
பாடல்
சேவுயருந் திண்கொடியான் றிருவடியே சரணென்று சிறந்தவன்பால்
நாவியலு மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயில்
வாவிதொறும் வண்கமல முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே
முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்
கருத்து – திருக்கழுமலம் எனும் திருத்தலத்தின் இயற்கை வருணனைகளையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
தடாகம் எனும் நீர்நிலைகளில் இருக்கும் தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும், செம்மை நிறமுடைய குமுத மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் திருத்தலமான திருக்கழுமலம் எனும் திருத்தலமானது விடை எனும் காளை வடிவம் பொறிக்கப்பட்டதானதும் உயர்ந்த வலிமையானதும் ஆன கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று செங்காந்தல் மலர் போன்ற மங்கை ஆகிய கலைமகளோடு நான்முகனாகிய பிரம்மன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில் ஆகும்.
விளக்க உரை
- நாவியம் – காந்தள்மலர்
- வாவி – தடாகம்; நீர்நிலை, நடைக்கிணறு, ஆற்றிலோடை
- சே – இடபம்
- நா இயலும் மங்கை – சரஸ்வதி
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அல்லி
புகைப்படம் / செய்திகள் - விக்கிபீடியா
- ஆழமற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் வளரும்
- பூக்காம்பின் நடுவில் இருக்கும் ஐந்து பெருந்துளைகள் காற்றை நிரப்பி வைத்துக்கொண்டு இலையையும் பூவையும் நீர்ப்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து மிதக்கத் துணை செய்கின்றன.
- தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீலநிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக்காம்பலும் (செவ்வல்லி) காணக் கிடைக்கின்றன
- அல்லிக் கிழங்கு குளிர்ச்சி தரும். பூ குருதிக்கசிவைத் தடுக்கும். புண்களை ஆற்றும்; சிறுநீர் சம்மந்தப்பட்ட வியாதிகளை நீக்கும்.