உமை
புண்ணியம் செய்யும் மனிதர்களைப் பற்றி கேட்க விரும்புகிறேன். அவர்களுக்கு எப்படிப்பட்ட உலகங்கள் படைக்கப்பட்டு இருக்கின்றன? அவர்கள் அந்த உலகங்களில் போகங்களை எவ்வாறு அனுபவிக்கின்றனர்?
மகேஷ்வரர்
பத்ராசுவம், கேதுமாலம், உத்திர குருஷேத்ரம், ஜம்புவனம் முதலிய ஸ்வர்கங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் யோஜனை தூரம் உடையது. அந்த உலகங்களில் எக்காலமும் பூக்களும் பழங்களும் இருக்கின்றன. அவைகள் பொன் நிறத்தில் இருக்கின்றன. பழங்கள் பொன்றமானவை. தடாகங்கள் தாமரை மலர்களால் மூடப்பட்டு இருக்கின்றன.
*யோஜனை தூரம் – தோராயமாக 6 – 15 கி.மீ. பொதுவில் 150 கி.மீ மேல்
அந்த தேசம் அழகாகவும், பூக்கள் நிரம்பியதாகவும் இருக்கின்றது.புண்ணியம் செய்தவர்கள் புண்ணிய பலன் எது வரையில் இருக்கின்றதோ அதுவரையில் அங்கே எல்லோரோடும் சேர்ந்து இருப்பார்கள்.அவ்விடத்தில் பிறந்தவர்கள் புண்ணியமுள்ள வரையில் போகங்களை அனுபவித்து புண்ணியம் கழிந்தவுடன் தேகம் விடுகின்றனர்.முந்திய புண்ணிய கர்மத்தின் பலனாக சிறந்த மனிதர்களாக பிறப்பு எடுக்கின்றனர். இது வரையில் ஸ்வர்க்க கதியைச் சொன்னேன்.
எட்டு புண்ணிய உலகங்களைச் சொல்கிறேன் கேள். அவைகள் ஒன்றுக் கொன்று மேலானவைகள்; போகங்கள் நிறைந்தவை; சுகங்கள் தருபவை. வித்தியாதரலோகம், கிம்புருஷலோகம், யஷலோகம், கந்தர்வலோகம், கின்னரலோகம், அப்ஸ்ரஸுகளின் லோகம், தானவ லோகம், தேவ லோகம் என சொல்லப்பட்டு இருக்கின்றன.புண்ணிய கர்மங்களைச் செய்து அங்கு வசிப்பவர்களாகிய அவர்கள் மனிதர்களுக்கு மேம்பட்ட செல்வம் படைத்தவர்களாக இருக்கின்றனர். அவ்விடங்களில் மூப்பும், பிறப்பும் இறப்பும் காணப்படுகின்றது.