
பாடல்
செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு
முத்திதான் இல்லையடி குதம்பாய்
முத்திதான் இல்லையடி
எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி
அருளிய சித்தர் : குதம்பைச்சித்தர்
பதவுரை
காதுகளில் குதம்பையினை அணிந்த பெண்ணே, உயிர்வாழவும், நிலை இல்லா இன்பம் தருவதுமான இகலோக வாழ்வின் தேவை குறித்து நினைவு கொண்டு இருப்பவர்களுக்கு நிலைத்த இன்பம் தருவதும், பேரின்பமும் ஆன முக்தி இல்லை. அணுமுதல் அண்டம் வரை எங்கும் எவ்விடத்தும் எக்காலத்திலும் நிறைந்து இருக்கும் பரம்பொருள் எனப்படும் ப்ரமத்தினை சோதி வடிவாக அங்கத்துள் (உபதேசித்தப்படி) சூட்சமமாக பார்ப்பாயாக