பாடல்
மைப்பொலியும் கண்ணிகேள் மால்அயனோடு இந்திரனும்
எப்பிறவியும் தேட என்னையும்தன் இன் அருளால்
இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவாமே காத்து
மெய்ப்பொருட்கள் தோற்றம்ஆய் மெய்யே நிலைபேறுஆய்
எப்பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் விடுஆகும்
அப்பொருள்.ஆம் நம்சிவனைப்பாடுதும்காண் அம்மானாய்
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – எத்தனை பெரியவனாக இருப்பினும் உயிர்கள் இடத்தில் கொண்ட கருணையினால் நம்மிடம் வந்து நம்மை ஆள்பவன், அவன் உயர்வு கண்டு அஞ்ச வேண்டாம், அவன் நம்முடையவன் என்பதையும், சிவபெருமானை அன்றிப் பரம்பொருளாவார் பிறரில்லை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
மையினை கண்களின் அழகு பொலியும்படி அணிந்துள்ளவளும், தலையில் சூடப்பட்ட மாலைகளையும் அணிந்தவளே கேட்பாயாக; திருமால், அயன், இந்திரன் முதலியோர் பல பிறவிக் காலம் தேடி நிற்க, என்னையும் தனது இனிய அருளால் இந்தப் பிறப்பில் ஆட்கொண்டு இனிமேலும் பிறவாமல் காத்தவனாய், எக்காலத்திலும் சத்தியதின் வடிவமாகவும் இருந்து அதில் எப்பொழுதும் நிலை பெறுபவனாகவும், எல்லா உயிர்களுக்கும் தானே ஒருமுதல் பொருளாகவும், எல்லா உயிர்களுக்கும் வீடுபேற்றுக்கு ஏதுவாய் இருக்கிறவன் ஆகிய நம்முடைய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.
விளக்க உரை
- எப்பிறவியும் தேட – எல்லாப் பிறவிகளிலும் தேட
- மெய்ப்பொருட்கள் தோற்றம்ஆய் – ஆன்மாவின் விளக்கமாக
- எப்பொருட்கும் தானே ஆய் – எல்லாப் பொருள்களுக்கும் பற்றுக் கோடானவன்
- மெய் – மெய்ம்மை,நிலைபேறு; வடமொழியில், `சத்து`
- மைப்பொலியும் கண்ணிகேள் – மையினை கண்களின் அழகு பொலியும்படி அணிந்துள்ளவன் என்பது நேரடி பொருள்; குற்றம் எனும் பொருளும் உண்டு என்பது பற்றி குற்றம் கொண்டமையால் மெய்ப் பொருளை காணாது இருப்பவள் எனும் பொருளும் விளங்கப் பெறும்.
- வீடு – பந்தத்தினின்றும் நீங்கிய உயிர்க்குப் புகலிடம் இறைவன் திருவடியன்றி வேறில்லை எனும் பொருள் பற்றியது
- தோற்றமாய், தானேயாய் – காரணப் பொருளாய் நின்று, பின்னர் வந்த, ‘நிலைபேறாய்’ வீடாகும் என்றவற்றோடு முறையே முடிந்தன; பொய்யறிவின்கண் தோன்றாது, மெய்யறிவின்கண் தோன்றுதலால், மெய்ம்மையையே தனக்கு இயல்பாக உடையதாயும், எப்பொருட்கும் முதல்முழு பொருளாகி, யாவைக்கும் வீடாயும் நிற்கும் என்ற பொருள் பற்றியது. மெய்ப்பொருளால் விளங்கி மெய்ப்பொருளையே அறிவது மெய்யறிவு எனும் பதிஞானம் விளங்கப் பெறும்
- எப்பிறவியும் தேட – திருமால், அயன், இந்திரன் – பல பிறப்பெடுத்தும் தேடுதல் குறித்தது; தேடுதல் – தொழில் / செயல், தேடுபவன் – கர்த்தா, தேடப்படும் பொருள் ஆகிய முதன்மைப் பொருள்