அமுதமொழி – விகாரி – ஆடி – 28 (2019)


பாடல்

மூலம்

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே

சொற் பிரிப்பு

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் பெருமைகளை எல்லாக் காலங்களிலும் ஓத வேண்டியது குறித்து அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினை, அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினை, பிராப்தம் ஆகிய நிகழ்கால வினை, ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினை ஆகிய எல்லா வினைகளையும் அழித்து, இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் இருந்து பேரின்ப வீடாகிய முக்தியை தர வல்லதுமான கூர்மையான வேலினை ஏந்திய திருமுருகப் பெருமானின் புகழினைக் கூறும் பாடல்களை எழுத்துப் பிழைகள் சிறிதுமின்றி கற்றுக் கொள்ளாமலும், ஓதாமலும் இருக்கின்றீர்களே! நெருப்பு மூண்டு எரிவதைப் போல தன்னுடைய கண்களை உருட்டி, புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் நம்மை நோக்கி வீசும் வீசுகின்ற பாசக் கயிறு கொண்டு நம் கழுத்தில் சுருக்கு விழும்படி செய்து நம் உயிரைப் பறிக்கும் நாளிலா முருகனின் புகழைக் கூறும் பாடல்களைக் கற்க(ஓத) இயலும்?

விளக்க உரை

  • எழுத்துப் பிழையறக் கற்கின்றி – பேசா எழுத்து – ‘ஓம்’ என்பதே பிரணவம். இதுவே அசபை என்னும் பேசா எழுத்தும், ஊமை எழுத்தும் ஆகும். இதுவே வாசி. முருகன் பிரணவ வடிவில் இருப்பதை குற்றம் இல்லாமல் உணரவேண்டும்.இதற்கு வேறு விளக்கங்களும் அருளப்பட்டு இருக்கின்றன. ஆன்றோர் அறிந்து உய்க

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 21 (2019)


பாடல்

கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த
     கரமுரஞ் சிரநெரிந் தலற
அடர்த்ததோர் விரலால் அஞ்செழுத் துரைக்க
     அருளினன் தடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள்
     பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி
     மிழலையா னெனவினை கெடுமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துபாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதி இராவணன் தன்  துன்பத்தில் இருந்து நீங்கியது குறித்தப் பாடல்.

பதவுரை

கோபம் கொண்டவனும், வாளேந்தியவனும் அரக்கன் ஆனவனுமான இராவணன் முன்னொரு காலத்தில் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்டபோது அவன் கரமும், சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவரான சிவபெருமான் இராவணன் தன் தவறு உணர்ந்து அஞ்செழுத்தை உரைத்து யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார்; அவ்வாறான சிவபெருமான் நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்களும் அவர்களுடன் வேதம் பயிலும் சிறுவர் குழாமும் ஓதும் மறைகளை ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓதும் படியும் விரிந்த சோலைகளையுடையதும் ஆன திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகிறார். அந்த திருத்தலத்து இறைவனின் திருநாமத்தை ஓத, வினையாவும் கெடும்.

விளக்க உரை

  • விடைக்குலம் – வேதம் பயிலும் சிறுவர் குழாம்
  • கடுத்த – சினத்த

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 24 (2019)


பாடல்

வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே 

வராகி மாலை

கருத்து – வாலை புவனை திரிபுரை மாலயன் தேவர் ஆகியவர்களால் எக்காலத்திலும் வணங்கத்தக்கவள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

அணிமா, லகிமா, மகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எட்டு சித்திகளையும் அளிப்பவளும் பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்ணாக இருப்பவளும், சத்திபேதங்களுக்குள் ஒன்றான வாலையால் காலையில் வணங்கப்படுபவளாகவும், பார்வதி என்று அழைக்கப்படும் புவனையால் மாலையில் வணங்கப்படுபவளாகவும், திரிபுரசுந்தரி என்றும் அழைக்கபடுபவளும் உச்சி வேளையில் வணங்கப்படுபவளாகவும் இருக்கும் திரிபுரையால் வணங்கப்படுபவளுமாக இருக்கும் வராகியின் ஆலயத்திற்கு சென்று அவளது அன்பில் தோய்ந்து திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்களும் பாடி துதிக்கின்றார்கள்.

விளக்க உரை

  • வாலை – பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண், சத்திபேதங்களுளொன்று, திராவகம் வடிக்கும் பாண்டம், சுத்தம், பாதரசம், சித்திராநதி
  • புவனை – பார்வதி
  • உன்னுதல் – நினைத்தல், பேச வாயெடுத்தல், எழும்புதல், முன்னங்கால் விரலையூன்றி நிமிர்தல்
  • வாலை புவனை திரிபுரை ஆகியவர்களால்  எக்காலத்திலும் (காலை, மாலை, உச்சி ஆகிய பொழுதுகளில்) வணங்கப்படுபவளாக இருப்பவள் என்றும் மற்றொரு பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. குருவருள் கொண்டு அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 23 (2019)


பாடல்

வங்கம் கலிங்கம் குலுங்கம் தெலுங்கம் மராடம்முதல்
எங்கெங்கும் போக இடர்வரும் போதும் இனிமையுடன்
அங்கங்கு நீ துணை யாய்வரு வாய்அந்தி வான்மதியம்
தங்கும் சடாடவி யாய்காழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துதூர தேசம் செல்கையில் ஏற்படும் துயர் ஏற்படாமல் காக்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

அந்தி வானத்தைபோல் இருப்பதான ஒளிரும் பிறை சந்திரனை  தன்னுடைய சடைமுடியில் தாங்குபவனும் காழிப்பதியில் உறைபவனும் ஆன ஆபதுத் தாரணனே! வங்காளதேசம், கலிங்கம் (தற்கால ஒரிஸ்சா, குலுங்கம் (தற்கால  கோவாக இருக்கலாம்) ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகள்), தெலுங்கம்  (தற்கால  ஆந்திரா ), மராடம் (தற்கால  மகாராஷ்ட்ரா) ஆகிய தேசங்களில் எந்த திசை சென்ற போதும் அங்கு ஏற்படுவதாகிய இடர் எனும் துயர் நீங்க மிக்க மகிழ்வுடன் அனைத்து இடத்திலும் எனக்கு துணையாக நீ வருவாய்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 22 (2019)


பாடல்

நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த்
தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் – அற்புதம்போல்
ஆனா அறிவாய் அளவிறந்து தோன்றானோ
வானே முதல்களையின் வந்து

திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்

கருத்துஅசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குணம் என்பதாகிய எண் குணம் உடையவனும், அழுக்கு எனும் குற்றங்கள் அற்றவன் ஆனவனும், எக்காலத்திலும் துன்பமற்றவனும், மேம்பட்டதான பரம் பொருள் ஆனவனும் படைப்பில் முதல் முதலில் தோன்றிய ஆகாயமே அசத்து என்று சுட்டறிவினைக் கொண்டு அறியும் பொருளாய்  கொண்ட அறிவினைக் கடந்து சூன்யப் பொருள் போல் தோன்றி, (குருவருளால்) சுட்டறிவதால் உண்டாகும் தன்னறிவினால் நீங்காமல் நிலை பெறுவதாகிய சோதி வடிவாய் (அகத்தில்) விளங்கிக் தோன்றுவான்.

விளக்க உரை

  • தற்பரம் தனக்குப் பரமென விரியும்.
  • சூனியமாய்த் தோன்றினாலும் அது அற்புதம் போல் வந்தது
  • தனி முதல்வன் – உலகியல் விடுத்து அதைக் கடந்து அதற்கும் காரணாய் இருக்கும் ஞானத் தன்மைப் பற்றியது.
  • பிரபஞ்சம் நிலைப்பு தன்மை உடையது அல்ல எனும் பேருண்மையினையும், அசத்தாய் உள்ள உலகினைக் அறிய ஞான வடிவமாகியவனே அருளிச் செய்ய இயலும் என்றும், அசத்து நிலையுடைய பொருள்கள் தன் சொருபத்தை காட்டாது மறைத்து நிற்கும் இயல்பு உடையது; இது நிலைப்பு தன்மை உடையது என்று அறிய உணர்த்துவது ஞான சொருபமாகிய பதி ஞானம் என்று சுப்பிரமணிய தேசிகர் உரையில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 15 (2019)


பாடல்

மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும்
தோளும் ஆகமும் துவளு முன்னூல் முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்

பன்னிரெண்டாம் திருமுறை – சேக்கிழார் – திருநாவுக்கரசு நாயனார் புராணம்

கருத்துதிருநாவுக்கரசரை திருக்கயிலாய மலையில் இருந்து திரும்பிச் செல்ல உரைத்தலும், திருநாவுக்கரசர் அதற்கு மறுதலித்ததையும் கூறும் பாடல்.

பதவுரை

‘இந்தக் கயிலாய மலையிலிருந்து திரும்பிச் செல்லுதலே  உன்னுடைய கடமை’  திகழும் தோள்களை உடையவரும்,  மார்பினினில்  துவள்கின்ற முப்புரி நூலையுடைய முனிவரான இறைவர் உரைத்தார்; என்னை ஆள்பவனாகவும், எனக்கு தலைவனாகவும் இருக்கும் சிவபெருமான்  வீற்றிருக்கும் திருக்கயிலையில் இருக்கும் காட்சி காணாமல், என்றேனும் மடியப்போகும் இந்த உடலால் தமக்கு எதுவும் நட்டம் எதுவும் இல்லை, ஆதலால் இவ்வுடலுடன் கயிலைக் காட்சி காணாமல் திரும்பிச் செல்லமாட்டேன் என்று திருநாவுக்கரசர் மறுத்தார்

விளக்க உரை

  • திருநாவுக்கரசர் திருவையாற்றில் கயிலை காட்சி கண்ட நாள் (ஆடிமாதம் அமாவாசை திருநாள்)
  • ஆகம் – உடல், மார்பு, மனம், சுரை
  • மாளுதல்  – சாதல், அழிதல், கழிதல், இயலுதல்
  • மீளும் – கயிலையில் இருந்து திரும்பிச் செல்லுதல்

Loading

சமூக ஊடகங்கள்

தேவதை சூழ் உலகு


நாளொன்றின்
நீண்ட பகல் பொழுதினை
களைப்பாக்கி
கதவைத் திறக்கையில்
கவனித்து இருங்கள்.
பூங்கொத்துகளுடன்
தேவதை
அப்பாபாபாபா
எனவும் ஓடிவரலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 14 (2019)


பாடல்

காரண னாகித் தானே கருணையால் எவையும் நல்கி
ஆருயிர் முழுது மேவி அனைத்தையும் இயற்றி நிற்கும்
பூரண முதல்வன் மைந்தன் போதகம் அளித்து மாற்றிச்
சூரனை மயக்கஞ் செய்யுஞ் சூழ்ச்சியோ அரிய தன்றே

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசிவனின் எண் குணங்களில் சிலவற்றை எடுத்துக் கூறி அவனின் குமாரரான நீ மயக்கம் செய்தல் ஆகாது என பழிப்பது போல் புகழும் பாடல்.

பதவுரை

இந்த உலகம், உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் காரணமாக இருப்பவனும், பிறர் தூண்டுதல் இன்றி தன்னுடைய கருணையால் அனைத்தையும் கொடுத்து, மிகவும் நேசத்துக்கு உரிய அனைத்து உயிர்கள் இடத்திலும் பொருந்தி நின்று அனைத்தையும் சிருட்டித்தலை செய்பவன் ஆனவனும், முழுமையானதாகிய பூரணத்துவத்துடன் இருப்பவனுமான சிவபெருமானின் குமாரன் ஆகிய முருகப் பெருமான அறிவுரை கூறி அசுர குணங்களை மாற்றி, சூரனை மயக்கம் செய்யும் சூழ்ச்சி மிகவும் அரிதானது.

விளக்க உரை

  • போதகம் – யானையின் இளங்கன்று, அறிவுரை கூறுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 13 (2019)


பாடல்

மாடில்லான் வாழ்வும் மதியில்லான் வாணிபம்நன்
னாடில்லான் செங்கோல் நடத்துவதும் – கூடும்
குருவில்லான் வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லான் வீடும் விழல்

ஔவையார் தனிப்பாடல்கள் – ஔவையார்

கருத்துகுரு இல்லாமல் வித்தைகளை கற்க இயலாது என்பதை கூறும் பாடல்.

பதவுரை

நடத்த இயலாதவைகள் என்று கூறத் தக்கதான செல்வம் இல்லாமல் வாழ்வினை நடத்துதல், மதி நுணுக்கங்கள் அறியாமல் வாணிபம் செய்யும் திறமை, செங்கோல் இல்லாமல் நல்ல நாட்டினை வழி நடத்துதல் போன்றவைகளை அவைகள் இல்லாமல் கூட செயல்படுத்த இயலும். ஆனால் குரு இல்லாமல் வித்தைகளை கற்பது, குணமில்லாத பெண்ணோடு வாழ்வது, விருந்து வராத வீட்டில் வாழ்வது ஆகியவைகள் விவசாயத்திற்கு உதவா நிலம் போன்றது ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 12 (2019)


பாடல்

தாண்டவ! தில்லைத் தமனிய மன்றுள் தரணியெலாம்
ஆண்டவ! அங்க மனைத்தும் தலையேன் பரவவனி
பூண்டவ! காண்டகு மாயூர நாத! புகழ்பரந்து
நீண்டவ! நீண்டவன் நேரயன் நேடொனா நீர்மையனே

மாயூர நாதர் அந்தாதி – முத்துஸ்வாமி ஐயர்

கருத்துமாயூரநாதரின் பெருமைகளைக் கூறி வணங்கும் பாடல்.

பதவுரை

பெருவடிவம் எடுத்து நீண்டவனான திருமாலும், அவர் சென்ற திசைக்கு எதிர் திசையில் சென்ற பிரம்மனும் கண்டறியா இயலா தன்மை கொண்டவனே, தில்லையில் பொற்சபையில் இருந்து கொண்டு தரணி எல்லாம் தாண்டவம் ஆடுபவனேஊன் எனப்படுவதும் அங்கம் அனைத்தும் தலைகளை மாலையாக அணிந்து கொண்டு ஆள்பவனே, காடு போன்றதான இடத்தில் இருக்கும் மாயூர நாத! உன்னுடைய புகழானது பரந்தும் நீண்டும் காணப்படுவதாக இருக்கிறது.

விளக்க உரை

  • தமனியம் – பொன்
  • என்பு – எலும்பு
  • நேர் அவன் – அவனை ஒத்த பிரமன்
  • நேடு – தேடு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 11 (2019)


பாடல்

தரணிதனில் அறுபத்து அறுகோடி தீர்த்தமும்
   சரவ ணத்துள் அடக்கம்
சாற்றுமோர் எழுகோடி மந்திரங் களுமுன்
   சடாக்ஷ ரத்துள் அடக்கம்
விரதமிகு நவகோடி சித்தர்களும் உனதுசுப
   வீக்ஷணத் தனில் அடக்கம்
மேலான தேவால யங்களும்உன் ஆறுபடை
   வீட்டி னிற்குள் அடக்கம்
இரவிமுதல் முப்பது முக்கோடி தேவருமுன்
   இதயக் கமலத் தடக்கம்
ஈரேழு புவனமுதல் அண்டங்கள் பலவும்உன்
   இடத்தினில் அடக்கம் ஐயா
வரிசைமிகு பக்தஜன பரிபால னாமோக
   வள்ளி குஞ்சரி மணாளா
வனசமலர் அயன்மதனை அருள்சரச கோபாலன்
   மருகச ரவண முருகனே

பேரின்பக் கீர்த்தனைகள் – ஸ்ரீ கவி குஞ்சரபாரதி

கருத்து – புவனங்களும், அண்டங்களும், புவனியில் இருக்கும் தீர்த்தங்களும், ஏழுகோடி மகா மந்திரங்களும், ஒன்பது கோடி சித்தர்களும், அனைத்து தேவாலயங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் முருகன் உள்ளே அடக்கம் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

பக்தர்களை பாதுகாக்கவும் அவர்களை ஆதிக்கம் செய்யவும் வள்ளி தெய்வானையுடன் வருபவனே, தாமரை மலர் மீது வீற்றிருக்கும் நான்முகன் ஆகிய பிரம்மாவிற்கு  அருளுபவனும், இனிய குணம் கொண்டவனும், உண்மையைப் பேசுபவனுமான கோபாலனின் மருமகனே, சரவண முருகனே!  இந்த தரணியில் இருப்பதாக கூறிப்படும் அறுபத்து அறுகோடி தீர்த்தங்களும் சரவணத்துள் பணிவுடன்  அடங்கி இருக்கின்றன; மெய்யறிவினைத் தரத்தக்கதும், பிறவா நிலையை ஏற்படுத்தும் ஆனதும், எண்ணிக்கையில் கூறும்போது ஏழுகோடி மகா மந்திரங்கள் ஆனவைகள் சடாசர மந்திரத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; மிகுந்த விரத்தினை உடையவர்கள் ஆன ஒன்பது கோடி சித்தர்களும் உன்னுடைய சுபப் பார்வை தனில் பணிவுடன்  அடங்கி இருக்கின்றனர்; மேலானவைகள் என்று எந்த எந்த கோயில்கள் குறிப்பிடப்படுகின்றனவோ அவைகள் எல்லாம் உன்னுடைய படை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய வீடுகளில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; ஆதித்தியனை முதலாவதாக கொண்ட படைக்கப்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும்* உன்னுடைய இருதய கமலத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றனர்; பூமியை முன்வைத்து மேல் ஏழும், கீழ் ஏழும் இருக்கும் புவனம் முதல் அண்டங்கள் பலவும் உன்னிடத்தில் நிலைபெற்று இருக்கின்றன.

விளக்க உரை

  • சித்தர்களுக்கு தலைவனாகவும், ஆதி அந்தம் அற்றவனாகவும் இருப்பதால் உடலினை முன்வைத்து ஆறு ஆதாரங்களும் தலைவன் என்று யோக மரபின் உரைப்பது உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சாற்றுதல் – சொல்லுதல், விளம்பரப்படுத்தல், விற்றல், நிறைத்தல், அடித்தல், உணர்த்துதல்
  • பரிபாலனம் – பாதுகாப்பு, மேற்பார்வை செய்தல், மேலாதிக்கம் செய்தல், ஆட்சி செய்தல்
  • குஞ்சரி – பெண் யானை, முருகக்கடவுளின் தேவியான தெய்வயானை
  • வனசமலர் – தாமரை
  • *
  1. ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள் – விஷ்ணு, தாதா, மித, ஆர்யமா, ஷக்ரா, வருண, அம்ஷ, பாக, விவாஸ்வான், பூஷ, ஸவிதா, தவாஸ்தா
  2. வசு நிலையில் 8 பிரிவுகள் – தர, த்ருவ, சோம, அனில,  அனல, ப்ரத்யுஷ, ப்ரபாஷ
  3. ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள் – ஹர, பஹூரூப, த்ரயம்பக, அபராஜிதா, ப்ருஷாகாபி, ஷம்பூ, கபார்தி, ரேவாத், ம்ருகவ்யாத, ஷர்வா, கபாலி
  4. மற்றும் அஷ்வினி குமாரர்கள் (2)
  5. ஆக மொத்தம் = 33 வகையான தெய்வங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 10 (2019)


பாடல்

நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே

வராகி மாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்து – பலவிதமான துன்பங்களுக்கு எதிர்ப்புக் கட்டு (சத்ருசம்ஹாரம்) வராகி அம்மனே என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

புது மலரில் பெருகிய தேனைப் போல இனிமையான வாராகி தேவியை மனதில் இருத்தி, வாழ்த்தி வழிபாடு செய்யாததால் பலவகையிலும் அழிவு ஏற்பட்டு மரணத்திற்கு நிகரான அளவில் நாசம் அனுபவிப்பவித்தல், நாசத்தின் காரணமாக ஏற்படும் இழப்பு, பயம், துன்பம், கவலை, அவமானம் என்று நடுங்குதல், நமனாகிய எமன் தனது கயிற்றினை வீசும் போது அது பற்றி கவலைப்படுதல், இகழ்ந்து வையப்படுதல், களங்கம் ஏற்பட்டு தாழ்வு கொண்டு அவமானப்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றது.

விளக்க உரை

  • நாசம் – அழிவு, பாழ், மரணம்
  • இழுக்கு – அவமானம். நிந்தை, களங்கம்; வழு, தாழ்வு, பொல்லாங்கு, மறதி, வழுக்கு நிலம்
  • காலம் 16-ஆம் நூற்றாண்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 9 (2019)


பாடல்

ஆச்சப்பா உட்கருவி முப்பத்தாறும்
   அப்பே சிவத்தினுட கூறேயாச்சு
நீச்சப்பா புறக்கருவி அறுவதுதான்
   நிசமான சக்தியுட கூறேயாச்சு
பேச்சப்பா உள்வெளியும் நன்றாய்ப் பார்த்து
   பெருமையுடன் ஆதார நிலையுங் கண்டு
காச்சப்பா கருவி கரணாதி என்று
   காடான தத்துவத்தைக் கண்டு தேரே

சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்து – 96 தத்துவங்கள் சிவ சக்தி ரூபமாக இருப்பதை அகத்தியர் புலத்தியருக்குக் கூறும் பாடல்.

பதவுரை

உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும் மெய்ஞ்ஞானத்தின் எண்ணக் கருக்களில் சைவநெறியினை முன்னிறுத்தி கூறப்படும் தத்துவங்கள் உணர்த்துவதாகிய 96 தத்துவங்களில் அககருவிகளான 36 தத்துவங்கள் சிவனின் கூறுகள் ஆகும்; செயல்பட்டு அறிவை ஏற்படுத்தும் புறக்கருவிகளான 60  தத்துவங்கள் உண்மையில் செயல்படும்  சக்தியின் கூறுகள் ஆகும்;  ஆகாயம் என்பதும், பெருவெளி என்பதும் ஆன ஆதார நிலை ஆகிய இந்த சூட்சுமத்தை குருவின் மூலமாக நன்கு அறிந்தும் உணர்ந்தும் கருவிகளையும் கரணங்கள் எனப்படும் மனத்தில் மாறுபாடுகளையும் பக்குவப்படுமாறு செய்ய வேண்டும்;  உடல் கருவிகளும் உயிர் கருவிகளும் கொண்டு மேலே கூறப்பட்டவாறு பக்குவப்படுமாறு செய்தால் காடு போல் வழிதவறி உலகில் உழலச் செய்யும் தத்துவங்களை அறிந்து அதில் இருந்து தேறலாம்.

விளக்க உரை

  • சாங்கிய யோகத்தில் 24 தத்துவங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆன்றோர் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 8 (2019)


பாடல்

விரித்த பல்கதிர் கொள்சூலம், வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒன்டிரு மணிவாய் விள்ள
சிறிதருள் செய்தோர் சேரிச் செந்நிறச் செல்வனாரே

தேவாரம் – நான்காம் திருமுறை –  திருநாவுக்கரசர்

கருத்து – சிவபெருமான் கால பைரவர் வடிவம் தாங்கி வந்ததை குறிப்பிடும் பாடல்.

பதவுரை

திருச்சேறை எனும் திருத்தலத்தில் செம்மை நிறம் கொண்டு அதை இருப்பிடமாக உடையவனாக  சிவபெருமான், விரிந்த சூரியனை போன்று பல கதிர்களை கொண்ட ஒளியுடைய சூலம், இடி முழக்கம் போல சப்தம் எழுப்புவதான டமருகம் (உடுக்கை), தலையில் கங்கை ஆகியவை கொண்டு அழகிய கால பைரவர் வடிவம் தரித்து வேழ வடிவில் வந்த அசுரனின் தோலை உரித்தார்; அதை கண்டு அஞ்சிய உமையவளை நோக்கி தனது மணிவாய் மலர்ந்து தோன்றுமாறு அட்டகாசமாய் சிரித்தார்.

விளக்க உரை

  • தேவாரத்தில் கால பைரவர் பெயர் வரும் ஓரே பாடல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உய்க.
  • விள்ளுதல் – மலர்தல்; உடைதல்; வெடித்தல்; பிளத்தல்; பகைத்தல்; மாறுபடுதல்; தெளிவாதல்; நீங்குதல்; சொல்லுதல்; வெளிப்படுத்துதல்; வாய் முதலியன திறத்தல்; புதிர்முதலியனவிடுத்தல்
  • வெடி – துப்பாக்கி அல்லது குண்டு வெடி;வேட்டு, ஓசை, இடி, கேடு, அச்சம், நிமிர்ந்தெழுகை, தாவுகை, நறும்புகை, பட்டாசு, கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 7 (2019)


பாடல்

போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த தான
தூயதோர் தோளுங் கண்ணுந் துடித்தன புவன மெங்கும்
மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு கின்ற விண்ணோர்
நாயகன் வடிவங் கண்டேன் நற்றவப் பயனீ தன்றோ

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்து – சூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமானின் தோற்றப் பொலிவை உரைத்து இது பல காலம் செய்த தவப்பயன் என்று கூறும் பாடல்.

பதவுரை

நான், எனது எனும் அகங்காரம் கொண்டிருந்த எனது அகந்தை போனது; அதன் காரணமாக என்னுள் பேரறிவாகிய ஞானம் புகுந்தது; வலப்பக்கத்தில் இருக்கக்கூடிய தூய்மையான தோளும், வலது கண்ணும் துடித்தன; புவனம் முழுமைக்கும் சஞ்சரிக்கும் பொருள்களின் மாயைத் தன்மை நீங்கி தேவர்களுக்கு எல்லாம் நாயகன் ஆன நாயகன் வடிவம் கண்டேன்; இது பலகாலம் நல்ல தவம் செய்து அதனால் பெறுவதற்குரிய நற்தவத்தின் பயன் அல்லவா இது? என்று சூரபத்மன் உரைத்தான்

விளக்க உரை

  • யுத்த காண்டம் , சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
  • எம்பெருமான் தன்னுடைய பேரெழில் கொண்ட திருக்கோலத்தினைக் காட்டிக்கொண்டு முன்வந்து நிற்கும் பாக்கியம் அவனுடைய பகைவனாகிய, மாபாவியாகிய எனக்கும் கிடைத்ததே” என்று இறைவனுடைய கருணையை எண்ணி ஆச்சரியம் கொள்கிறான்.
  • போதம் – ஞானம், அறிவு
  • மேய்தல் – விலங்கு முதலியன உணவுகொள்ளுதல், பருகுதல், கெடுத்தல், அபகரித்தனுபவித்தல், மேற்போதல், சஞ்சரித்தல், விடனாய்த் திரிதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 6 (2019)


பாடல்

பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
சுத்தமெய்ஞ் ஞானவொளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே

திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை –  வள்ளலார்

கருத்து – திருஒற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடை நாயகியின் பெருமைகளை கூற அவளே அருள் புரிய வேண்டும் என்று கூறும் பாடல்.

பதவுரை

திருஒற்றியூரில் விளக்கும் தூயவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் மயிலே,வடிவுடை மாணிக்கமே, பக்தர்கள் உள்ளத்தில் என்னும் போற்றுதலுக்கு உரித்தானதான அழகானக் கோயிலில் வாழ்கின்ற மேலான பரதேவதையே, தூயதானதும்,  மெய்ஞானமானதும் ஆன அறிவொளிப் பிழம்பே, மெய்ஞான அறிவினால் பெறப்படுவதான சுகவாழ்வின் ஆனந்தமே! தினமும் உன் பெருமை மிக்க புகழைச் சொல்ல எனக்கு அருள் புரிய வேண்டும்.

விளக்க உரை

  • பத்தர்-பக்தர்
  • மேவும்-வாழ்கின்ற
  • சித்-அறிவு
  • எற்கு-எனக்கு
  • நின்மலர்-தூயவர்
  • உன் மத்தர்-பித்தர், சிவப்பரம்பொருள்
  • வாமம்-இடப்பக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 5 (2019)


பாடல்

குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய்
   காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி யுண்டோதான்
   உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
   பிறைசேர் சடையாய் முறையோஎன்று
அழைத்தால் அருளா தொழிவதே
   அம்மா னேஉன் னடியேற்கே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – வினை பற்றி நின்று, அடிமையாகிய யான் பிழை செய்தால் அதனைப் பொறாது ஒழிதலும், முறையோ என்று அழைத்தால் கேளா தொழிதலும் தலைவனாகிய உனக்குப் பொருந்துவனவோ என்று கூறும் பாடல்.

பதவுரை

உடையவனே, உமை அம்மையின் தலைவனே, என்னை என்றும் ஆள்பவனே, பிறை சேர்ந்த அணிந்த சடையை உடையவனே, தலைவனே! பழையதும், கொடியதும் ஆன வினையாகிய நோய் என்னை வருத்தும்போது காப்பதற்கு உரித்தானவன்; அவ்வாறான கொடுமையான வினையை உடையேன் ஆகிய நான் முயற்சி செய்து அந்த வினைகளை விலக்கி அதன் பொருட்டு நன்மை பெற இயலுமோ? நான் வினைகளுக்கு உட்பட்டு பிழை செய்தால் அதனை மன்னித்துக் காக்க வேண்டாமோ?  நீ இவ்வாறு செய்வது முறையோ என்று உன்னை ஓலமிட்டு அழைத்தால் உன் அடியானாகிய எனக்கு, நீ அருள் செய்யாது போவது தகுதியோ?

விளக்க உரை

  • குழைத்தல் – குழையச் செய்தல், ஒன்றாய்க் கலத்தல், தழையச் செய்தல், திரட்டுதல், இளகுவித்தல், வளைத்தல், அசைத்தல்
  • குழைத்தால் – உன் உள்ளம் குழையுமாறு இரந்து வேண்டுதல்
  • காவாய் – வந்து சாராதபடி தடுத்தருள்
  • உறுதி உண்டோ – உனக்காயினும், எனக்காயினும் யாதேனும் நன்மை உண்டோ
  • அருளாதொழிவதே – கருணை செய்யாதுவிடுதல் பொருந்துவதோ

Loading

சமூக ஊடகங்கள்

பின்னம்


புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு.ஐயப்ப மாதவன்

நிராகரிக்கப்படவனை
நீங்கள் அத்தனை எளிதில் காண இயலாது

ஒருவேளை வானம் பார்த்து
பீடியை புகைப்பவனாக இருக்கலாம்;
மனைவி, இரு குழந்தைகளோடு நீண்ட நேரம்
இறையை வணங்க வரிசையில் காத்திருப்பவனாக இருக்கலாம்;

எவர் எவரோ வீசிச் சென்ற உணவு பொட்டலங்களை எடுத்து
சரிநிகர் சமானமாக நாயோடு உண்ணுபவனாக இருக்கலாம்;
அங்காடியில் விலைகளைப் பார்த்து பொருள்களை
அதனதன் இடத்தில் வைப்பவனாக இருக்கலாம்;

கருமை நிற மேனி கொண்டு,அழுகிய உடலோடு
காலம் கடத்துபவனாக இருக்கலாம்;
மனைவியின் கண்களைப் பார்த்து பேசியபடி
கடற்கரையில் பட்டாணி உண்பவனாக இருக்கலாம்;

மதுபானக் கடைகளில் தனித்து இசையைத் தவிர்த்து
மதுகோப்பைகளை நீண்ட நேரம் உற்றுப் பார்பவனாக இருக்கலாம்;
இருளினை உள்வாங்கி பேரொலியையும் பேரொளியையும்
சிந்திப்பவனாக இருக்கலாம்;

நிராகரிக்கப்படவனை நீங்கள் காண இயலும் கணத்தில்
அவனிடம் இருந்து நீங்கள் பெறுவதற்கு
பேரன்பு அன்றி வேறொன்றுமிராது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 4 (2019)


பாடல்

செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்க ளூழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஊழ்வினை அறுத்தலேயன்றி, சிவஞானத்தை மிகுவிக்கும் நல்வினைகள் விளையா என்பதையும் அதனை அளிப்பர்  திருப்பேரெயில் தலத்து இறைவர் என்பதையும் விளக்கும் பாடல்.

பதவுரை

திருப்பேரெயில் தலத்து இறைவர் மேருமலையை வில்லாக்கி முப்புரங்களை அழியச் செய்வார்; பல தீர்த்தங்களை உண்டாக்கி அளித்தும், அதில் தன் அன்பர்களை நீராடுமாறும் செய்பவர்;  பல பத்தர்களின் ஊழ்வினைகளை அறுப்பது மட்டுமின்றி அவர்கள்  நல்வினை பெறும்படியும் செய்பவர் ஆவார்.

விளக்க உரை

  • சோழநாடு காவிரித் தென்கரையில் அமைந்திருக்கும் திருப்பேரெயில் எனும் திருத்தலம் பற்றி எழுதப்பட்டது. (தற்போதைய பெயர் – ஓகைப்பேரையூர், வங்காரப் பேரையூர்)
  • செறுத்தல் – அடக்குதல், தடுத்தல், நெருக்குதல், உள்ளடங்கச் செய்தல், நீர் முதலியன அடைத்தல், தூர்த்தல், சினத்தல், வெறுத்தல், வெல்லுதல், கொல்லுதல்
  • சிலையால் – இமயவில்லால்
  • மதில் – முப்புரங்கள்
  • அறுவிப்பார் – நீங்கச் செய்பவர்

Loading

சமூக ஊடகங்கள்

2038 -Artificial Muscle


  • Crystalline ‘artificial muscle’ makes paper doll do sit-ups
  • Researchers have given a foil “paper doll” the ability to move and do sit-ups with a new material called polymer covalent organic frameworks (polyCOFs).
  • Scientists make conventional COFs by linking simple organic building blocks, such as carbon-containing molecules with boric acid or aldehyde groups, with covalent bonds.
  • Research team made a doll containing the membrane as the waist and aluminum foil as its other parts. Upon exposure to ethanol vapors, the doll sat up; when the vapors were withdrawn, it laid down.

Source : https://www.sciencedaily.com/releases/2019/07/190717105309.htm

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

  1. புருசன் (அலுவலகத்தில்) : இவ ரொம்ப அடிக்கிறா, என்ன செய்யலாம், வீட்டுக்கு லேட்டா போகலாமா, மீட்டிங்ன்னு சொல்லி ஆபீஸ்லய தங்கிடலாமா? ,ம்ஹூம் இதெல்லாம் சரிபட்டு வராது. செயற்கை தசையில ஒரு பொம்ம செஞ்சி வச்சிட வேண்டியது தான்.(9.01.01 PM)
  2. மனைவி (இல்லத்தில்) : நீ நெனக்கிற மாதிரி எல்லாம் செய்ய முடியாது. அதுக்கு National Natural Science Foundation of China, Tianjin Natural Science Foundation of China and the National Science Foundation எல்லா எடத்தில் இருந்தும் நிதி வாங்கனும். அதுக்கு நீ சரிபட்டு வரமாட்ட. (9.01.01 PM). குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது
  3. ஜிம்முக்கு போக அலுப்பா இருக்கு. மாஸ்டர் ரொம்ப சிட் அப் செய்ய சொல்றார். பேசாம செயற்கை தசையில ஒரு பொம்ம செஞ்சி அனுப்பி வச்சிட வேண்டியது தான்.
  4. மச்சான் நீயும் தான் comsi final year படிக்கிற. பேசாம ஏதாவது செயற்கை தசையில ஒரு பொம்ம செஞ்சி ப்ராக்சி அட்டடெண்ஸ் வாங்க முடியுமா?
    இல்லடா, இப்பத்தான் #include<stdio.h> எழுத கத்துகிட்டு இருக்கேன்.
  1. உணவகத்தில்

ஏனுங்க, என்னங்க, இன்னைக்கு ஏதாவது புதுசா இருக்கா சாப்பிட.
இருக்கு சார், செயற்கை தசைல செஞ்சி கொஞ்சம் மிளகாய் பொடி தடவி, கொத்தமல்லி அதான் உங்களுக்கு புரியாதே தனியா போட்டு அரைச்சி மிளகு போட்டு…
ஒரு பிளேட் கொண்டாடா..(இவன் ரொம்ப பேசறான்)

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!