
பாடல்
விரித்த பல்கதிர் கொள்சூலம், வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒன்டிரு மணிவாய் விள்ள
சிறிதருள் செய்தோர் சேரிச் செந்நிறச் செல்வனாரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – சிவபெருமான் கால பைரவர் வடிவம் தாங்கி வந்ததை குறிப்பிடும் பாடல்.
பதவுரை
திருச்சேறை எனும் திருத்தலத்தில் செம்மை நிறம் கொண்டு அதை இருப்பிடமாக உடையவனாக சிவபெருமான், விரிந்த சூரியனை போன்று பல கதிர்களை கொண்ட ஒளியுடைய சூலம், இடி முழக்கம் போல சப்தம் எழுப்புவதான டமருகம் (உடுக்கை), தலையில் கங்கை ஆகியவை கொண்டு அழகிய கால பைரவர் வடிவம் தரித்து வேழ வடிவில் வந்த அசுரனின் தோலை உரித்தார்; அதை கண்டு அஞ்சிய உமையவளை நோக்கி தனது மணிவாய் மலர்ந்து தோன்றுமாறு அட்டகாசமாய் சிரித்தார்.
விளக்க உரை
- தேவாரத்தில் கால பைரவர் பெயர் வரும் ஓரே பாடல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உய்க.
- விள்ளுதல் – மலர்தல்; உடைதல்; வெடித்தல்; பிளத்தல்; பகைத்தல்; மாறுபடுதல்; தெளிவாதல்; நீங்குதல்; சொல்லுதல்; வெளிப்படுத்துதல்; வாய் முதலியன திறத்தல்; புதிர்முதலியனவிடுத்தல்
- வெடி – துப்பாக்கி அல்லது குண்டு வெடி;வேட்டு, ஓசை, இடி, கேடு, அச்சம், நிமிர்ந்தெழுகை, தாவுகை, நறும்புகை, பட்டாசு, கள்