அமுதமொழி – பிலவ – சித்திரை – 21 (2021)


பாடல்

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – இறைவன் எல்லாவற்றையும் ஒடுக்கும் ஆற்றலுடையவன் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

‘தோழியே! சுடுகாட்டை வழிபாட்டுக்கு உரிய இடமாகிய கோயிலாகவும், புலித்தோலை நல்ல ஆடையாக கொண்டவனாகவும், அவனுக்குத் தாய் தந்தை என்று யாரும் இல்லாதவனாக தனியனாகவும் இருக்கிறான், இந்தத் தன்மை உடையவனோ உங்கள் கடவுள்? இது பெருமை ஆகுமா?’ என்ற தோழியின் கேள்விக்கு ‘எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தையர் இல்லாவிடினும், தனித்தே அவன் இருந்தாலும் அவன் சினம் கொண்டால்  உலகம் முழுவதும் கற்பொடியாய் விடும்’ என்று ஊமையாக இருந்து  மாணிக்கவாசகரால் பேசும் திறமைப் பெற்றப் பெண் விடை சொன்னாள்.

விளக்க உரை

  • சாழல் என்பது மகளிர் விளையாடல்களுள் ஒன்று; இரண்டு கட்சியாய்ப் பிரிந்து விளையாடுவது. இந்த விளையாட்டில் ஒருவரின் பாடலுக்கு மற்றொருவர் அவர்கள் அக்கேள்விக்கு விடை சொல்வதுமாய் அமையும்
  • கோயில் – அரண்மனை
  • நல்லாடை – உயர்ந்த உடை
  • தாயும் இலி தந்தையும் இலி தான் தனியன் – எவரும் இல்லாத   துணையில்லாத தனிமையன் எனும் இகழ்ச்சி
  • காயில் – வெகுண்டால்
  • அவன் சினந்து எழுந்தால் அதற்கு முன் நிற்பது ஒன்றுமில்லை என்பதால், அவனுக்குத் துணை வேண்டுவது எதற்கு என்பது விடை
  • தாயும் இலி தந்தை இலி – பிறப்பற்றவன்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.