
பாடல்
வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே
வராகி மாலை
கருத்து – வாலை புவனை திரிபுரை மாலயன் தேவர் ஆகியவர்களால் எக்காலத்திலும் வணங்கத்தக்கவள் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
அணிமா, லகிமா, மகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எட்டு சித்திகளையும் அளிப்பவளும் பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்ணாக இருப்பவளும், சத்திபேதங்களுக்குள் ஒன்றான வாலையால் காலையில் வணங்கப்படுபவளாகவும், பார்வதி என்று அழைக்கப்படும் புவனையால் மாலையில் வணங்கப்படுபவளாகவும், திரிபுரசுந்தரி என்றும் அழைக்கபடுபவளும் உச்சி வேளையில் வணங்கப்படுபவளாகவும் இருக்கும் திரிபுரையால் வணங்கப்படுபவளுமாக இருக்கும் வராகியின் ஆலயத்திற்கு சென்று அவளது அன்பில் தோய்ந்து திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்களும் பாடி துதிக்கின்றார்கள்.
விளக்க உரை
- வாலை – பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண், சத்திபேதங்களுளொன்று, திராவகம் வடிக்கும் பாண்டம், சுத்தம், பாதரசம், சித்திராநதி
- புவனை – பார்வதி
- உன்னுதல் – நினைத்தல், பேச வாயெடுத்தல், எழும்புதல், முன்னங்கால் விரலையூன்றி நிமிர்தல்
- வாலை புவனை திரிபுரை ஆகியவர்களால் எக்காலத்திலும் (காலை, மாலை, உச்சி ஆகிய பொழுதுகளில்) வணங்கப்படுபவளாக இருப்பவள் என்றும் மற்றொரு பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. குருவருள் கொண்டு அறிந்து உய்க.