் மணமகளிடன் மனைக்குச் செல்லும் வழக்கு (அப்பொழுதே திருமண நாள்)