அமுதமொழி – பிலவ – சித்திரை – 16 (2021)


பாடல்

பாரப்பா இங்கென்று குறியிற்சாதி
     பராசக்தி மூலமிது பாரு பாரு
ஆரப்பா அம்மூல மார்தான் சொல்வார்
     அகத்தியமா முனியேகே ளுனக்காகச் சொன்னேன்
நேரப்பா நீ மகனே நினைவாய் நின்று
     நிருவிகற்ப சமாதியிலே நீஞ்சி ஏறு
வீரப்பா வெறும்பேச்சுப் பேசிடாமல்
     வெட்ட வெளி தனை நாடி விந்தைகாணே

யோக ஞானம்

கருத்து – முருகப்பெருமான், அகத்திய மாமுனிக்கு பராசக்தியின் மூலத்தை காட்டி அருளி நிர்விகல்ப சமாதியில் நின்று ஆச்சரியத்தை காணும்படி செய்தது பற்றி விளக்கும் பாடல்.

பதவுரை

பராசக்தியின் மூலத்தை உனக்காக உரைத்து வைத்தேன் பார்ப்பாயாக, அகத்திய மாமுனியே, என்னைவிடுத்து உனக்கு யார் அந்த மூலத்தின் மகிமையை சொல்லமுடியும். கனவு நிலையில் (நிலையற்றது) இல்லாமல் மனதை ஒருநிலைபடுத்தி நிர்விகல்ப சமாதி எனும் காண்பவர், காட்சி, காண்பது என்ற மூன்றும் ஒன்றாகிவிடும் நிலையினை தாண்டி மேலே செல்வாயாக. இதனை வெறும் பேச்சாக பேசிடாமல் உச்ச நிலைஆகிய வெட்ட வெளியினை நாடி அங்கு கிடைக்கப் பெறும் விந்தையான அனுபங்களைக் காண்பாயாக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 11 (2020)


பாடல்

கொள்ளாத பசுவுக்குப் பாலங்கேது
   குருடான கண்ணுக்கு வெளிச்சமேது
சொல்லாத பேச்சுக்குக் கேள்வியேது
   சோரஞ்செய் மங்கையர்க்கு வாழ்வுமேது
கல்லாத வீணருக்குக் கல்வியேது
   காணா பேர்களுக்கு காட்சியேது
விள்ளாத சிடனுக்குக் குருவுமேது
   வேடிக்கையாய்த் திரிந்தால் விழலாம்பாரே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துகிட்டாதவை என்பதை உதாரணங்களாக காட்டி மனித வாழ்வினில் வேடிக்கையாக பொழுதினை போக்கி திரிதல் கூடாது என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

பசு தயாராக இருந்தாலும் அதை ஏற்காத கன்றுக்கு பால் எங்கனம் கிடைக்கும்? பார்வை அற்ற கண்களை உடையவர்களுக்கு வெளிச்சம் என்பது எங்கனம் இருக்கும்? உச்சரித்து சொல்லப்படாத சொல் குறித்து கேள்வி என்பது எப்படி எழும்? தர்ம நெறி விலகிய கற்பு இல்லா மங்கையர்களுக்கு வாழ்வு என்பது எங்கனம் கிட்டும்? நூல்களைக் கல்லாதவருக்கு கல்வி எங்கனம் கிட்டும்? மெய்ஞானம் அடைதல் பொருட்டி விரும்பி அதன் பாதையில் செல்லாதவர்களுக்கு காட்சி எங்கனம் கிட்டும்? தெளிவு அடைதல் பொருட்டு வாய் திறக்காத சீடனுக்கு குருவானவர் எங்கனம் கிட்டுவார்? இவை போல பிறப்பின் நோக்கம் அறியாமல் வேடிக்கையாக திரிந்தால் மண்ணில் விழ மட்டுமே செய்யும்.

விளக்க உரை

  • விள்ளுதல் – மலர்தல், உடைதல், வெடித்தல், பிளத்தல், பகைத்தல், மாறுபடுதல், தெளிவாதல், நீங்குதல், சொல்லுதல், வெளிப்படுத்துதல், வாய் முதலியன திறத்தல், புதிர் முதலியன விடுத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 7 (2019)

பாடல்

அடைத்திடவே சிலம்பொலியுங் கேட்டேன் யானும்
     ஐயையா காதிரண்டும் அடைத்துப் போச்சு
படைத்திடவே ரோசமென்ற வெக்கம் போச்சு
     பரிவான மயில் மீதில் பாய்ந்து சென்றேன்
வடைத்திடவே வாசியின் மேற் சொக்கிக் கொண்டேன்
     வயிரமங்கே யிருக்கின்ற வகையுங் கண்டேன்
முடைத்திடவே மும்மூலங் கொண்டதாலே
     முருகனென்று யெந்தனுக்குப் பேரு மாச்சே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துமுருகன் என பெயர் பெற்றதை தன்நிலை விளக்கமாக அருளும் பாடல்.

பதவுரை

அப்பொழுது யானும் சிலம்பொலியினைக் கேட்டேன்; அதன் காரணத்தால் காது இரண்டும் அடைத்துப் போனது;  ரோசம், வெட்கம் ஆகியவை விட்டகன்றது; இரக்கம் தருவதான மயில் மீது ஏறி பறந்து சென்றேன்; வாசி வழி பற்றி நின்றதால் மனம் மயங்கி நின்றது. வைரம் போன்ற தன்மை உடைய மெய்ப்பொருளின் வகையினைக் கண்டேன்; மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார் என்பதாலும். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்து, மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை  விளங்கிக் கொண்டவர் என்பதாலும், கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை என்பதாலும் எனக்கு முருகன் என்று பெயர் ஆனது.

விளக்க உரை

  • பல விளக்கங்கள் குரு மூலமாக அறியக்கூடியவை. உ.ம் சிலம்பொலி. ‘சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை‘ எனும் பாடல் வரிகொண்டும், வள்ளலார் பாடல்கள் மூலமும், தச தீட்சை மூலமாகவும் பல விளக்கங்கள் அளிக்க இயலும். குருவருள் பெற்று குரு மூலமாக பொருள் அறிக.
  • சொக்குதல்-மயங்குதல், மனம் பிறர்வசமாதல், பிறரை மயங்குமாறு ஒழுகுதல்

(இப் பாடலுக்கான விளக்கத்தின் ஒரு பகுதி சித்தர்களுக்கு தலைவரான அகத்திய மாமுனியால் அருளப் பெற்றது. அவரின் பாடல்களைக் கொண்டு அவர் குருவான முருகனைப் பற்றி விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)

மதனா அண்ணா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 23 (2019)

பாடல்

ஆச்சப்பா உருவாகித் திருவு மாகி
     அண்டசரா சரங்கள் எல்லாம் நிறைந்து நின்றேன்
பூச்சப்பா மனமாகி ஒன்ற தாகிப்
     புவிதனிலே மதிதேய்ந்து ரவியிற் கூடி
வாச்சப்பா வாசியென்ற மயிலி னாலே
     வஸ்தான வஸ்தாகி மேலே நின்றேன்
மூச்சப்பா மூச்சற்ற இடமும் கண்டேன்
     முருகன் என்றும் எந்தனுக்குப் பேருமாச்சே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துமுருகன் தன் பெயர் காரணத்தை கூறி உருவம் உடையவராகவும், அண்டசராசங்களாகவும் நிறைந்து நின்றதை கூறிய பாடல்.

பதவுரை

சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படுவதும், பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதானதும், தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் ஆனதுமான உருவ வடிவம் கொண்டும், மதிப்பிற்குரியதும், மேன்மை உடையதும், சிறப்புடையதும், தெய்வத்தன்மை உடையதுமான திரு எனும் படியும், பஞ்ச பூதங்களின் வடிவமாகவும், அனைத்தும் ஈசன் வடிவமாகவும் இருக்கும் அண்ட சராசரங்கள் எல்லாமும் நீக்கமற நிறைந்து நின்றேன்; அந்தக்கரணங்களில் முதன்மையான மனம் ஆகி, அதனால் குறிக்கப்பெறும் மெய்பொருளான ஒரு பொருளாகி இந்த புவிதனில் ஆணவ, மாயை, கன்மங்கள் ஆகிய இருள் மறைந்து, பேரொளி கூடியது போல், தயாவடிவாய் மோக மதங்கள், தத்துவங்கள் நஷ்டம் ஆகுமாறு, நாசம் செய்து,  அவற்றின் அக்கிரமம், அதிக்கிரமம் கெட்டு கிரம மாத்திரம் கொண்டு, பூர்வ வாசனாதிகள் பல வண்ணமாய் விரிந்து ஆடும் மயில் மீது ஏறி அசைய ஒட்டாது மத்தியில் வாசியினைப் பற்றி ஏறி, மூச்சற்ற இடம் கண்டதால் எனக்கு  இளமை உடையவன், அழகியோன், கடவுள் தன்மை உடையோன் எனும் முருகன்  என்று பெயரானது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும்குருவருளால் காட்டப் பெற்றாலும் வினையின் காரணமாக உணர்தலில்எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்நிறை எனில் குருவருள்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 16 (2019)

பாடல்

வழுத்துகிறேன் என்மகனே மாணா கேளு
   வல்லவர்க்குப் பிள்ளை என்றவகையும் சொல்வேன்
அழுத்துகிற ஆத்தாளை அவர்க்கே ஈந்தேன்
   அதனாலே அரனுக்குப் பிள்ளை என்றார்
தொழுத்துகிற அவரையுந்தா நின்று யானும்
   துய்யவெளி உபதேசம் துரந்து சொல்லி
வழுத்துகிறேன் அதனாலே ஆசானென்று
   அல்லோரும் எனைத் தானும் அருளினாரே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துசிவன் தனக்கு தந்தையாகவும், மகனாகவும் ஆன ரகசியத்தை முருகப் பெருமான் அகத்தியர் கேட்டதற்கு இணங்க அவருக்கு கூறியது.

பதவுரை

என் மகனாகவும், என் மாணவன் ஆனவனாகவும் ஆன உன்னை வாழ்த்துதல் செய்கின்றேன். வலிமை உள்ளவனும் சமர்த்தவனும் ஆகியவருக்கு எவ்வாறு மகன் ஆனேன் என்று உரைக்கிறேன். தனது ஆத்தாள் ஆகிய பார்வதி தேவியை அவள் விரும்பியவாறு ஈசனாருக்கு கொடுத்தேன். அதனாலே  ஈசனார் ஆகிய அவரை விட இளமை உடைய இளைஞன் ஆனேன். தனக்கு ஞான உபதேசம் செய்யும் படி விரும்பி நின்ற அவரை, தூயவெளி என்பதும், வெட்டவெளி என்பதும் ஆகாசம் என்பதும் ஆன இடம் காட்டி உபதேசம் காட்டி அருளியதால் அவருக்கு ஆசான் ஆனதால் அவருக்கு மெய்ஞானத் தந்தை ஆனேன் என்று அல்லாதவர்களும் கூறியது குறித்து தன்னைப்பற்றி அருளினார்.

விளக்க உரை

  • வழுத்துதல் – வாழ்த்துதல், துதித்தல், அபிமந்திரித்தல்
  • அழுத்துதல் – அழுந்தச்செய்தல், பதித்தல், உறுதியாக்குதல், வற்புறுத்துதல், அமிழ்த்துதல், எய்தல்.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 3 (2019)

பாடல்

வீடென்ற வீடகத்தி னுண்மை காண
விளம்பிடுவேன் வெட்டவெளி யாகத்தானே
ஆடென்ற அரனவருஞ் சடா பாரத்தில்
அம்பிகையைச் சுமந்த வகை யறிந்து கொள்வீர்
நாடென்ற பிரமாவும் நாவிற் பெண்ணை
நயந்து வைத்தும் நானிலத்தில் நயமுற்றெய்தார்
சேடனெற்ற விட்ணுவுந் தன் னெஞ்சிற் றானே
சித்தமுடன் ஓர் மாதை வைத்திட்டாரே

சுப்ரமணியர் ஞானம்

பதவுரை

வீடு என்கின்ற உடம்பில் இருந்து முத்தியுலகத்தில் புகுவதாகிய அக வீட்டில் உண்மையாய் காணும் வழியையும், அகத்தினுள் புகுந்திடும் சூட்சமத்தை வெளிப்படையாக கூறுகிறேன். நடனத்தை பிரதானமாக உடைய சிவபெருமான் தன் தலை முடியில் கங்கையும், தன் உடம்பில் பாதி அம்பிகையையும் சுமந்து கொண்டு இருக்கிறார்; வினைகளை ஆராய்ந்து அதன் வழி உயிர்களைப் படைக்கும் பிரம்மாவும் தன் நாவில் சரஸ்வதியை விருப்பமுடன் வைத்தே இந்த நானிலத்தை படைக்கிறார்; இளமை உடையவனானவனும், பெரியவனானவனும், கடவுளானவனும் ஆன விஷ்ணு தன் மார்பில் மகாலெட்சுமி ஆகிய வைத்திருக்கிறார்; இவர்கள் பெண் சக்தி துணை இல்லாமல் எதனையும் அடைய முடியாது என்று மூவரும் உணர்த்துகிறார்கள்; இதை உணர்ந்து இல்லற தர்மத்தில் இருந்துகொண்டே இறைநிலையை அடைய உண்மையில் தியானம் செய்வீர்.

விளக்க உரை

  • சிவசக்தி ரூபகத்தை தன்னுள் காண வலியுறுத்துதல்.
  • சேடன் – ஆதிசேடன், நாகலோகவாசி,, நெசவுச்சாதியார், அடிமைக்காரன், கட்டிளமையோன், பெரியோன், தோழன், காதலுக்குத் துணைபுரிபவன், கடவுள்
  • சித்தர் பாடல் என்பதால், பல சூட்சங்கள் அடங்கியது என்பதாலும், ஆதார சக்கரங்கள் முன்வைத்து உரைக்கப்படுவதாலும், பாடலின் கருத்துக்கள் மறை பொருளாக உரைக்கப்பட்டுள்ளன. மேலும் அறிய விருப்பம் உள்ளவர்கள் குரு முகமாக பெறுக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 1 (2018)

பாடல்

கூடுவது லகுவல்ல வாய்ப்பேச்சல்ல
கோடியிலே ஒருவனடா குறியைக் காண்பான்
ஆடுவது தில்லையிலே காலைத் தூக்கி
அம்பரமாமாம்பலத்தில் ஆட்டைப் பார்த்து
நாடுவது சதாகாலம் நாட்டம்பாரு
நமனேது நமனேது நாசமாகும்
பாடுவது அனுராக மனந்தங்கேட்கப்
பச்சை மயிலேறியுந்தான் பாய்ந்தேன் பாரே

சுப்ரமணியர் ஞானம்

பதவுரை

இறைவனுடன் ஒன்றாகி கலத்தல் என்பது எளிதான செயலல்ல; அது பேச்சால், வெறும் ஞானத்தால் வருவது அல்ல; கோடியிலே ஒருவன் மட்டுமே அதை குறிக்கோளாகக் கொண்டு அந்த நோக்கத்தை அடைவான்; ஆன்மாக்களின் ஆணவத்தை அழிப்பதை குறிக்கும், காலை தூக்கி ஆடும்  தில்லை நடனம் எனும்  தில்லைக் கூத்தினை ஆகாயம் எனும் வெட்ட வெளியில் பார்த்து அதை நாடு; எல்லா காலங்களிலும் அதை விரும்பிக் கொள்;  அவ்வாறு கொண்டப்பின் எமன் ஏது? அனைத்து வினைகளும் நாசமாகும். மனதில், அனுராகம் என்றும் அன்பு என்றும் பொருள்தரும்  மிக உயர்ந்த உச்ச நிலை ஆகிய அன்புநிலை கொள்ளும் போது, பச்சை மயில் ஏறி, வாசியின் மூலம் பரவினேன்.

விளக்க உரை

  • சுப்ரமணியர்  அகத்தியருக்கு உபதேசம் செய்தது
  • இறைவனின் தில்லை நடனம் அவனது ஐந்தொழில்களை, படைப்பு, காப்பு, லயம், மறைப்பு, அருளல், என்ற ஐந்து செயல்களை சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொன் பதிக் கூத்து, பொன் தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து எனும் கூத்து வடிவில் குறிக்கிறது. 
  • இத் தில்லைக் கூத்தை குண்டலினி யோகத்தின் உச்சிநிலையில் காண்பதைக் குறிக்கும்.
  • வாலை அல்லது குண்டலினியின் நிறம் பச்சை என்றும், குண்டலினி யோகத்தின்போது மூச்சு சுழுமுனையில் பயணிப்பதால் அவ்வாறு பச்சை நிறம் தோன்றும் என  சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.  (மேல் விபரங்கள் குருமுகமாக அறிக)

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

போக வடிவம் என்பது என்ன?
கல்யாண சுந்தரர் போல் உயிர்களுக்கு இன்பத்தை வழங்கும் திருமேனி

 

(சித்தர்கள் பாடல் என்பதால் இப் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

சமூக ஊடகங்கள்