
பாடல்
குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி யுண்டோதான்
உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோஎன்று
அழைத்தால் அருளா தொழிவதே
அம்மா னேஉன் னடியேற்கே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – வினை பற்றி நின்று, அடிமையாகிய யான் பிழை செய்தால் அதனைப் பொறாது ஒழிதலும், முறையோ என்று அழைத்தால் கேளா தொழிதலும் தலைவனாகிய உனக்குப் பொருந்துவனவோ என்று கூறும் பாடல்.
பதவுரை
உடையவனே, உமை அம்மையின் தலைவனே, என்னை என்றும் ஆள்பவனே, பிறை சேர்ந்த அணிந்த சடையை உடையவனே, தலைவனே! பழையதும், கொடியதும் ஆன வினையாகிய நோய் என்னை வருத்தும்போது காப்பதற்கு உரித்தானவன்; அவ்வாறான கொடுமையான வினையை உடையேன் ஆகிய நான் முயற்சி செய்து அந்த வினைகளை விலக்கி அதன் பொருட்டு நன்மை பெற இயலுமோ? நான் வினைகளுக்கு உட்பட்டு பிழை செய்தால் அதனை மன்னித்துக் காக்க வேண்டாமோ? நீ இவ்வாறு செய்வது முறையோ என்று உன்னை ஓலமிட்டு அழைத்தால் உன் அடியானாகிய எனக்கு, நீ அருள் செய்யாது போவது தகுதியோ?
விளக்க உரை
- குழைத்தல் – குழையச் செய்தல், ஒன்றாய்க் கலத்தல், தழையச் செய்தல், திரட்டுதல், இளகுவித்தல், வளைத்தல், அசைத்தல்
- குழைத்தால் – உன் உள்ளம் குழையுமாறு இரந்து வேண்டுதல்
- காவாய் – வந்து சாராதபடி தடுத்தருள்
- உறுதி உண்டோ – உனக்காயினும், எனக்காயினும் யாதேனும் நன்மை உண்டோ
- அருளாதொழிவதே – கருணை செய்யாதுவிடுதல் பொருந்துவதோ