ஒருமையுடன் ஈசனருள் ஒங்கிஎன்றுந் தூங்கல் அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு) ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை நீங்காத போதுதா னே
பதப்பிரிப்பு
ஒருமையுடன் ஈசன் அருள் ஒங்கி என்றும் தூங்கல் அருமை அருமை அருமை – பெருமை இடும்பு ஆங்காரம் கோபம் அபிமானம் ஆசைவினை நீங்காத போது தானே
சிவபோகசாரம் – தருமை ஆதீன குரு முதல்வர்
கருத்து – புறச்செயல்கள் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து என்று உணர்வதை குறிக்கும் பாடல்.
பதவுரை
உயர்ந்த நிலை, மேன்மை, கீர்த்தி போன்றவைகள் குறித்து பெருமை, வெறுப்பு கொண்டு தீங்கு செய்தல், செருக்கு கொண்டு இருத்தல், சினம் கொள்ளுதல், அன்பு பாசம் கொண்டு அபிமானத்துடன் இருத்தல், ஆசை போன்ற வினைகள் நீங்காத போது மனதில் வேறு எவ்விதமான சிந்தனைகளும் இல்லாமல் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து என்று இருப்பது அருமையாகும்.
கோயில் மலையடிவாரத்தில் சங்கு வடிவில் அமையப் பெற்ற திருத்தலம்
திருமால் வடிவில் இருந்த மூல மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியராக மாற்றி வழிபட்டத் தலம் (கந்தபுராணம் திருக்குற்றாலப் படலம்)
அகத்தியரின் ஐந்து கைவிரல்கள் பதிந்த அடையாளங்களுடன் மிகச்சிறிய மூலவர் திருமேனி; கிழக்கு நோக்கி திருக்காட்சி
அகத்தியரால் திருமால் திருமேனியை சிவலிங்கத் திருமேனியாகவும் , ஸ்ரீதேவி திருவடிவை குழல்வாய் மொழியம்மையாகவும் , பூதேவியை பராசக்தியாகவும் மாற்றி அமைக்கப்பட்ட வடிவங்கள்
அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், அம்பாளுக்கான சக்திபீடங்களில் ஒன்றானதும் ஆன இத்தலம் பராசக்தி பீடம். (அம்பாள் திருவடிவம் ஏதும் இல்லாமல் மகாமேரு வடிவம் மட்டும்)
ஒன்பது சக்திகளின் அம்சமாக உள்ளதும், பூமாதேவியை அம்பிகையாக மாற்றியதால் தரணிபீடம் என்றும் போற்றப்படும் பராசக்தி பீடம்; இந்த அம்மை உக்கிரமாக இருப்பதால் இவருக்கு எதிரே காமகோடீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்ட அமைப்பு
அகத்தியர் சிவபார்வதி திருமணக் காட்சி கண்ட திருத்தலம்
மலை உச்சியில் செண்பக அருவி , செண்பகதேவி கோயில் ஆகியன அமையப் பெற்றது
அருகில் தேனருவி, புலியருவி, பழைய அருவி, ஐந்தருவி முதலான பல அருவிகள் அமையப் பெற்றத் திருத்தலம்
நுழைவுவாயிலின் ஒரு புறத்தில் அம்பல விநாயகர்
உட்பிரகாரத்தில் அதிகாரநந்தி, சூரியன், கும்பமுனி, அருட்சத்தியர்கள், விநாயகர் முதலான தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள்
முருகர் கையில் வில்லேந்திய கோலத்தில் திருக்காட்சி; அருகிலுள்ள வள்ளி தெய்வயானை இருவரும் ஒருவரை பார்த்தபடியான காட்சி அமைப்பு
பழைய ஆதி குறும்பலா மரத்தின் கட்டைகள்(தலமரம்) பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருத்தலம்
தொலைந்த பொருள்கள் கிடைக்க தனிச்சன்னதியில் அர்ஜுனன் பூஜித்த சிவலிங்கத்திருமேனி. இந்த சந்நிதிக்கு அருகிலிருந்து இந்த சிவலிங்கத்திருமேனி , விநாயகர் , குற்றாலநாதர் விமானம், திரிகூடமலை, குற்றால அருவி ஆகிய ஐந்தையும் ஒருங்கே தரிசிக்கும் படியான அமைப்பு
பிரகாரத்தில் சிவனார் அம்மையை மணந்து கொண்ட கோலத்தில் திருக்காட்சி. (மணக்கோலநாதர் சந்நிதி )
குற்றால அருவி விழும் பாறையில் செதுக்கப்பட்டுள்ள பல சிவலிங்க வடிவங்கள் கொண்ட அமைப்பு
அகத்தியர் சந்நிதி எதிரில் அவரது சீடரான சிவாலய முனிவருக்கு தனி சந்நிதி
சித்திரசபா மண்டபத்தில் குறவஞ்சி சிலைகள் கொண்ட அமைப்பு
சபாமண்டபம் கீழே கல்பீடமாகவும், மேலே முன்மண்டபம் மரத்தாலும் அமைக்கப்பட்டு, விமானம் செப்புத்தகடுகளால் வேயப்பட்டும் ஆன அமைப்பு
முன்மண்டபத்தின் உட்புற கூரையில் தனிச்சிறப்பானதும், அழகானதும் ஆன கொடுங்கைகள்
சித்திரசபையின் உள்ளே சிவகாமியம்மையுடனான நடராஜர் திருஉருவம் சுற்றிலும் தேவர்கள் தொழுதவாறு இருக்கும் வண்ணம் அற்புத ஓவியம்; உட்சுவற்றில் துர்கையம்மனின் பல்வேறு வடிவங்கள், வீரபத்ரர், கஜேந்திர மோட்சம், திருவிளையாடல் புராண வரலாறுகள், குற்றாலநாதர் அகத்தியருக்கு திருக்காட்சி, அறுபத்து மூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு வடிவங்கள், சனைச்சரன் முதலானோரின் வண்ண ஓவியங்கள்
பங்குனியில் பிரம்மோற்சவத்தின் போது முதல்நாள் பிரம்மாவாகவும், இரண்டாம்நாள் திருமாலாகவும், மூன்றாம் நாள் ருத்ரமூர்த்தியாகவும், நான்காம்நாள் ஈஸ்வரராகவும், ஐந்தாம்நாள் சதாசிவமூர்த்தியாகவும், ஆறாம்நாள் வெள்ளிமயில் வாகனாரூடராகவும் திருக்கோலம் கொண்டு பவனி வருவது சிறப்பான நிகழ்வு
தாண்டவ வடிவத்தில் காட்டப்படும் தீபாராதனை(மார்கழி திருவாதிரை)
லிங்க வடிவில் இருக்கும் பலாச்சுளைகள் (தலமரம்)
நான்கு வேதங்கள் நான்கு வாயிலாகவும் மற்றும் சிவனாரின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஒரு வாயிலாகவும் என ஐந்து வாயில்கள் கொண்டு விளங்கும் தலம்
தினமும் அர்த்தஜாம பூஜையின்போது சிவனாருக்கு சுக்கு, மிளகு, கடுக்காய் முதலானவை சேர்த்து தயாரித்து படைக்கப்படும் குடுனி நைவேத்தியம் எனப்படும் கஷாய நைவத்தியம்
ஆகமம் – மகுடாகம முறைப்படிப் பூஜைகள்
குறு ஆல் எனப்படும் ஒருவகை ஆலமரமரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் (பலாமரத்தில் ஒருவகையான மரம் குறும்பலா மரம்)
தலம்
திருக்குற்றாலம்
பிற பெயர்கள்
திரிகூடாசலம் , திரிகூடமலை, பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம், மதுவுண்டான் உயிர் மீட்ட புரம், பவர்க்க மீட்ட புரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்த புரம், செண்பகாரணிய புரம், முக்தி வேலி, நதிமுன்றில் மாநகரம், திருநகரம், நன்னகரம், ஞானப்பாக்கம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், வேத சக்தி பீட புரம், சிவ முகுந்த பிரம புரம், முனிக்கு உருகும் பேரூர், தேவகூட புரம், திரிகூடபுரம், புடார்ச்சுனபுரம், குறும்பலா விசேட புரம், வம்பார்குன்றம்
தைமகம் – தெப்போற்சவம், மார்கழித் திருவாதிரை, சித்திரை விஷு உற்சவங்கள், பங்குனியில் பிரம்மோற்சவம் (எட்டாம் நாள் நடராஜர் கோயிலில் இருந்து இச்சபைக்கு பச்சை சார்த்தி எழுந்தருளி அருள்பாலிக்கும் சிறப்பான நிகழ்வு), ஆடி அமாவாசையில் லட்சதீப உற்சவம் (பத்ரதீப திருவிழா), நவராத்திரி, ஐப்பசி பூரம் – திருக்கல்யாண உற்சவம்
மாவட்டம்
திருநெல்வேலி
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில் தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை ஈனுவதுமாகியதும், வில்லின் நாண் அசைய அதில் இருந்து தொடுத்த கணையை விடுத்து மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும் அன்பர்களின் வினையால் தோன்றிய குற்றங்கள் தீர அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளியுள்ளதும் ஆன திருத்தலம் நன்னகர் எனும் குற்றாலம் ஆகும்.
பாடியவர் திருநாவுக்கரசர் திருமுறை 4 பதிக எண் 009 திருமுறை எண் 3
பாடல்
உற்றா ராருளரோ – உயிர் கொண்டு போம் போழுது குற்றாலத்துறை கூத்தனல் லானமக் குற்றா ராருளரோ
பொருள்
கூற்றுவன் எனும் எமன் நம் உயிரைக் பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
புந்தி கலங்கி, மதிம யங்கி இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச் சந்தியில் வைத்துக் கடமை செய்து தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா முந்தி அமரர் முழவி னோசை திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க, அந்தியின் மாநடம் ஆடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே
பதினொன்றாம் திருமுறை – மூத்த திருப்பதிகம் – காரைக்கால அம்மையார்
கருத்து – திருஆலங்காட்டினையும், அதில் உறையும் இறைவனின் பெருமைகளையும் குறிக்கும் பாடல்.
பதவுரை
அறிவு கலங்கி, மதி மயங்கி, இறந்தவர்களை மயானத்தில் வைத்து இறுதிச் சடங்குகளை நிகழ்த்தி ஈமச்சடங்கு செய்யும் உரிமை உடையவர் இட்ட தீயை விளக்காகக் கொண்டு, முன்பு தேவர்களது மத்தளத்தின் ஓசை திசைகள் தோறும் நிறைய, சிலம்புகள் மிகுதியாக ஒலிக்க, யுகமுடிவில் மாநடனம் எனும் ஊழி நடனம் செய்யும் எங்கள் இறைவன் தங்கியிருக்கும் இடம் திருஆலங்காடேயாகும்.
விளக்கஉரை
புந்தி – புத்தி,
மதி – அறிவு
அறிவு பெறப்படுவது, மதி இயற்கையாக அமைவது, இறக்கும் போது இவைகள் விலகும் எனும் பொருளில் எழுதப்பட்டது. கலங்கி, மயங்கி என்றது, இறப்பு வருங்காலத்து நிகழ்வனவற்றைக் குறிப்பிடுவன எனும் பொருளும் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – துன்பம் கொண்டு பேசியும், ஊனை பாதுகாத்தும், வினைகளைப் பெருக்குதலும் சுற்றம் துணை என்று இருத்தலும் நீங்கி திருவாரூர் தலைவனின் திருவடித்துணை ஓங்க இருத்தல் பற்றிய பாடல்.
பூணுதல் – அணிதல், மேற்கொள்ளுதல், விலங்கு முதலியன தரித்தல், சூழ்ந்துகொள்ளுதல், உடைத்தாதல், சிக்கிக்கொள்ளுதல், கட்டப்படுதல், நெருங்கியிறுகுதல்
மாண்பு – மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு
புவனம் மாயத் தோற்றம் உடையது எனக்கொண்டால் அதில் உறையும் பொருள்களும் உயிர்களும் மாயைக்கு உட்படும். ஆகவே அதைப் பெற்ற உயிர்களில் தொழில்கள் ஆகிய காணுதல், கேட்டல், செயல்கள் அனைத்தும் பொய் எனும் பொருள் பெறப்படும். ஆன்மா இறையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அதில் உறையும் குரு நாதர் மட்டுமே உண்மையானவர் என்பதும் கடைசி இரு வரிகளால் பெறப்படும்.
காயம் பலகை கவறைந்து கண் மூன்றா யாயம் பொருவ தோரைம்பத் தோரக்கரம் மேய பெருமா னிருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப் பறியேனே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவன் தனது மறைத்தல் சத்தியைக் (திரோதான சத்தியை) கொண்டு உயிர்களின் ஆணவ மலத்தை அவையறியாமல் நின்று பக்குவப்படுத்தி வருதல் உள்ளுறையாக உணர்த்தும் பாடல்.
கண் மூன்றாய் என்பதற்கு நெஞ்சம் கண்டம் புருவமத்தி என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது, சூரிய நாடி சந்திர நாடி சுழுமுனை ஆகியவற்றையும் கண் மூன்றாய் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
உயிர்களை நன்னெறியில் செல்ல ஏவிய சிவபெருமான், அதன் பொருட்டு அவைகட்கு வேண்டும் துணைப்பொருள்களை நிரம்பக் கொடுத்திருந்த போதிலும் அவைகள் அவற்றை மாற்று வழியில் செலுத்துதலால், அச்செயலை அவன் மறைந்து நின்று சூதாடி போல் மாற்றுகின்றான்; இவ்வாறு பலகை, களம், உருள் கட்டம் ஆகியவற்றை எல்லாவற்றையும் அறிகின்ற உயிர்கள் அவற்றின் வழித் தம்மை வஞ்சிக்கின்ற சிவன் ஒருவனை அவன் தம்முடன் கூடவேயிருந்தும் அறியவில்லை.
மறைப்பு – மறைத்தல் தொழில். அறிதல், அதன் இயல்பினை முற்றும் உணர்தல்
கருத்து – எத்தனை பெரியவனாக இருப்பினும் உயிர்கள் இடத்தில் கொண்ட கருணையினால் நம்மிடம் வந்து நம்மை ஆள்பவன், அவன் உயர்வு கண்டு அஞ்ச வேண்டாம், அவன் நம்முடையவன் என்பதையும், சிவபெருமானை அன்றிப் பரம்பொருளாவார் பிறரில்லை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
மையினை கண்களின் அழகு பொலியும்படி அணிந்துள்ளவளும், தலையில் சூடப்பட்ட மாலைகளையும் அணிந்தவளே கேட்பாயாக; திருமால், அயன், இந்திரன் முதலியோர் பல பிறவிக் காலம் தேடி நிற்க, என்னையும் தனது இனிய அருளால் இந்தப் பிறப்பில் ஆட்கொண்டு இனிமேலும் பிறவாமல் காத்தவனாய், எக்காலத்திலும் சத்தியதின் வடிவமாகவும் இருந்து அதில் எப்பொழுதும் நிலை பெறுபவனாகவும், எல்லா உயிர்களுக்கும் தானே ஒருமுதல் பொருளாகவும், எல்லா உயிர்களுக்கும் வீடுபேற்றுக்கு ஏதுவாய் இருக்கிறவன் ஆகிய நம்முடைய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.
விளக்கஉரை
எப்பிறவியும் தேட – எல்லாப் பிறவிகளிலும் தேட
மெய்ப்பொருட்கள் தோற்றம்ஆய் – ஆன்மாவின் விளக்கமாக
எப்பொருட்கும் தானே ஆய் – எல்லாப் பொருள்களுக்கும் பற்றுக் கோடானவன்
மெய் – மெய்ம்மை,நிலைபேறு; வடமொழியில், `சத்து`
மைப்பொலியும் கண்ணிகேள் – மையினை கண்களின் அழகு பொலியும்படி அணிந்துள்ளவன் என்பது நேரடி பொருள்; குற்றம் எனும் பொருளும் உண்டு என்பது பற்றி குற்றம் கொண்டமையால் மெய்ப் பொருளை காணாது இருப்பவள் எனும் பொருளும் விளங்கப் பெறும்.
வீடு – பந்தத்தினின்றும் நீங்கிய உயிர்க்குப் புகலிடம் இறைவன் திருவடியன்றி வேறில்லை எனும் பொருள் பற்றியது
தோற்றமாய், தானேயாய் – காரணப் பொருளாய் நின்று, பின்னர் வந்த, ‘நிலைபேறாய்’ வீடாகும் என்றவற்றோடு முறையே முடிந்தன; பொய்யறிவின்கண் தோன்றாது, மெய்யறிவின்கண் தோன்றுதலால், மெய்ம்மையையே தனக்கு இயல்பாக உடையதாயும், எப்பொருட்கும் முதல்முழு பொருளாகி, யாவைக்கும் வீடாயும் நிற்கும் என்ற பொருள் பற்றியது. மெய்ப்பொருளால் விளங்கி மெய்ப்பொருளையே அறிவது மெய்யறிவு எனும் பதிஞானம் விளங்கப் பெறும்
எப்பிறவியும் தேட – திருமால், அயன், இந்திரன் – பல பிறப்பெடுத்தும் தேடுதல் குறித்தது; தேடுதல் – தொழில் / செயல், தேடுபவன் – கர்த்தா, தேடப்படும் பொருள் ஆகிய முதன்மைப் பொருள்
கருத்து – சத்தியைச் சிவனோடன்றித் தனித்து நிற்பவளாக எண்ணுதல் கூடாமை என்பது பற்றிக் கூறப்பட்டப் பாடல்.
பதவுரை
மெய்யை வழி பற்றி, அதன் தன்மையை உணர்ந்து, அவ்வாறு உணர்ந்த வழியிலே விளங்கி நிற்கக் கூடியவராகிய சிவன் எண்ணுபவர்களுக்கு உள் ஒளியாகி நிற்பவளும், மணம் வீசக்கூடியதும் மிக நீண்டதுமான கூந்தலை உடைய மங்கை ஆகிய சத்தியுடன் எல்லா இடத்தும், தானுமாய், பேதம் இல்லாமல் இயைந்தே நிற்பான். அவ்வாறு நிற்கும் பொழுதில் தம்மை தொழுது எண்ணுகின்றவர்களுக்கே திரிபுரை நற்கதி அளித்து வழங்குவாள்.
கருத்து – திருக்கழுமலம் எனும் திருத்தலத்தின் இயற்கை வருணனைகளையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
தடாகம் எனும் நீர்நிலைகளில் இருக்கும் தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும், செம்மை நிறமுடைய குமுத மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் திருத்தலமான திருக்கழுமலம் எனும் திருத்தலமானது விடை எனும் காளை வடிவம் பொறிக்கப்பட்டதானதும் உயர்ந்த வலிமையானதும் ஆன கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று செங்காந்தல் மலர் போன்ற மங்கை ஆகிய கலைமகளோடு நான்முகனாகிய பிரம்மன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில் ஆகும்.
விளக்கஉரை
நாவியம் – காந்தள்மலர்
வாவி – தடாகம்; நீர்நிலை, நடைக்கிணறு, ஆற்றிலோடை
சே – இடபம்
நா இயலும் மங்கை – சரஸ்வதி
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அல்லி
புகைப்படம் / செய்திகள் - விக்கிபீடியா
ஆழமற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் வளரும்
பூக்காம்பின் நடுவில் இருக்கும் ஐந்து பெருந்துளைகள் காற்றை நிரப்பி வைத்துக்கொண்டு இலையையும் பூவையும் நீர்ப்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து மிதக்கத் துணை செய்கின்றன.
தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீலநிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக்காம்பலும் (செவ்வல்லி) காணக் கிடைக்கின்றன
அல்லிக் கிழங்கு குளிர்ச்சி தரும். பூ குருதிக்கசிவைத் தடுக்கும். புண்களை ஆற்றும்; சிறுநீர் சம்மந்தப்பட்ட வியாதிகளை நீக்கும்.
பண்ணாரும் காமம், பயிலும் வசனமும், விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும், புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும் அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – காமம் முதலிய சிறிய இன்பம் காரணமாக உடம்பை விரும்புதல் சிறப்புடையதாகாது என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
நன்கு அமையப் பெற்ற உடலால் எழுகின்ற காமமும், அதன் காரணமாக பொருந்தி ஒலிக்கக் கூடியதான பேச்சுக்களும், மேலே செல்லும் போது ஆகாயம் வரை நீட்டிக்கச் செய்வதான மூச்சும், மூச்சினை தொடர்ந்து எழுகின்றன ஓசையும், புலால் வடிவாகிய உடம்பின் உள்ளே இருப்பதாகிய மனமும் இவை எல்லாம் எங்கு சென்றன என்று எண்ணும்படியாக உடல் முதலில் நிலையழிந்து, பின்னர் உருவும் அழிந்து ஒழியும்.
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும் – பிராணன் என்பதை முன்வைத்து அதன் முழுமையை உணர்த்துவதான தச தீட்சையினால் கிடைக்கப்பெறும் தச நாதங்கள் வாய்க்கப் பெறும் என்றும் பொருள் கொள்ளலாம்.
முதல் தந்திரத்தில் `யாக்கை நிலையாமை` பற்றி கூறப்பட்டாலும், அதனை வலியுறுத்தி இங்கு ‘உடல் விடல்‘ எனும் தலைப்பில் வருவதாலும் காமம் முன்வைத்து எழுதப்பெற்று இருப்பதாலும் காமத்தின் இயல்புகளை எடுத்துரைத்து அதன் நிலையாமையை கூறி உடல் நிலையாமை கூறப்படுகிறது எனவும் கொள்ளலாம்.
கருத்து – திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலத்தினையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
பாம்பு, வெள்ளிக்கம்பி போன்று மின்னக்கூடியதான இளம்பிறை, மணம் பரப்பக்கூடியதான கொன்றை மலர் ஆகியவற்றை சமமாக தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகரம் எதுவெனில் கடம்பு, குருக்கத்தி, பிரிந்தும் நீண்டும் இருக்கக் கூடியதுமான மரமல்லிகை ஆகியவற்றின் அரும்புகளும், குரவமலர்களும் மணம் பொருந்தி வானம் வரை நீண்டு இருக்கக் கூடியதானதும், குளிர்ச்சியும் அருளும் நிரம்பியதுமானதும், சோலைகள் சூழ்ந்ததுமானது திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலம் ஆகும்.
விளக்கஉரை
விண்டுதல் = பிளத்தல், பிரித்தல்
மரவம் – கடம்பு. மாதவி – குருக்கத்தி.
நிரவ – நிரம்ப
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு
புகைப்படம் : இணையம் செய்தி : விக்கிப்பீடியா
தற்போதைய பெயர் மவ்வல், மரமல்லி, மரமல்லிகை, பன்னீர்ப் பூ
குறிஞ்சி நில மகளிர் பயன்படுத்தியது.
இரவில் பூக்கும் இதன் மலர்கள் மிகுந்த வாசனையைக் கொண்டவை.
வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலையின் வேறு பெயர் ‘மனைநொச்சி’
கருத்து – உடலினை பொய் என்று உணர்ந்து ஆசையை அறுத்து, பரத்தில் அன்பு செய்ய வேண்டி உபதேசம் செய்து வலியுறுத்தும் பாடல்.
பதவுரை
பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகியவற்றால் ஆன இந்த உடல் பொய்யானது என்பதை உணர்ந்து, கையறு நிலையினை மனதில் கொண்டு, எக்காலத்திலும் துன்பத்தை தருவதாகிய ஆசை என்றும் தொடராமல், மேலுலகமானதும், மோட்சத்தின் இருப்பிடமானதும், நிறைவானதும் ஆன பரத்தில் அன்பு செய்.
விளக்கஉரை
காலம் – 16 ஆம் நூற்றாண்டு
இந்த நூல் 139 வெண்பாக்களைக் கொண்டது
துரத்துதல் – வெருட்டி ஓட்டுதல், அப்புறப்படுத்துதல், திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின் தொடர்தல், வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல்
பரம் – மேலானது, திருமால்நிலை ஐந்தனுள் ஒன்றான முதல் நிலை, கடவுள், மேலுலகம், திவ்வியம், மோட்சம், பிறவி நீக்கம், முன், மேலிடம், அன்னியம், சார்பு, தகுதி, நிறைவு, நரகம், பாரம், உடல், கவசம், கேடகவகை, குதிரைக்கலனை
செய்யடா செய்யடா, பொய்யடா பொய்யடா – அடுக்குத் தொடர். முதலில் சொன்னைதை உறுதிபடுத்த இரண்டாவது முறை.
நெஞ்சுளே நினைவு தோன்றும் நினைவுகளே அறிவு தோன்றும் மிஞ்சிய அறிவு தானே மெய்பொரு ளாகி நிற்கும் பஞ்சுளே படும்பொ றிப்போல் பரந்துளே துரிய மாகும் அஞ்சிலே துரிய மாகி யதனுறே யாதியாமே
முதுமொழி ஞானம் – – அகத்தியர்
கருத்து – ஆதியானது அஞ்செழுத்தினில் பரவி இருத்தலையும், மெய்ஞான நிலையில் அதை அறிய முடியும் என்பதையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
ஆதியானது பஞ்சினில் இருக்கும் அனல் போல் பரவி அஞ்செழுத்தில் தன்மயமாய் நிற்கும் உயர்நிலையை ஆகிய துரிய நிலையில் நிற்கும்; கற்று அறிந்ததைக் கொண்டு நெஞ்சத்தில் ஆதி பற்றிய எண்ணங்கள் முதலில் தோன்றும்; அந்த எண்ணங்களைத் தொடர்ந்து மெய்யறிவு பற்றிய ஞானம் தோன்றும்; அவ்வாறான அந்த நிலையில் அறிவு எனும் பேரறிவு தானே மெய்ப் பொருளாகிவிடும்.
விளக்கஉரை
துரியம் – நான்காம் அவத்தை, யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை, பொதியெருது, சுமத்தல்
பஞ்சுளே படும்பொ றிப்போல் – பஞ்சினில் தீ மறைந்திருக்கும், குவிஆடி மூலம் குவிக்கப்படும் போது அந்தப் பஞ்சானது பற்றிக் கொள்ளும். அத்தன்மை ஒத்து
கருத்து – திருக்கோகரணம் எனும் திருத்தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளைக் கூறும் பாடல்.
பதவுரை
அலைகளை உடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்கத் தக்கவரான சிவபெருமான் அழிக்கப்பட்டதான தலைமாலை அணிந்தவர்; திருச்சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்கள் ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவர்; அவர் வீற்றிருந்து அருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி இருக்கக் கூடியதும், பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் தலமான திருக்கோகரணம் எனும் திருத் தலமாகும்.
கருத்து – ஈசனின் குணங்களை சொல்லி அவரை வணங்குதலைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
திருமுடியில் முல்லை மாலையை சூடியவனே, திருமேனி முழுவதும் திருநீறு பூசியவனே, எல்லை அற்றதான எண்குணங்களை உடையவனே, செங்கோட்டு யாழ் மற்றும் சீறி யாழ்போன்ற ஏழு நரம்புகள் உடைய யாழ் வகையில் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே, மயிர் நீக்கப்பட்ட உருண்டை வடிவினதாகிய கபாலம் எனும் மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே, உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை முழுவதும் நீக்குபவனே, ஓதுதலை உடைய தில்லைச் சிற்றம்பலத்தை விரும்பி அடைந்து இருப்பவனே, அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே! உன்னை வணங்குகிறேன்.
விளக்கஉரை
படைத்தல் – உடையனாதல்
சில்லை – வட்டம்
சிரை – மழிப்பு
செல்வன் – இன்பத்திற்கு ஏதுவாய் உள்ள பொருளாய் உள்ளவன்
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி – சிவனுக்கு உரித்தானதும், சைவ ஆகமத்தில் கூறப்பட்ட முறைப்படியும் எண்வகைப்பட்ட குணங்கள் தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பதால் எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ள கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – முல்லை
புகைப்படம் மற்றும் செய்தி – விக்கிப்பீடியா
முல்லை என்னும் சொல் காட்டில் மலரும் வனமுல்லையை குறிக்கும்
பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான்
மருத்துவ குணங்கள் – மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு பெறுதல், தலைவலி நீக்குதல், கண் பார்வை கோளாறு நீக்குதல் போன்றவற்றை செய்யும்
பிட்டு நேர்பட மண்சு மந்த பெருந்து றைப்பெரும் பித்தனே சட்ட நேர்பட வந்தி லாத சழக்க னேன்உனைச் சார்ந்திலேன் சிட்ட னேசிவ லோக னேசிறு நாயி னுங்கடை யாயவெங் கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – சிவன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடையன் ஆயினும் தனக்கு அருளிய பெருங்கருணையை வியந்து உரைத்தது.
பதவுரை
முழுவதும் கற்று அறிந்தவனே, சிவலோகத்தினை தன் உலகமாக உடையவனே, பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறையில் உறையும் பெருமானே! உன் உரைக்கப்படுகின்ற கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை சார்ந்து அடைந்திலேன்; அத்தகைய குற்றம் உடையவன் ஆகியவனும் சிறுமை உடைய நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளுதல் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணையை எவ்வாறு வியந்து உரைப்பது?
விளக்கஉரை
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63வது படலம் மண் சுமந்த படலம்
பிட்டு நேர்பட – உண்ட பிட்டுக்கு அளவுக்கு ஒப்ப
சழக்கன் – பொய்யன்
சிட்டன் – உயர்ந்தோன், பெரியோர், கல்வி நிரம்பிய சான்றோர்
கருத்து – சிவன் சூடியுள்ள மலர்களை குறிப்பிட்டு அவர் அனைத்து உயிர்களுக்கு துணையாக இருப்பதை குறிப்பிடும் பாடல்.
பதவுரை
விரும்பத்தக்கதான காட்டுப்பள்ளி எனும் தலத்தில் உறைபவரும், அடும்பு மலர்கள், கொன்றை மலர்கள், வன்னி மலர்கள், ஊமத்த மலர்கள் ஆகியவற்றால் புனையப்பட்ட மாலையை சடையில் சூடி இருப்பவரும், ஒளிவீசும் முத்து போன்ற சோதி வடிவாக இருப்பவனும், கடம்ப மலர் மாலையினை அணிந்த முருகனின் தந்தையும் ஆகிய பெருமானே இந்த உடலோடு கூடி வாழும் உயிர்களுக்கு உற்ற துணைவர் ஆவார்.
விளக்கஉரை
அடும்பு – அடம்பமலர்
துடும்பல் – நிறைந்திருத்தல்
தூமணிச்சோதி – தூயமணியினது ஒளியை உடையவன்
கடம்பன் – கடம்பமலர்மாலை சூடிய முருகன்
தாதை – தந்தை
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு
புகைப்படம் மற்றும் செய்தி - விக்கிப்பீடியா
• வேறு பெயர் அடம்பு • படரும் கொடி வகை சார்ந்தது • கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும் தன்மை உடையது • குணங்கள் – மருத்துவ மூலிகை, வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது.
வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த காலைநீர் எங்கே கரந்தனையால் – மாலைப் பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ இறைக்கூறாய் எங்கட்(கு) இது
பதினொன்றாம் திருமுறை – சிவபெருமான் திருமும்மணிக்கோவை – இளம்பெருமான் அடிகள்
கருத்து – சிவனின் வடிவ அழகை குறிப்பிட்டு ஊழிக்காலத்தில் தண்நீர் அனைத்தையும் எங்கு வைத்திருந்தாய் எனும் வியப்புடன் கேள்வி எழுப்பும் பாடல்.
பதவுரை
சாயுங்காலத்தில் தோன்றும் சந்திரனின் பிறைக்கீற்றையும், நெற்றிக் கண்ணையும், இடப்பாகத்தில் உமா தேவியையும் கொண்டுள்ளவரே! கடலின் உச்சியையும் ஆகாயத்தின் நடு இடத்தையும் இரண்டும் ஒன்றி நிற்கும் படியான ஊழிக்காலத்தில் நீரை எங்கே உள்ளடக்கி வைத்தாய்? இதனை அறியாது திகைக்கின்றோம். ஆகவே இதன் பொருட்டு எங்களுக்குப் பதில் சொல்வீராக.
கருத்து – உறக்கத்தில் உயிர் தன்னை அறியாமையினால் உடலில் இருந்து வேறுபட்டு மற்றொரு உயிர் என்பதை மறுதலிக்கும் பாடல்.
பதவுரை
அவயவங்கள் குறைபாடுகள் இல்லாமல் வாயுக்கள் ஒன்று கூடி உண்டான இந்த உடலில் அவற்றில் இருந்து வேறுபட்டு இருக்கும் மற்றொரு உயிர் என்று அறியத் தக்க உணர்வு தோன்றுமானால் உணர்ச்சி அற்ற நிலைக்கு செல்லக்கூடியதான இந்த உடலானது, பூதக்கூட்டத்தால் ஒன்றாக கூடி, குறைவின்றி கிடைக்கும் நிலை ஆகியதும் உறக்கத்திலும் அறிவு வெளிப்பட்டு உடலுக்கு உணர்வு உண்டாக வேண்டும் அல்லவா?