
பாடல்
மூலம்
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே
சொற் பிரிப்பு
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானின் பெருமைகளை எல்லாக் காலங்களிலும் ஓத வேண்டியது குறித்து அறிவுறுத்தும் பாடல்.
பதவுரை
உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினை, அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினை, பிராப்தம் ஆகிய நிகழ்கால வினை, ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினை ஆகிய எல்லா வினைகளையும் அழித்து, இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் இருந்து பேரின்ப வீடாகிய முக்தியை தர வல்லதுமான கூர்மையான வேலினை ஏந்திய திருமுருகப் பெருமானின் புகழினைக் கூறும் பாடல்களை எழுத்துப் பிழைகள் சிறிதுமின்றி கற்றுக் கொள்ளாமலும், ஓதாமலும் இருக்கின்றீர்களே! நெருப்பு மூண்டு எரிவதைப் போல தன்னுடைய கண்களை உருட்டி, புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் நம்மை நோக்கி வீசும் வீசுகின்ற பாசக் கயிறு கொண்டு நம் கழுத்தில் சுருக்கு விழும்படி செய்து நம் உயிரைப் பறிக்கும் நாளிலா முருகனின் புகழைக் கூறும் பாடல்களைக் கற்க(ஓத) இயலும்?
விளக்க உரை
- எழுத்துப் பிழையறக் கற்கின்றி – பேசா எழுத்து – ‘ஓம்’ என்பதே பிரணவம். இதுவே அசபை என்னும் பேசா எழுத்தும், ஊமை எழுத்தும் ஆகும். இதுவே வாசி. முருகன் பிரணவ வடிவில் இருப்பதை குற்றம் இல்லாமல் உணரவேண்டும்.இதற்கு வேறு விளக்கங்களும் அருளப்பட்டு இருக்கின்றன. ஆன்றோர் அறிந்து உய்க