அமுதமொழி – பிலவ – சித்திரை – 6 (2021)


பாடல்

தாமே தமக்குச் சுற்றமும்
   தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
   என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
   அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
   புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – பிறப்பு வீடு என்னும் இருவகைப் பயன்களையும் முறையே தருவனவாகிய வினையையும், தவத்தையும் செய்து அப்பயன்களைப் பெறுவார் அவரவரே என்பதனைக் கூறும் பாடல்.

பதவுரை

ஒவ்வொருவருக்கும் அவர் அவர்களே உறவினர்கள்; தமக்கான வாழ்வின் நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவர் அவர்களே; ஆதலால் அடியவர்களே! நீங்கள் அனைவரும் ‘ நாம் யார்? எம்முடையது என்று கொண்டு எம்மோடு தொடர்பு உடையது யாது? பாசம் என்பது எது? இவையெல்லாம் என்ன மயக்கங்கள்?’ என்று உணர வேண்டும்;  இத்தகைய குற்றங்கள் நம்மை விட்டு நீங்க இறைவனுடைய பழைய அடியார்களோடு சேர்ந்து அந்த இறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, பொய்யான இந்த வாழ்வை நீத்துப் பாம்பு அணிந்தவனும், எமை ஆள்பவனுமாகிய பெருமானது பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

விளக்கஉரை

  • தாமே – பொதுமையில் மக்களைச் சுட்டிக் காட்டியது
  • வினைக்கு உட்பட்ட உயிர்கள் தத்தம் வினைகளுக்கு உட்பட்டு செயல்களை நிகழ்த்துதலை கைப்பாவையை ஆட்டுவித்தலை செய்தலை போல இறைவன் ஒருவனே செய்கிறான் என்பதால் உயிர்களுக்கு தம்மைத் தவிர சுற்றம் என்று ஒருவர் இல்லை
  • என்ன மாயம் – எத்துணை மயக்கங்கள். உயிர், தன்னையே தலைமைப் பொருளாக நினைத்தல்
  • பண்டைத் தொண்டரொடும் போமாறு – பண்டைத் தொண்டர்கள் முன்பே சென்றதால், அவர் சென்ற வழியே போவோம்`
  • அமைமின் – ஒருப்படுங்கள்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.