அமுதமொழி – பிலவ – சித்திரை – 9 (2021)


பாடல்

உற்றாரை யான்வேண்டேன்
   ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
   கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங்
   கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
   கசிந்துருக வேண்டுவனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – புறத்தில் ஏற்படும் பற்றுக்களை விரும்பாமல் ஈசனுடைய திருவடி மீது மட்டும் பற்றுதலை கொள்ள வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற, கூத்தப் பெருமானே! சுற்றத்தாரை யான் வேண்ட மாட்டேன்; வாழ்வதற்காக  ஊரை யான் வேண்ட மாட்டேன்; புகழ்ச்சியினை யான் வேண்ட மாட்டேன்; நூல்களைக் கற்று அந்த நெறிபடி நில்லாத கற்றவரை யான் வேண்ட மாட்டேன்; உனது ஒலிக்கின்ற கழலையுடைய திருவடி மீது கன்றையுடைய பசுவினது மனத்தைப் போல  பற்றுக் கொண்டு கனிந்து உருகுவதை யான் உன்பால் விரும்புகின்றேன்

விளக்கஉரை

  • வேண்டேன் – விரும்பமாட்டேன்
  • கற்றார் – கல்வியைமட்டும் கற்று, அதன் பயனை அறியாதவர். கற்பன – கற்கத் தகும் நூல்கள்
  • குரை கழல் – ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடி
  • கற்றா – கன்று ஆ; கன்றையுடைய பசு

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.