
பாடல்
மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும்
தோளும் ஆகமும் துவளு முன்னூல் முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்
பன்னிரெண்டாம் திருமுறை – சேக்கிழார் – திருநாவுக்கரசு நாயனார் புராணம்
கருத்து – திருநாவுக்கரசரை திருக்கயிலாய மலையில் இருந்து திரும்பிச் செல்ல உரைத்தலும், திருநாவுக்கரசர் அதற்கு மறுதலித்ததையும் கூறும் பாடல்.
பதவுரை
‘இந்தக் கயிலாய மலையிலிருந்து திரும்பிச் செல்லுதலே உன்னுடைய கடமை’ திகழும் தோள்களை உடையவரும், மார்பினினில் துவள்கின்ற முப்புரி நூலையுடைய முனிவரான இறைவர் உரைத்தார்; என்னை ஆள்பவனாகவும், எனக்கு தலைவனாகவும் இருக்கும் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலையில் இருக்கும் காட்சி காணாமல், என்றேனும் மடியப்போகும் இந்த உடலால் தமக்கு எதுவும் நட்டம் எதுவும் இல்லை, ஆதலால் இவ்வுடலுடன் கயிலைக் காட்சி காணாமல் திரும்பிச் செல்லமாட்டேன் என்று திருநாவுக்கரசர் மறுத்தார்
விளக்க உரை
- திருநாவுக்கரசர் திருவையாற்றில் கயிலை காட்சி கண்ட நாள் (ஆடிமாதம் அமாவாசை திருநாள்)
- ஆகம் – உடல், மார்பு, மனம், சுரை
- மாளுதல் – சாதல், அழிதல், கழிதல், இயலுதல்
- மீளும் – கயிலையில் இருந்து திரும்பிச் செல்லுதல்