
பாடல்
வங்கம் கலிங்கம் குலுங்கம் தெலுங்கம் மராடம்முதல்
எங்கெங்கும் போக இடர்வரும் போதும் இனிமையுடன்
அங்கங்கு நீ துணை யாய்வரு வாய்அந்தி வான்மதியம்
தங்கும் சடாடவி யாய்காழி யாபதுத் தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
கருத்து – தூர தேசம் செல்கையில் ஏற்படும் துயர் ஏற்படாமல் காக்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
அந்தி வானத்தைபோல் இருப்பதான ஒளிரும் பிறை சந்திரனை தன்னுடைய சடைமுடியில் தாங்குபவனும் காழிப்பதியில் உறைபவனும் ஆன ஆபதுத் தாரணனே! வங்காளதேசம், கலிங்கம் (தற்கால ஒரிஸ்சா, குலுங்கம் (தற்கால கோவாக இருக்கலாம்) ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகள்), தெலுங்கம் (தற்கால ஆந்திரா ), மராடம் (தற்கால மகாராஷ்ட்ரா) ஆகிய தேசங்களில் எந்த திசை சென்ற போதும் அங்கு ஏற்படுவதாகிய இடர் எனும் துயர் நீங்க மிக்க மகிழ்வுடன் அனைத்து இடத்திலும் எனக்கு துணையாக நீ வருவாய்.