புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல்
நல்வழி -ஔவையார்
கருத்து – மனிதர்கள் பெறும் செல்வங்கள் முன் பிறவியில் செய்தவைகளின் விளைவு எனக் கூறும் பாடல்.
பதவுரை
இந்த மண்ணில் பிறந்தவர்கள் வைத்திருக்கும் பொருள் போன பிறவியில் அவர்கள் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டு மட்டுமே. இதைத் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் அறுதியிட்டு உண்மையை உணர்ந்து சொல்லுகின்றன. ஆதலினால் இந்த உண்மைய உணர்ந்து தீமைகளை விலக்கித் தள்ளிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகும். பாவம் போய்விடும். அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும்
கருத்து – தன்னைப் போலவே உள்ளம் உருகி அன்பு செய்தால் சிவபெருமான் வெளிப்படுவான் என்பதைக் குறிப்பிடும் பாடல்.
பதவுரை
உலகில் இருப்போர்களே, நீங்களும் என்னைப் போலவே போற்றப்படுவதாகிய அன்பினைப் பெருகச் செய்து இறைவனை துதியுங்கள்; பழைய வினைகள் கெடுமாறு அன்பு கொண்டு முதல்வனாகிய சிவபெருமானை நாடுங்கள்; அவ்வாறு ஊழினை முன்வைத்து வருவதாகிய வினைகள் கெடுமாறு அன்பு செய்தால் வள்ளல் என்று போற்றப்படுபவனும், நந்தி என்று பெயர் பெற்றவனுமான சிவபெருமான் குருவாகி உங்கள் உள்ளத்தில் அன்பு பெருகுமாறு தானே வெளிப்பட்டு தனது அருள் எனக்குக் கைவந்தது போல உங்களுக்கும் கிடைக்குமாறு செய்வான்.
விளக்கஉரை
அன்பு – சகல உயிர்களிலும் ஈசன் உறைகின்றான் என்பதை உணர்ந்து உலகத்திடமும், உலக உயிர்களிடத்திலும் அன்பு செய்தல்.
கருத்து – தற்போதங்கெட இறைவன்பால் அன்பு செய்வதற்கு உரிய நெறிகள் மூன்று என்பதும், இந்நெறிகளில் நிற்பவர்களுக்கு இறைவன் வெளிப்பட்டு அருள்புரிவன் என்பதையும் உணர்த்தும் பாடல்.
பதவுரை
சிவநெறி வழிகளாகிய நல்லனவற்றை அருளும் சிவ தன்மையான சரியையை உடையவன், கிரியையையுடையவன், நல்லனவற்றை அருளும் சிவ யோக தன்மை உடையவன், நல்ல சிவஞானத்தை உடையவன் ஆகிய இவர்களில் எவராக இருப்பினும் ‘நான்’ எனும் அகங்காரம் கெடும் தன்மை கெட்டு அன்பு செய்வார்கள் எனில் ஆன்ம போதம் உடைய அவர்கள் இடத்தில் எவராலும் காணுதலுக்கு அரிதான சிவன் அப்பொழுதே வந்து தோன்றுவான் என்று அறிவாயாக.
விளக்கஉரை
சிவதன்மம், சிவயோகம், சிவஞானம் என்னும் மூவகை நெறிகளை மேற்கொண்டு அதன்படி நிற்பதால் வரும் வரும்பயன் நான் என்னும் தற்போதம் அழிதலே என்பது பெறப்படும்.
கருத்து – குறைகள் அற்றவனாகிய சிவனிடத்தில் குறையுடைய தன்னை பொறுத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
‘குறை` எனப்படுவது ஒன்றும் இல்லாது எக்காலத்திலும் நிறைவுடையவனே, எண்குணங்கள் அனைத்தும் பெற்று மலை போன்று உயர்ந்து நிற்பவனே, கூத்துகளை நிகழ்த்துபவனே, குழையணிந்த காதினை உடையவனே, ஒலி எழுப்பும் வண்டுகள் வெளியே செல்லாமல் சிறைபோன்று சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் செம்பொன் போன்ற திருமேனியினை உடையவனே! திருவாவடுதுறை திருத்தலத்தில் எழுந்து அருளுகின்ற அறவடிவினனே, அடியேனுக்கு உன்னையன்றி எனக்கு எவரும் உறவினராக இல்லை ஆதலினால் யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால் , நீ தாழ்வினை அடைவாயா, என்னை ,`அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்வாயாக.
விளக்கஉரை
குறைவிலா நிறைவே – எல்லாவற்றினும் மேலான பொருளாகிய இறைவன் ஒருவனையன்றி, குறை சிறிதும் இல்லாத நிறைவுடைய பொருள் வேறொன்றும் இல்லாமையை எதிர்மறையால் உணர்த்தியது
உறவிலேன், உறவு யார் – தமக்குத் துணைசெய்ய வல்லவர்கள் ஈசனற்றி பிறர் இல்லை என்பதை வலியுறுத்தியது
ஒரு பிழை – பிறப்பெடுத்தது
ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே – இறைவரோடு உண்டான உரிமையில் உரைத்தது
கருத்து – இறைவன் எல்லாவற்றையும் ஒடுக்கும் ஆற்றலுடையவன் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
‘தோழியே! சுடுகாட்டை வழிபாட்டுக்கு உரிய இடமாகிய கோயிலாகவும், புலித்தோலை நல்ல ஆடையாக கொண்டவனாகவும், அவனுக்குத் தாய் தந்தை என்று யாரும் இல்லாதவனாக தனியனாகவும் இருக்கிறான், இந்தத் தன்மை உடையவனோ உங்கள் கடவுள்? இது பெருமை ஆகுமா?’ என்ற தோழியின் கேள்விக்கு ‘எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தையர் இல்லாவிடினும், தனித்தே அவன் இருந்தாலும் அவன் சினம் கொண்டால் உலகம் முழுவதும் கற்பொடியாய் விடும்’ என்று ஊமையாக இருந்து மாணிக்கவாசகரால் பேசும் திறமைப் பெற்றப் பெண் விடை சொன்னாள்.
விளக்கஉரை
சாழல் என்பது மகளிர் விளையாடல்களுள் ஒன்று; இரண்டு கட்சியாய்ப் பிரிந்து விளையாடுவது. இந்த விளையாட்டில் ஒருவரின் பாடலுக்கு மற்றொருவர் அவர்கள் அக்கேள்விக்கு விடை சொல்வதுமாய் அமையும்
கோயில் – அரண்மனை
நல்லாடை – உயர்ந்த உடை
தாயும் இலி தந்தையும் இலி தான் தனியன் – எவரும் இல்லாத துணையில்லாத தனிமையன் எனும் இகழ்ச்சி
காயில் – வெகுண்டால்
அவன் சினந்து எழுந்தால் அதற்கு முன் நிற்பது ஒன்றுமில்லை என்பதால், அவனுக்குத் துணை வேண்டுவது எதற்கு என்பது விடை
பாரப்பா இங்கென்று குறியிற்சாதி பராசக்தி மூலமிது பாரு பாரு ஆரப்பா அம்மூல மார்தான் சொல்வார் அகத்தியமா முனியேகே ளுனக்காகச் சொன்னேன் நேரப்பா நீ மகனே நினைவாய் நின்று நிருவிகற்ப சமாதியிலே நீஞ்சி ஏறு வீரப்பா வெறும்பேச்சுப் பேசிடாமல் வெட்ட வெளி தனை நாடி விந்தைகாணே
யோக ஞானம்
கருத்து – முருகப்பெருமான், அகத்திய மாமுனிக்கு பராசக்தியின் மூலத்தை காட்டி அருளி நிர்விகல்ப சமாதியில் நின்று ஆச்சரியத்தை காணும்படி செய்தது பற்றி விளக்கும் பாடல்.
பதவுரை
பராசக்தியின் மூலத்தை உனக்காக உரைத்து வைத்தேன் பார்ப்பாயாக, அகத்திய மாமுனியே, என்னைவிடுத்து உனக்கு யார் அந்த மூலத்தின் மகிமையை சொல்லமுடியும். கனவு நிலையில் (நிலையற்றது) இல்லாமல் மனதை ஒருநிலைபடுத்தி நிர்விகல்ப சமாதி எனும் காண்பவர், காட்சி, காண்பது என்ற மூன்றும் ஒன்றாகிவிடும் நிலையினை தாண்டி மேலே செல்வாயாக. இதனை வெறும் பேச்சாக பேசிடாமல் உச்ச நிலைஆகிய வெட்ட வெளியினை நாடி அங்கு கிடைக்கப் பெறும் விந்தையான அனுபங்களைக் காண்பாயாக.
செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும் சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன் ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனின் திருமேனிப் பெருமைகளை உரைத்து அவனின் தாமரை போன்ற பாதங்களை அருளவேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
தேவர்கள் அனைவருக்கும் மேலான தேவனே! நஞ்சு உண்டதால் கண்டத்தில் நீல நிறம் பெற்று நீலகண்டவன் ஆனவனே! மான் கன்றினையும், மழுப்படையையும் ஏந்தி உள்ளவனாகிய சைவ சமயக்கடவுளே! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே! ஆலவாயில் தலத்தில்உறையும் அப்பனே! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக.
ஒரே பொருளாகி, இங்கு, அங்கு என்று இல்லாதவாறு எங்கும் நிறைந்து நின்றவனை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யான் அறிந்தேன்; அருவம் உடையதாகவும், உருவம் உடையாதாகவும் அண்டர் அண்டங்கள் எல்லாவற்றுக்கும் மூலக்காரண கருவாகி வந்த கணக்கினை அறிவாய்.
கூட வருவதொன் றில்லை – புழுக் கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை தேடரு மோட்சம தெல்லை – அதைத் தேடும் வழியைத் தெளிவோரு மில்லை
அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்
பதவுரை
மனித வாழ்வு முடிவுக்கு வரும்போது நல்வினைகள், தீவினைகள் தவிர்த்து வேறு எதுவும் வருவதில்லை; புழுக்கூடு என்ற இந்த உடல் எடுத்தப்பின் மனம் என்ற திங்கள் உலவுவதே துன்பம் தரத் தக்கதாகும்; மோட்சம் என்பது எது என்றும் அதன் எல்லை எனவும் அறிய இயலாது; அதனை அடையும் வழியைக் கண்டு அந்த வழியில் நின்று அது குறித்து தெளிவோரும் இல்லை.
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை விள்ள எழுதி வெடுவெ டென்ன நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத் துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச் சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங்காடே
பதினொன்றாம் திருமுறை – காரைக்காலம்மையார் – மூத்த திருப்பதிகம்
கருத்து – பேய்களின் செயல்களைக் கூறி அவ்வாறான இடத்தில் ஈசன் உறைகிறான் என்று கூறும் பாடல்.
பதவுரை
கள்ளி மரத்தின் கிளைகளுக்கு இடையில் காலை நீட்டி, எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டையை வாங்கி மசிய அரைத்து குழையாக்கி, அதை மசியாக கண்களில் எழுதி, மசியானது கண்களில் இருந்து வேறுபடுமாறு தோற்றம் கொண்டு பிறர் நடுநடுங்குமாறு சிரித்து, மருட்சி அடைந்து, நேரே பாராமல் வலமாகவும், இடமாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்து குறுக்கே நோக்கி, கோபம் கொண்டு குதித்து,சுடலை எனப்படும் சுடலையில் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தின் தீயானது சுடவும், சினக் குறிப்புக் கொண்டு மணலை அள்ளி அவிக்க, பேய்கள் நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன் தங்கியிருக்கும் இடம் திரு ஆலங்காடாகும்.
விளக்கஉரை
இறையின் மீது நாட்டம் அன்றி புவியின் மீது மனிதர்கள் ஆணவம் கொண்டு ஆடுதலை குறிக்கும் என்றும் கொள்ளலாம்.
கள்ளிக் கவடு – கள்ளி மரத்தின் கிளைகள்.
கடைக்கொள்ளி – எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டை.
மசித்தல் – மசிய அரைத்தல்.
விள்ள – கண்ணினின்றும் வேறு தோன்ற.
`வெடு, வெடு` – சினக் குறிப்பு. நகுதல் கோபச் சிரிப்பாயிற்று.
கருத்து – நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவனின் சிறப்புகளையும், திருமேனியில் இடம் பெறும் பொருள்களின் சிறப்புகளையும் கூறும் பாடல்.
பதவுரை
நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவனாகவும், சந்திரனை சூடிய வீரனாக இருப்பவனாகவும், விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன் ஆவான்.
விளக்கஉரை
தொங்கல் – (மாலை) கொன்றை
மதி – பிறை
மைந்தன் – வலியன். வீரன். விதியும் வினையும் நிதியும் எல்லாம் அவனன்றி வேறில்லை எனும் பொருள் பற்றியது
விழுப்பம் – மேன்மை.
விழுப்பம் பயக்கும் நெதி – திருவருளே தனக்கு மேலே ஒன்றில்லாச் செல்வம் என்பது பற்றியது
தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – பிறப்பு வீடு என்னும் இருவகைப் பயன்களையும் முறையே தருவனவாகிய வினையையும், தவத்தையும் செய்து அப்பயன்களைப் பெறுவார் அவரவரே என்பதனைக் கூறும் பாடல்.
பதவுரை
ஒவ்வொருவருக்கும் அவர் அவர்களே உறவினர்கள்; தமக்கான வாழ்வின் நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவர் அவர்களே; ஆதலால் அடியவர்களே! நீங்கள் அனைவரும் ‘ நாம் யார்? எம்முடையது என்று கொண்டு எம்மோடு தொடர்பு உடையது யாது? பாசம் என்பது எது? இவையெல்லாம் என்ன மயக்கங்கள்?’ என்று உணர வேண்டும்; இத்தகைய குற்றங்கள் நம்மை விட்டு நீங்க இறைவனுடைய பழைய அடியார்களோடு சேர்ந்து அந்த இறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, பொய்யான இந்த வாழ்வை நீத்துப் பாம்பு அணிந்தவனும், எமை ஆள்பவனுமாகிய பெருமானது பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.
விளக்கஉரை
தாமே – பொதுமையில் மக்களைச் சுட்டிக் காட்டியது
வினைக்கு உட்பட்ட உயிர்கள் தத்தம் வினைகளுக்கு உட்பட்டு செயல்களை நிகழ்த்துதலை கைப்பாவையை ஆட்டுவித்தலை செய்தலை போல இறைவன் ஒருவனே செய்கிறான் என்பதால் உயிர்களுக்கு தம்மைத் தவிர சுற்றம் என்று ஒருவர் இல்லை
என்ன மாயம் – எத்துணை மயக்கங்கள். உயிர், தன்னையே தலைமைப் பொருளாக நினைத்தல்
பண்டைத் தொண்டரொடும் போமாறு – பண்டைத் தொண்டர்கள் முன்பே சென்றதால், அவர் சென்ற வழியே போவோம்`
கருத்து – சிவனின் பெருமைகளை உரைத்து அவன் மாற்பேறு திருத்தலத்தில் உறைகின்றான் எனக் கூறும் பாடல்.
பதவுரை
குருந்த மரத்தடியில் இருந்து குருவாக அருளுபவனும், குருகவன் எனும் வைர வகைகளில் ஒன்றாக இருப்பதைப் போன்றவனும், கூர்மை உடையவனாக இருப்பவனும், பண்புகளில் மேன்மை உடையதான பெண், ஆண் எனும் வடிவங்களாக விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமை அம்மையால் விரும்பப்படுபவனும், துன்பம் கொள்ளூம் உயிர்களுக்கு மருந்தாக இருப்பவனும் ஆன சிவபெருமானது தலம் வளமை பொருந்திய மாற்பேறு ஆகும்.
விளக்கஉரை
குருந்தவன் – குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவன் எனும் பொருளில் ஏறக்குறைய அனைத்து இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் உடன் இருப்பவன் எனும் பொருள்பற்றி விளக்கினாலும் குருவாக இருந்து அருளுபவன் என்பது பொருந்துவதால் இக்கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – ஐயாற்றில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து மனம் உருகி நிற்கின்றேன் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
பகைவருடைய முப்புரங்களை கண்களால் நோக்கி அதனை அழித்தவனே! ஊழித்தீயிலும், சுடுகாட்டிலும் எழும் தீயில் கூத்து நிகழ்த்துபவனே! எளிதில் பெற இயலா அரிய அமுதமே! கூர்மையான மழுப்படையை ஏந்துபவனே! உயரம் குறைவான பல பூதங்களைப் படையாக உடையவனே! அழைக்க உகந்த ஆயிரம் திரு நாமங்களை உடையவனே! சந்திரனை பிறையாக சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமா இருக்கும் ஐயாற்று பெருமானே என்று பலகாலமாக வாய்விட்டு அழைத்து மனம் உருகி நிற்கின்றேன்.
தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம் தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம் தவிரவைத் தான்பிற வித்துயர் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சற்குரு அருளால் முடிவாகிய வீடுபேறு மட்டுமின்றி, இடைநிலைப் பயனாகிய இம்மைப் பயன்களும் கிட்டும் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
சற்குருவானவர் தன்னுடைய அடியார்களின் வினை நீங்குமாறு செய்யவும், ஒன்பது கோள்களினால் ஏற்படும் தீமைகள் நீங்கவும், யம தூதர்களது கூட்டம் விலகி ஓடவும், பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்து அருளினான்.
கருத்து – ஈசனின் செயற்கரிய செயல்களை உரைத்து தன்னையும் காக்க வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
கங்கை நதியினை தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்களுக்குத் தலைவனே, காலன் ஆகிய எமனுக்கு காலனே, காமன் உடலினை நெருப்பாகி அதனை எரித்தவனே, அலை மிகுந்து தோன்றும் பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அதை கண்டத்தில் உடையவனே, உயிர்களுக்கு முதல்வனாக இருப்பவனே, அற வடிவமாக இருப்பவனே, மாசு படாமல் எக்காலத்திலும் தூயோனாக இருப்பவனே, செம்மையான கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை ஊர்தியாக உடையவனே, தெளிந்த தேன் போன்றவனே, இறைவனே, தேவர்களிடத்தில் ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்து அருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உன்னை அன்றி உறவாக யாவர் உளர்! என்னை ‘அஞ்சேல்’ என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.
விளக்கஉரை
‘அமரர்கட்குத் தலைவனே’ என அருளாது ‘அமரர்கள் ஏறே’ என , உருவகித்து அருளியது முதன்மையின் சிறப்பு பற்றியது
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில்
நல்வழி – ஔவையார்
கருத்து – மனிதர்கள் வினைபற்றி இருக்கும் போது அது குறித்து துயரப்பட்டு இறத்தலே தொழிலாக இருப்பதைக் குறிக்கும்பாடல்.
பதவுரை
வருத்தப்பட்டு எத்தனை முயன்று அழைத்தாலும் நமக்குச் சேராதவைகள் நம்மிடத்தில் வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருத்தி நிற்பவைகள் நம்மை விட்டுப் போகவேண்டும் என்றால் அது எக்காலத்திலும் போவதும் இல்லை. இவ்வாறு வினைகள் பற்றி மனிதர்களின் வாழ்வு இருக்கும் போது ஒன்றை அடையவேண்டும் என்னும் ஏக்கம் கொண்டு நெஞ்செல்லாம் புண்ணாகும்படி வருந்தி நெடுந்தூரம் திட்டமிட்டுக் கொண்டிருந்து மரணிப்பதே மாந்தரின் தொழிலாகப் போய்விட்டது.
பித்ரு யாகம் பற்றியும், அது செய்யத்தக்க காலம் பற்றியும், அதை எவ்வாறு செய்வது என்பது பற்றியும் அதைச் சொல்லக்கடவீர்.
மகேஸ்வரர்
பித்ருக்கள் புண்ணியர்களாகவும், தேவர்களுக்கும் மேலானவர்களாகவும், அனைவரும் பூஜிக்கத் தக்கவர்களாகவும், எப்பொழுதும் பிரகாசம் உடையவர்களாகவும், தென் திசையைச் சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
புவியில் உள்ள உயிர்கள் மழையை எதிர்ப்பார்த்து காத்திருப்பது போல் பித்ருக்கள் உலகில் நடக்கும் சிராத்தத்தினை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். குரு ஷேத்திரம், கயை, கங்கை, சரஸ்வதி நதிக்கரைகள் சிராத்தத்திற்கு உரியவை. இங்கு செய்யும் சிராத்தம் பெரும் பயன் தரும். புண்ணியதிருத்தலங்களும், புண்ணிய நதிக்கரைகளும், மனிதர்கள் அற்ற வனங்களும், ஆற்று மணல் நிறைந்த இடங்களும் சிராத்தத்திற்கு உரித்தான இடங்களாகும். மாசி புரட்டாசி மாதங்கள், தேய்பிறை ஆகிய கிருஷ்ணபட்சம், அமாவாசை, திரயோதசி, நவமி ஆகிய திதிகளில் சிராத்தம் செய்யத்தக்க காலங்கள் ஆகும். முற்பகல், வளர்பிறை, இரவுப்பொழுது, ஜன்ம நட்சத்திரம், இரட்டித்த திதிகள் போன்றவற்றை சிராத்தம் செய்ய விலக்க வேண்டும்.
பித்ருயாகத்தின் குற்றங்கள் திலத்தினால் விலகும். பச்சைபயறு, உளுந்து போன்ற தானியங்களால் பித்ருக்குகள் திருப்தி அடைவர். பசுவின் நெய், பாயசத்தினால் ஒருவருடமும், எள்ளோடு சேந்த பாயசம், தேன் போன்றவற்றால் பன்னிரெண்டு வருட காலமும் திருப்தி அடைவார்கள். சிராத்தம் செய்யப்படும் இடத்தில் வெளிப்படையாகவும், ரகசியாகவும் பேசுதல் கூடாது.
புத்திரனை விரும்புவன் ‘பித்ருக்களே, தாமரை மாலை அணிந்த குமாரனை கர்பத்தில் அருளுங்கள்‘ என்று செபித்து நடு பிண்டத்தை மனைவியை உண்ணச் செய்ய வேண்டும்.
இவைகளை தினம், ஒவ்வொரு மாதம், வருடத்திற்கு நான்குமுறை, வருடத்திற்கு இருமுறை என்ற வகையில் தன் சக்திக்கு தகுந்த அளவில் செய்யலாம்.
இந்த பித்ரு யாகங்கள் பகைவர்களை கெடுத்து, குலத்தைப் பெருக்கும் என்பதால் மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆரோக்கியம் உடையவவர்களாகவும், சந்ததி உடையவவர்களாகவும், தனதான்யம் உடையவவர்களாகவும் இருப்பார்கள்
செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு முத்திதான் இல்லையடி குதம்பாய் முத்திதான் இல்லையடி எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய் அங்கத்துள் பார்ப்பாயடி
அருளிய சித்தர் : குதம்பைச்சித்தர்
பதவுரை
காதுகளில் குதம்பையினை அணிந்த பெண்ணே, உயிர்வாழவும், நிலை இல்லா இன்பம் தருவதுமான இகலோக வாழ்வின் தேவை குறித்து நினைவு கொண்டு இருப்பவர்களுக்கு நிலைத்த இன்பம் தருவதும், பேரின்பமும் ஆன முக்தி இல்லை. அணுமுதல் அண்டம் வரை எங்கும் எவ்விடத்தும் எக்காலத்திலும் நிறைந்து இருக்கும் பரம்பொருள் எனப்படும் ப்ரமத்தினை சோதி வடிவாக அங்கத்துள் (உபதேசித்தப்படி) சூட்சமமாக பார்ப்பாயாக