மருவி நின்ற தலமதுதான் விசுத்திவீடு
மகத்தான அறுகோணம் நன்றாய்ப்போட்டு
திருவிந்த அறுகோணஞ் சுத்திநல்ல
தீர்க்கமுடன் பதினாறு இதழ்தான் போட்டு
குருவிருந்த கோட்டை வெகு கருப்பாய் நிற்குங்
குணமான அக்கோட்டை நடுவிலேதான்
உருவறிந்து விந்திட்டு ஓங்காரஞ் சுத்தி
உத்தமனே வங் கிலி யங்கென்று போடே
அகத்தியர் சௌமிய சாகரம் – அகத்தியர்
கருத்து – விசுத்தி பற்றிக் கூறும் பாடல்.
பதவுரை
அறுகோணம் அல்லது ஷட்கோணத்தைக் கொண்ட இந்த விசுத்தி சக்கரத்தைச் சுற்றி பதினாறு இதழ்கள் போடவேண்டும். அதன் மத்தியில் பிந்துவும் அதைச் சுற்றி ஓம்காரமும் போடவேண்டும். அதனுடன் வங் கிலி யங் என்று எழுதவேண்டும். கரியநிறத்தில் இருக்கும் இந்த சக்கரத்தை குருவின் கோட்டை என்று அழைக்கிறார். சிவனின் கரிய கழுத்து இதைத்தான் குறிக்கிறது.
விளக்கஉரை
- ஆறு ஆதாரங்களில் ஒன்றான விசுத்தியை குறிப்பது.. இதன் வடிவம் அறுகோணம் பஞ்சாட்ஷரத்தில் “வ” என்ற எழுத்து.
- சிவ சக்தி சொரூப ஐக்கியம். நடுவில் பிந்து. சிவன்(3), சக்தி(3). இரண்டும் சேர்ந்து ஷட்கோணம்(அறுகோணம்)
- திருத்தணி, திருப்பதி, திருவாலங்காடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சோளிங்கர் ஆகிய 6 கோவில்களுக்கு மத்தியில் இருப்பதால் அறுகோணம் (தற்போது அரக்கோணம்)
- எல்லாப் பயனையும் தருவது எந்திரங்களில் தலைமையகிய புவனாபதிச் சக்கரத்தின் திருவடியாகும். அதனை அறிந்து, அவள் மந்திரத்தைக் குருவால் பெற்று அதனை உடம்பில் நிறுத்திப் பயிலவும், ஆன்மா உடலில் மந்திரத்தாத்துவாக நிலைக்க உறுப்புக்களைச் சிவனின் அங்கங்களாகக் கருதி பிறவி வேர் நீங்குமாறு செப்புத் தகட்டில் அறுகோணம் அமைக்க வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார்.
ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.
#அகத்தியர் #சித்தர் #சௌமிய_சாகரம் #விசுத்தி #அமுதமொழி, #சித்த(ர்)த்_துளிப்பு, #சித்தர்_பாடல்கள்