
பாடல்
செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்க ளூழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – ஊழ்வினை அறுத்தலேயன்றி, சிவஞானத்தை மிகுவிக்கும் நல்வினைகள் விளையா என்பதையும் அதனை அளிப்பர் திருப்பேரெயில் தலத்து இறைவர் என்பதையும் விளக்கும் பாடல்.
பதவுரை
திருப்பேரெயில் தலத்து இறைவர் மேருமலையை வில்லாக்கி முப்புரங்களை அழியச் செய்வார்; பல தீர்த்தங்களை உண்டாக்கி அளித்தும், அதில் தன் அன்பர்களை நீராடுமாறும் செய்பவர்; பல பத்தர்களின் ஊழ்வினைகளை அறுப்பது மட்டுமின்றி அவர்கள் நல்வினை பெறும்படியும் செய்பவர் ஆவார்.
விளக்க உரை
- சோழநாடு காவிரித் தென்கரையில் அமைந்திருக்கும் திருப்பேரெயில் எனும் திருத்தலம் பற்றி எழுதப்பட்டது. (தற்போதைய பெயர் – ஓகைப்பேரையூர், வங்காரப் பேரையூர்)
- செறுத்தல் – அடக்குதல், தடுத்தல், நெருக்குதல், உள்ளடங்கச் செய்தல், நீர் முதலியன அடைத்தல், தூர்த்தல், சினத்தல், வெறுத்தல், வெல்லுதல், கொல்லுதல்
- சிலையால் – இமயவில்லால்
- மதில் – முப்புரங்கள்
- அறுவிப்பார் – நீங்கச் செய்பவர்