வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 33


உமை

பித்ரு யாகம் பற்றியும், அது செய்யத்தக்க காலம் பற்றியும், அதை எவ்வாறு செய்வது என்பது பற்றியும் அதைச் சொல்லக்கடவீர்.

மகேஸ்வரர்

பித்ருக்கள் புண்ணியர்களாகவும், தேவர்களுக்கும் மேலானவர்களாகவும், அனைவரும் பூஜிக்கத் தக்கவர்களாகவும், எப்பொழுதும் பிரகாசம் உடையவர்களாகவும்,  தென் திசையைச் சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

புவியில் உள்ள உயிர்கள் மழையை எதிர்ப்பார்த்து காத்திருப்பது போல் பித்ருக்கள் உலகில் நடக்கும் சிராத்தத்தினை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.  குரு ஷேத்திரம், கயை, கங்கை, சரஸ்வதி நதிக்கரைகள் சிராத்தத்திற்கு உரியவை. இங்கு செய்யும் சிராத்தம் பெரும் பயன் தரும். புண்ணியதிருத்தலங்களும், புண்ணிய நதிக்கரைகளும், மனிதர்கள் அற்ற வனங்களும், ஆற்று மணல் நிறைந்த இடங்களும் சிராத்தத்திற்கு உரித்தான இடங்களாகும். மாசி புரட்டாசி மாதங்கள், தேய்பிறை ஆகிய கிருஷ்ணபட்சம், அமாவாசை, திரயோதசி, நவமி ஆகிய திதிகளில் சிராத்தம் செய்யத்தக்க காலங்கள் ஆகும். முற்பகல், வளர்பிறை, இரவுப்பொழுது, ஜன்ம நட்சத்திரம், இரட்டித்த திதிகள் போன்றவற்றை சிராத்தம் செய்ய விலக்க வேண்டும்.

பித்ருயாகத்தின் குற்றங்கள் திலத்தினால் விலகும். பச்சைபயறு, உளுந்து போன்ற தானியங்களால் பித்ருக்குகள் திருப்தி அடைவர். பசுவின் நெய், பாயசத்தினால் ஒருவருடமும், எள்ளோடு சேந்த பாயசம், தேன் போன்றவற்றால் பன்னிரெண்டு வருட காலமும் திருப்தி அடைவார்கள். சிராத்தம் செய்யப்படும் இடத்தில் வெளிப்படையாகவும், ரகசியாகவும் பேசுதல் கூடாது.

புத்திரனை விரும்புவன் ‘பித்ருக்களே, தாமரை மாலை அணிந்த குமாரனை கர்பத்தில் அருளுங்கள்‘ என்று செபித்து நடு பிண்டத்தை மனைவியை உண்ணச் செய்ய வேண்டும்.

இவைகளை தினம், ஒவ்வொரு மாதம், வருடத்திற்கு நான்குமுறை, வருடத்திற்கு இருமுறை என்ற வகையில் தன் சக்திக்கு தகுந்த அளவில் செய்யலாம்.

இந்த பித்ரு யாகங்கள் பகைவர்களை கெடுத்து, குலத்தைப் பெருக்கும் என்பதால் மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆரோக்கியம் உடையவவர்களாகவும், சந்ததி உடையவவர்களாகவும், தனதான்யம் உடையவவர்களாகவும் இருப்பார்கள்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

error: Content is protected !!