பாடல் 1
உரிப்பொருள் : கணபதி தம்பியான முருகனின் தரிசனம் கண்டது
மூலம்
அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே
சொற் பிரிப்பு
அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே
பதவுரை
திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் “தட, பட” என்ற ஒலியுடன் தங்கள் தலையில் குட்டிக் கொண்டும், அவர்கள் படைக்கும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும், “இச்சை, கிரியை, ஞானம்” என்னும் மும்மதங்களையும் கும்பத்தலங்களாக கொண்டிருப்பவருமான யானை முகத்தினை உடையவரான திருவிநாயகப் பெருமானின் இளையோனும், களிறு போன்றவனும் ஆகிய திருமுருகப் பெருமானின் தரிசனத்தை வலிமை உடைய அருணை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை கோயிலின் கோபுர வாயிலுக்கு வடக்குப் பக்கத்தில் சென்று கண்டுகொண்டேன்.
விளக்க உரை
- அடல்-வீரம்.
- திரு-திருமகள் விலாசம்
- கடம்-மதம்.
- தடம்-மதம் பிறக்கும் இடம்.