பாடல்
என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – தன்னைப் போலவே உள்ளம் உருகி அன்பு செய்தால் சிவபெருமான் வெளிப்படுவான் என்பதைக் குறிப்பிடும் பாடல்.
பதவுரை
உலகில் இருப்போர்களே, நீங்களும் என்னைப் போலவே போற்றப்படுவதாகிய அன்பினைப் பெருகச் செய்து இறைவனை துதியுங்கள்; பழைய வினைகள் கெடுமாறு அன்பு கொண்டு முதல்வனாகிய சிவபெருமானை நாடுங்கள்; அவ்வாறு ஊழினை முன்வைத்து வருவதாகிய வினைகள் கெடுமாறு அன்பு செய்தால் வள்ளல் என்று போற்றப்படுபவனும், நந்தி என்று பெயர் பெற்றவனுமான சிவபெருமான் குருவாகி உங்கள் உள்ளத்தில் அன்பு பெருகுமாறு தானே வெளிப்பட்டு தனது அருள் எனக்குக் கைவந்தது போல உங்களுக்கும் கிடைக்குமாறு செய்வான்.
விளக்க உரை
- அன்பு – சகல உயிர்களிலும் ஈசன் உறைகின்றான் என்பதை உணர்ந்து உலகத்திடமும், உலக உயிர்களிடத்திலும் அன்பு செய்தல்.
- தன் அன்பு, என்புழி அன்பு – அருள்
- தலை நின்றவாறு – செய்வன்