அமுதமொழி – குரோதி – ஆனி – 29 (2024)


பாடல்

அங்கமே பூண்டாய்! அனல் ஆடி(ன்)னாய்!
     ஆதிரையாய்! ஆல் நிழலாய்! ஆன் ஏறு ஊர்ந்தாய்!
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய்!
     பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்!
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச்
     சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச்
சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன்-திருப்
     புகலூர் மேவிய தேவதேவே!

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துதிருப்புகலூர் தலத்து இறைவனின் பெருமைகளை உரைத்து தனக்கு முக்தி பேறு வேண்டிய பாடல்.

பதவுரை

திருப்புகலூர் தலத்தில் உறையக்கூடியவனாகவும், தேவர்களுக்கு எல்லாம் மேலான தேவனாக இருப்பவனாகவும், பல சதுர் யுகங்கள் ஆண்ட பிரம்மனது எலும்புகளை அணிகலனாக‌ப் பூண்டவனாகவும், தீயின் வடிவமாக இருப்பவனும், திருவாதிரை நட்சத்திரத்தினை கொண்டவனும், கல்லால் மர நிழலில் அமர்ந்தவனும், காளையை வாகனமாகக் கொண்டவனும், குற்றம் இல்லாத கங்கையினை தனது பரந்த சடையில் கொண்டவனும், பாம்பிற்கும் திங்களுக்கும் ஆன பகையினை தீர்த்து ஆண்டவனும், தேவர்களால் வேண்டப்பட்ட பொழுதினில் எவ்விதமான சலனமும் இன்றி சமுத்திரத்தில் தோன்றிய நஞ்சினை உண்டபோதும்  சாதலும் மூப்பும் இல்லாத சிங்கம் போன்றவனே! உன் திருவடிக்கே வருகின்றேன், என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • அங்கம் – எலும்பு
  • ஆதிரையாய் – திருவாதிரை
  • பங்கம் – குறை
  • சங்கை – பிறிதோர் எண்ணம்.
  • மூவா – கெடாத

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருப்புகலூர்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *