செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும் சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன் ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனின் திருமேனிப் பெருமைகளை உரைத்து அவனின் தாமரை போன்ற பாதங்களை அருளவேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
தேவர்கள் அனைவருக்கும் மேலான தேவனே! நஞ்சு உண்டதால் கண்டத்தில் நீல நிறம் பெற்று நீலகண்டவன் ஆனவனே! மான் கன்றினையும், மழுப்படையையும் ஏந்தி உள்ளவனாகிய சைவ சமயக்கடவுளே! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே! ஆலவாயில் தலத்தில்உறையும் அப்பனே! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக.
மூலவர் புஷ்பவனேஸ்வரர் – திரிசூலமும், சடைமுடியும் கொண்ட சுயம்புலிங்கத் திருமேனி
பசுவை வதைத்த பாவம் , பித்ரு சாபம் ஆகியவற்றை நீக்கவல்லத் தலம்
வடக்கு நோக்கி உத்தரவாகினியாக பாயும் சிறப்புடைய வைகைக்கரையில் அமைந்துள்ள தலம்
கோபுர விநாயகர், குடைவரை விநாயகர், அனுக்ஞை விநாயகர், மகா கணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி பெறவும், யாகம் சிறப்புறவும் அருளும் விநாயகர்கள், பாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் அருள்பாலிக்கும் தலம்
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக காட்சி அளித்ததால் ஆற்றைக் கடந்து மிதித்துச் செல்லாமல் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடியத் தலம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவனாரை வழிபட ஏதுவாக நந்தி விலகி வழிவிட்டு சாய்ந்தகோலத்தில் இருக்கும் தலம்
பாண்டியநாட்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் மூவராலும் பாடப் பெற்ற தலம்
கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம்
இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் – மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபம், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபம்
குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை முடியாகச் சூடிக்கொண்டதால் நெல்முடிக்கரை
பொன்னையாள் எனும் பெண் பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தும், போதிய நிதி இல்லாததால் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்த இடம்(36 வது திருவிளையாடல்)
சுச்சோதி எனும் மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்து, ஆற்றில் தட்சணை பொருட்களான பிண்டங்களை கரைக்க முற்பட்டபோது, முன்னோர்களே நேரடியாக வந்து கையில் வாங்கி கொண்டதால் காசியை விட வீசம்(முன்காலத்து அளவை) அதிகம் புண்ணியம் தரும் புஷ்பவன காசி எனும் பெருமைப் பெற்றத் தலம்
சிவலிங்கத்தைக் கதிரவன் (சூரியன்) வழிபட்டு, நவக்கிரகங்களுக்கும் தலைவனாக இருக்கும் வரம் பெற்றத் தலம்
பிரம்ம தேவன் அறிந்து செய்த பாவத்தை நீக்கிய திருத்தலம்
மகாவிஷ்ணு சலந்திரனைக் கொல்ல சக்கராயுதம் பெற்ற திருத்தலம்.
காளிதேவி, சிவலிங்கம் வைத்து பூசித்த திருத்தலம்
தருமஞ்ஞன் என்ற அந்தணன் காசியில் இருந்து கொண்டு வந்த அஸ்திக் கலசத்தில் இருந்த எலும்புகள் பூவாய் மாறிய திருத்தலம்
செங்கமலன் என்பவனின் பாவங்கள் அனைத்தையும் நீக்கிய திருத்தலம்
திருமகளின் சாபம் தீர்ந்த இடம்
பார்வதி தேவி இறைவன் திருவருள் வேண்டித் தவம் செய்த திருத்தலம்
சலந்திரன் என்ற தவளைக்குச் சக்கரவர்த்தியாய் இருக்கும் படியான வரம் அருளப்பட்ட திருத்தலம்
நள மகாராஜாவிற்கு கலிகாலத்தின் கொடுமையை அகற்றி அவனுக்கு மனச்சாந்தி அளித்த திருத்தலம்
மாந்தியந்தின முனிவருக்கும் தியானகாட்ட முனிவருக்கும் சிவபெருமான் சிதம்பர நல் உபதேசம் வழங்கிய இடம்
தாழம்பூ தான் பொய் சொல்லி உரைத்த பாவம் நீங்க வேண்டி, சிவபெருமானை வணங்கி வழிபட்ட திருத்தலம்
உற்பலாங்கி என்ற பெண் நல்ல கணவனை அடையப்பெற்று தீர்க்க சுமங்கலியாய் வாழும் வரம் பெற்றத் தலம்
திருப்பூவணத் திருத்தலத்தின் பெருமைகள் விரிவாகப் பாடும் நூல்கள் – கடம்பவனபுராணம். திருவிளையாடற் புராணம்
கந்தசாமிப்புலவர் எழுதியது – திருப்பூவணநாதர் உலா, திருப்பூவணநாதர் மூர்த்தி வகுப்பு, தலவகுப்பு,திருப்பூவணப் புராணம் என்ற நூல்கள்
மணிகர்ணிகை , வைகை நதி , வசிஷ்ட தீர்த்தம் , இந்திர தீர்த்தம்
விழாக்கள்
வைகாசி விசாகத் திருவிழா, ஆடி முளைக்கொட்டு உற்சவம், ஆடி மாத / நவராத்திரி கோலாட்ட உற்சவங்கள், விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி காலங்களில் சிறப்பு வழிபாடுகள், புரட்டாசி நவராத்திரி உற்சவம், ஐப்பசி கோலாட்ட உற்சவம், கார்த்திகை மகாதீப உற்சவம், மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம், மாசி மகா சிவராத்திரி உற்சவம், பங்குனி நடைபெறும் 1௦ நாட்கள் உற்சவம்
மாவட்டம்
சிவகங்கை
முகவரி / திறந்திருக்கும் நேரம்
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் திருப்பூவணம் அஞ்சல், இராமநாதபுரம் மாவட்டம் PIN – 623611
தேவாரத்தலங்களில் 202 வதுதலம் பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 11 வது தலம்
பாடியவர் திருநாவுக்கரசர் திருமுறை 6 பதிக எண் 18 திருமுறைஎண் 1
பாடல்
வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
பொருள்
சோலைகளுடன் இருக்கும் திருப்பூவணம் எனும் திருத்தலத்தில் விரும்பி எழுந்தருளி இருக்கும் புனிதராகிய சிவபெருமான், அடியார்களுடைய மனக்கண்ணின் முன்னர் கூர்மையான மூவிலைச் சூலமும், நீண்டு வளர்ந்ததாகிய சடைமீது அணிந்த பிறையும், நறுமணம் மிக்க கொன்றைப் பூவினால் ஆகிய மாலையும், காதுகளில் கலந்து தோன்றும் வெண்மையான தோடும், இடிபோல பிளிர்தலை செய்து வந்த யானையின் தோலினை உரித்து போர்வையாக போர்த்தியும், அழகு விளங்கும் திருமுடியும், திருநீறணிந்த திருமேனியும் கொன்டவராக காட்சியில் விளங்குகிறார்.
பாடியவர் சுந்தரர் திருமுறை 7 பதிக எண் 11 திருமுறைஎண் 8
தீய எண்ணங் காரணமாக, தனது இடமாகிய கயிலையை பெயர்த்து எடுக்க முற்பட்ட போது நகை செய்து, அவன் நெரியுமாறு, விரலால் சிறிதே ஊன்றியவனும், தன்னையே உருகி நினைப்பவரது ஒப்பற்ற நெஞ்சிலே உட்புகுந்து, எக்காலத்திலும் நீங்காது உறைபவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?