இசைக்கருவிகள் அறிமுகம் :வயிர்
ஓவியம் : Shivam.org
பாடல்
மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்
குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம்
முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம்
பெரியபுராணம் – சேக்கிழார்
பதவுரை
வேதங்கள் முழங்கின; வளமான தமிழ்ச் சொற்களால் ஆன தமிழ் மறைகளும் ஒலித்தன; சில துண்டங்களாக உள்ளவைகளும், பலப் பலவாறு சேர்த்தும் பொருத்தியும் முழக்கப்படும் ஆன வயிர் மற்றும் ஊது கொம்புகள் ஒலித்தன; அளவாலும், உருவாலும் பலவகைப்பட்டவையும், எண்ணிக்கையால் பன்மையும் உடைய சங்கினங்கள் முழங்கின; எக்காளங்கள் ஆகிய தாரையும் திருச்சின்னமும் முறைப்படி மெய்க் கீர்த்திகளைக் கூறி ஊதின; இயங்களுக்குள் பெரிய உருவுடைய முரசங்கள் மற்றும் சிறுகுன்று போன்ற உருவுடையவை ஒலித்தன; திருஞானசம்பந்தரின் பெருமையும் திருவருள் பெருமையினையும் உணர்ந்த அடியார் அர! அர! என்று பலவாறு போற்றித் துதிக்கும் சத்தம் இவற்றின் மேலாய் விளங்குமாறு துதித்து உடன் சென்றனர்.
விளக்க உரை
- திருவரத்துறையினின்றும் விடைபெற்றுப் திருஞானசம்பந்தர், சிவிகையில் ஏறிப் புறப்படும் இது போன்ற எழுச்சி மிக்க ஆர்ப்புடன் கூடிய ஒலிகள் முழங்கின
- மறைகள் – தமிழ்கள் எனப் பன்மையில் கொள்க வேண்டும். தமிழ் என்று வேறு பிரித்துக் கூறியதாலும், பன்மை பொருள்பற்றியும் தமிழ் மறைகளும், கீதங்களும் என்று கொள்ளப்படும்.
- வண்மை – ஈகை, குணம், அழகு, வாய்மை, வளமை; வளப்பம், வலிமை, புகழ் வாகைமரம்
- முழங்கின, தழங்கின, நரன்றன, முரன்றன், இயம்பின, ஒலித்தன, கரங்கின, பிறங்கின என வந்த எட்டு வினை முற்றுக்களும் ஒலித்தன என்ற ஒரே பொருளைத் தருவன. ஆயினும் சத்திக்கும், வெவ்வேறு பொருள்களுக்கேற்ப ஒலிகளும் வேறுபடுவது பொருட்டு அவ்வவற்றுக்கு ஏற்றபடி வெவ்வேறு வினைகளால் குறிப்பிடப்படுள்ளது.
- வயிரின் குறை – வயிர் / ஊது கொம்புகள். குறை – இவை சில துண்டங்களாக உள்ளவை பலப் பலவாறு சேர்த்தும் பொருத்தியும் முழக்கப்படுதல் பற்றிய குறிப்பு.
- பிறங்கின – அர! அர! முழக்கம் எல்லாவற்றினும் மேலாய் விளங்கின.
- வயிர்
- விலங்குகளின் கொம்பினால் செய்யப்பட்டு, போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட துளைக்கருவி. மரங்களின் வைரம் போன்ற பகுதியைத் துளைத்தும் செய்யப்பட்டிருக்கலாம்
- அன்றில் பறவையின் ஒலியை போன்று வயிரின் ஒலி அமைந்திருக்கும்