பாடல்
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே!
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!
நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்
அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே
சிவவாக்கியர்
பதவுரை
பார்த்தல், கேட்டல், சுவைத்தல் , நுகா்தல் மற்றும் தொடுதல் ஆகிய ஐம்புலன்களும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் ஐம்பூதங்களும் நமசிவய எனும் ஐந்தெழுத்தான சதாசிவமேயன்றி வேறல்ல. ஐம்பூதங்களுடன் ஐம்புலன்கள் இணைந்த கலவையான உயிர்பிறப்புகளும் அனைவற்றுக்கும் எல்லையான ஐந்தெழுத்தான ஆதிமூலமேயன்றி வேறல்ல. எவ்வாறு வளர்ச்சியுறும் கனியை பிஞ்சென்று உரைப்பார்களோ அது போன்ற அளவிலா நிறைந்தவோர் அருட்பெரும் சோதியினின்று பிரிந்து வந்த (பிய்ந்து வந்த) ஒரு துகளே வளரும் நிலைகொண்ட கனலாகும். இக்கனலே அகத்துள் உறைந்து ஐம்பூத மற்றும் ஐம்புலக் கலவையான உயிரினங்களை இயக்குகிறது. இதனை உணராதவர்கள் அவரவர் வாய்ப் போக்கில் உரை செய்வார்கள்; ஈஸ்வர வடிவமான இந்த ஐந்தெழுத்தை உள்ளத்தில் நிலை நிறுத்தி வைக்கக் கூடிய வல்லமை பெற்றோர், எண்ணிக்கையால் குறிப்பிடப்படும் நிலைகளைக் கடந்து (அதாவது ஐம்புலன்கள் மற்றும் ஆறுநிலைகளான மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞா) மேலும் கடக்க எந்த நிலையுமல்லாத மிக உன்னதமான இறுதி எனும் பரமானந்த நிலை எய்துவர்.
விளக்க உரை
- தொக்குதல் – ஒருமிக்கச் சேர்தல்; ஒன்றுபடல்
- *
ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.
திருமூலர் திருமந்திரப் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது
இந்தப் பாடலின் விளக்கம் முழுவதும் குரு நாதரால் அருளி உரை செய்யப்பட்டது.
மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்