
பாடல்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே
ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஐயாற்றில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து மனம் உருகி நிற்கின்றேன் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
பகைவருடைய முப்புரங்களை கண்களால் நோக்கி அதனை அழித்தவனே! ஊழித்தீயிலும், சுடுகாட்டிலும் எழும் தீயில் கூத்து நிகழ்த்துபவனே! எளிதில் பெற இயலா அரிய அமுதமே! கூர்மையான மழுப்படையை ஏந்துபவனே! உயரம் குறைவான பல பூதங்களைப் படையாக உடையவனே! அழைக்க உகந்த ஆயிரம் திரு நாமங்களை உடையவனே! சந்திரனை பிறையாக சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமா இருக்கும் ஐயாற்று பெருமானே என்று பலகாலமாக வாய்விட்டு அழைத்து மனம் உருகி நிற்கின்றேன்.
விளக்கஉரை
- ஆரார் – பொருந்தார்; பகைவர்
- குறள் – குறுகிய வடிவம்
- ஆயிரம் – அளவின்மை
- அரற்றி – வாய்விட்டு அழைத்து
- நைகின்றேன் – மனம் உருகி நிற்கின்றேன்