
பாடல்
உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சத்தியைச் சிவனோடன்றித் தனித்து நிற்பவளாக எண்ணுதல் கூடாமை என்பது பற்றிக் கூறப்பட்டப் பாடல்.
பதவுரை
மெய்யை வழி பற்றி, அதன் தன்மையை உணர்ந்து, அவ்வாறு உணர்ந்த வழியிலே விளங்கி நிற்கக் கூடியவராகிய சிவன் எண்ணுபவர்களுக்கு உள் ஒளியாகி நிற்பவளும், மணம் வீசக்கூடியதும் மிக நீண்டதுமான கூந்தலை உடைய மங்கை ஆகிய சத்தியுடன் எல்லா இடத்தும், தானுமாய், பேதம் இல்லாமல் இயைந்தே நிற்பான். அவ்வாறு நிற்கும் பொழுதில் தம்மை தொழுது எண்ணுகின்றவர்களுக்கே திரிபுரை நற்கதி அளித்து வழங்குவாள்.
விளக்க உரை
- உணர்ந்து – `உணர்ந்தவழி` என்பதன் திரிபு
- நிற்றல் – விளங்கி நிற்றல்
- உடனே – உடனாகியே எனும் பொருளில்
- கணித்து – மெலிந்து என்பது பற்றி தொழுது