
பாடல்
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே
வராகி மாலை – வீரை கவிராச பண்டிதர்
கருத்து – பலவிதமான துன்பங்களுக்கு எதிர்ப்புக் கட்டு (சத்ருசம்ஹாரம்) வராகி அம்மனே என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
புது மலரில் பெருகிய தேனைப் போல இனிமையான வாராகி தேவியை மனதில் இருத்தி, வாழ்த்தி வழிபாடு செய்யாததால் பலவகையிலும் அழிவு ஏற்பட்டு மரணத்திற்கு நிகரான அளவில் நாசம் அனுபவிப்பவித்தல், நாசத்தின் காரணமாக ஏற்படும் இழப்பு, பயம், துன்பம், கவலை, அவமானம் என்று நடுங்குதல், நமனாகிய எமன் தனது கயிற்றினை வீசும் போது அது பற்றி கவலைப்படுதல், இகழ்ந்து வையப்படுதல், களங்கம் ஏற்பட்டு தாழ்வு கொண்டு அவமானப்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றது.
விளக்க உரை
- நாசம் – அழிவு, பாழ், மரணம்
- இழுக்கு – அவமானம். நிந்தை, களங்கம்; வழு, தாழ்வு, பொல்லாங்கு, மறதி, வழுக்கு நிலம்
- காலம் 16-ஆம் நூற்றாண்டு