அமுதமொழி – விகாரி – ஆடி – 11 (2019)


பாடல்

தரணிதனில் அறுபத்து அறுகோடி தீர்த்தமும்
   சரவ ணத்துள் அடக்கம்
சாற்றுமோர் எழுகோடி மந்திரங் களுமுன்
   சடாக்ஷ ரத்துள் அடக்கம்
விரதமிகு நவகோடி சித்தர்களும் உனதுசுப
   வீக்ஷணத் தனில் அடக்கம்
மேலான தேவால யங்களும்உன் ஆறுபடை
   வீட்டி னிற்குள் அடக்கம்
இரவிமுதல் முப்பது முக்கோடி தேவருமுன்
   இதயக் கமலத் தடக்கம்
ஈரேழு புவனமுதல் அண்டங்கள் பலவும்உன்
   இடத்தினில் அடக்கம் ஐயா
வரிசைமிகு பக்தஜன பரிபால னாமோக
   வள்ளி குஞ்சரி மணாளா
வனசமலர் அயன்மதனை அருள்சரச கோபாலன்
   மருகச ரவண முருகனே

பேரின்பக் கீர்த்தனைகள் – ஸ்ரீ கவி குஞ்சரபாரதி

கருத்து – புவனங்களும், அண்டங்களும், புவனியில் இருக்கும் தீர்த்தங்களும், ஏழுகோடி மகா மந்திரங்களும், ஒன்பது கோடி சித்தர்களும், அனைத்து தேவாலயங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் முருகன் உள்ளே அடக்கம் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

பக்தர்களை பாதுகாக்கவும் அவர்களை ஆதிக்கம் செய்யவும் வள்ளி தெய்வானையுடன் வருபவனே, தாமரை மலர் மீது வீற்றிருக்கும் நான்முகன் ஆகிய பிரம்மாவிற்கு  அருளுபவனும், இனிய குணம் கொண்டவனும், உண்மையைப் பேசுபவனுமான கோபாலனின் மருமகனே, சரவண முருகனே!  இந்த தரணியில் இருப்பதாக கூறிப்படும் அறுபத்து அறுகோடி தீர்த்தங்களும் சரவணத்துள் பணிவுடன்  அடங்கி இருக்கின்றன; மெய்யறிவினைத் தரத்தக்கதும், பிறவா நிலையை ஏற்படுத்தும் ஆனதும், எண்ணிக்கையில் கூறும்போது ஏழுகோடி மகா மந்திரங்கள் ஆனவைகள் சடாசர மந்திரத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; மிகுந்த விரத்தினை உடையவர்கள் ஆன ஒன்பது கோடி சித்தர்களும் உன்னுடைய சுபப் பார்வை தனில் பணிவுடன்  அடங்கி இருக்கின்றனர்; மேலானவைகள் என்று எந்த எந்த கோயில்கள் குறிப்பிடப்படுகின்றனவோ அவைகள் எல்லாம் உன்னுடைய படை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய வீடுகளில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; ஆதித்தியனை முதலாவதாக கொண்ட படைக்கப்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும்* உன்னுடைய இருதய கமலத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றனர்; பூமியை முன்வைத்து மேல் ஏழும், கீழ் ஏழும் இருக்கும் புவனம் முதல் அண்டங்கள் பலவும் உன்னிடத்தில் நிலைபெற்று இருக்கின்றன.

விளக்க உரை

 • சித்தர்களுக்கு தலைவனாகவும், ஆதி அந்தம் அற்றவனாகவும் இருப்பதால் உடலினை முன்வைத்து ஆறு ஆதாரங்களும் தலைவன் என்று யோக மரபின் உரைப்பது உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • சாற்றுதல் – சொல்லுதல், விளம்பரப்படுத்தல், விற்றல், நிறைத்தல், அடித்தல், உணர்த்துதல்
 • பரிபாலனம் – பாதுகாப்பு, மேற்பார்வை செய்தல், மேலாதிக்கம் செய்தல், ஆட்சி செய்தல்
 • குஞ்சரி – பெண் யானை, முருகக்கடவுளின் தேவியான தெய்வயானை
 • வனசமலர் – தாமரை
 • *
 1. ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள் – விஷ்ணு, தாதா, மித, ஆர்யமா, ஷக்ரா, வருண, அம்ஷ, பாக, விவாஸ்வான், பூஷ, ஸவிதா, தவாஸ்தா
 2. வசு நிலையில் 8 பிரிவுகள் – தர, த்ருவ, சோம, அனில,  அனல, ப்ரத்யுஷ, ப்ரபாஷ
 3. ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள் – ஹர, பஹூரூப, த்ரயம்பக, அபராஜிதா, ப்ருஷாகாபி, ஷம்பூ, கபார்தி, ரேவாத், ம்ருகவ்யாத, ஷர்வா, கபாலி
 4. மற்றும் அஷ்வினி குமாரர்கள் (2)
 5. ஆக மொத்தம் = 33 வகையான தெய்வங்கள்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

2 thoughts on “அமுதமொழி – விகாரி – ஆடி – 11 (2019)”

 1. தங்களுக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.
  இயன்ற வரையில் முயற்சி செய்து அனுப்புகிறேன்.

 2. அன்பையும்!
  பேரின்ப கீர்த்தனைகளின் பாகமான இப்பாடலை தினந்தோரும் என் பாட்டி அமைக்கும்போது, நான் சிறு வயதில் கேட்டிருக்கிறேன்.
  இன்று இங்கு கண்டு பெருமகிழ்ச்சி கொண்டேன். இதனை முழுமையாக அறிந்து கொள்ள விழைகிறேன். தங்களால் முயன்றால், எனக்கு அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *