அமுதமொழி – விகாரி – மாசி – 21 (2020)


பாடல்

காயம் பலகை கவறைந்து கண் மூன்றா
யாயம் பொருவ தோரைம்பத் தோரக்கரம்
மேய பெருமா னிருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப் பறியேனே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவன் தனது மறைத்தல் சத்தியைக் (திரோதான சத்தியை) கொண்டு உயிர்களின் ஆணவ மலத்தை அவையறியாமல் நின்று பக்குவப்படுத்தி வருதல் உள்ளுறையாக உணர்த்தும் பாடல்.

பதவுரை

காயம் எனப்படுவதாகிய உடம்புடன் கூடிய ஆருயிர்களின் வாழ்க்கையில் சூது ஆட்டம் போன்றதான ஆட்டத்தில் உடம்பு பலகையாகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் சூதாட்ட கருவியாகவும், வலம் இடம் புருவ மத்தி ஆகிய மூன்றும் இடமாகவும், ஐம்பத்தோரு எழுத்துக்களும் சூதாடும் காய்கள் நிரப்பும் அறையாகவும் கொண்டு என்றும் ஆன்மாவுடன் பிரிவு இல்லாமல் நின்று பொருந்தி அருள் செய்யும் சிவபெருமான் ஆருயிர்களைக் கையாளாக வைத்து சூதாட நிற்கின்ற மாயக் கவற்றின்வழிச் செய்யும் அவனின் மறைப்பாற்றலின் பண்பை அறியேன்.

விளக்க உரை

  • கவறு – சூதுபொருவது – பொருது
  • வியப்பைத் தரும் சூது – மாயக்கவறு
  • கண் மூன்றாய் என்பதற்கு நெஞ்சம் கண்டம் புருவமத்தி என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது, சூரிய நாடி சந்திர நாடி சுழுமுனை ஆகியவற்றையும் கண் மூன்றாய் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • உயிர்களை நன்னெறியில் செல்ல ஏவிய சிவபெருமான், அதன் பொருட்டு அவைகட்கு வேண்டும் துணைப்பொருள்களை நிரம்பக் கொடுத்திருந்த போதிலும் அவைகள் அவற்றை மாற்று வழியில் செலுத்துதலால், அச்செயலை அவன் மறைந்து நின்று சூதாடி போல் மாற்றுகின்றான்; இவ்வாறு பலகை, களம், உருள் கட்டம் ஆகியவற்றை எல்லாவற்றையும் அறிகின்ற உயிர்கள் அவற்றின் வழித் தம்மை வஞ்சிக்கின்ற சிவன் ஒருவனை அவன் தம்முடன் கூடவேயிருந்தும் அறியவில்லை.
  • மறைப்பு – மறைத்தல் தொழில். அறிதல், அதன் இயல்பினை முற்றும் உணர்தல்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *