அமுதமொழி – பிலவ – சித்திரை – 1 (2021)


பாடல்

கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துஈசனின் செயற்கரிய செயல்களை உரைத்து தன்னையும் காக்க வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

கங்கை நதியினை தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்களுக்குத் தலைவனே,  காலன் ஆகிய எமனுக்கு காலனே, காமன் உடலினை நெருப்பாகி அதனை எரித்தவனே,  அலை மிகுந்து தோன்றும் பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அதை கண்டத்தில் உடையவனே,  உயிர்களுக்கு முதல்வனாக இருப்பவனே, அற வடிவமாக இருப்பவனே, மாசு படாமல் எக்காலத்திலும் தூயோனாக  இருப்பவனே, செம்மையான கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை ஊர்தியாக உடையவனே, தெளிந்த தேன் போன்றவனே, இறைவனே, தேவர்களிடத்தில் ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்து அருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உன்னை அன்றி உறவாக யாவர் உளர்! என்னை ‘அஞ்சேல்’ என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.

விளக்கஉரை

  • ‘அமரர்கட்குத் தலைவனே’ என அருளாது ‘அமரர்கள் ஏறே’  என , உருவகித்து அருளியது முதன்மையின் சிறப்பு பற்றியது

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.